Tuesday, 1 July 2014

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி   - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை  இப்பதிவில்  பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"


எனக்கு நன்றாக நிணைவிருக்கிறது - எனது சிறுவயதில், எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் தாயார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது,  என்னை  சற்று உற்றுப்பார்த்த  மருத்துவர், சற்றே யோசித்தவராக எனது இரு கண்களின் கீழ் இமைகளையும் ஒவ்வொன்றாக கீழிழுத்துப்பார்த்து, உடனேயே சொன்னார் "பையன் உடம்பிலே ரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதான பரிசோதனை! உடனடி report!!


நமது உடலில்  இரத்தத்தின் அளவு குறைந்திருக்குமேயனால், கல்லீரலில், அவசரத்தேவைக்காக சேமித்து வைக்கப்படும் இரத்தத்தின் அளவும் அதே விகிதத்தில் குறைந்து விடும்.

கண்களின் கீழிமையை சற்று கீழிழுத்துப்பார்க்கும் போது தெரியும் உட்பகுதியில் நாம் காணும் சிகப்பு நிறத்தின் அடர்த்தி,  உடலின் இரத்த அளவினைக்காட்டும் "meter" ஆக விளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம், போதுமான இரத்தம் நமது உடலில் இருப்பதையும், வெளிறிய சிகப்பு நிறம்  உடலில் இரத்தம் குறைவாக இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

கண்ணின் வெண்விழிப்படலத்தில் தெரியும் மஞ்சள் நிறம், கல்லீரல் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர் வடிதல் ஆகியவை கல்லீரல் நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படுவதை அவ்வப்போது நமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கும் சுவைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில் "மரம்" மூலகத்தின் சுவை இயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்புச்சுவை அளவோடு இருக்க வேண்டும். ஏறக்குறைய இருப்பின்  "மரம்" மூலகத்தின் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் அமிலச்சுவை அதிகரிப்பதின் காரணமாக உடலின் அனைத்து இணைப்பு பாகங்களிலும் வலி ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின் இணைப்பு பாகங்களில் மிகுந்த வலியினால் அவதிப்படுபவர்கள், நிச்சயமாக  அதிகமாக புளிப்புச்சுவை மிகுந்த உணவில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்பு சுவை அதிகம் சேராமல் கவனத்துடன் இருப்பார்களேயானால்,  நிச்சயமாக மருந்துகளின் உதவியின்றி, படிப்படியாக வலியிலிருந்து  விடுபட அதிக வாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினை பித்தப்பையில் சேமித்து வைத்து பயன் படுத்துகிறது.  பித்தநீரின் மிக முக்கியமான பணியாகிய கொழுப்பு ஜீரணம் சரிவர நடைபெறாமல் தடைபட்டுப்போகும் நேரத்தில், பச்சை நிற "பித்தப்பை கற்கள்" பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்போதும், அல்லது சிறுகுடலில் வைரஸ்  தாக்குதல் ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும், பித்தநீரானது சிறுகுடலினுள் செல்ல வழியின்றி, மேலேறி இரைப்பையை அடையும்போது, இரைப்பையானது பித்தநீரினை சகித்துக்கொள்ளும் திறன் இல்லாததால் பித்தநீரை, பச்சைநிற பித்தவாந்தியாக வெளியேற்றுகிறது. 

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், குளோரபில் அல்லது இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட மருந்துகள் ஏதும் சேராதபோது, திடக்கழிவில் பச்சை நிறம் காணப்பட்டால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அதிவேக செயல்பாட்டினை உணர்த்துகிறது

Monday, 23 June 2014

"மரம்" - மூலகம்: தொடர்ச்சி - உட்புற இணைஉறுப்பு : பித்தப்பை GALL BLADDER

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை  ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன

உட்புற இணை உறுப்பு :   பித்தப்பை  GALL BLADDER - அக்குபஞ்சர் குறியீடு "GB" 

கல்லீரலின் அடிப்பக்கத்தில் அமைந்துள்ள பித்தப்பையானது சுமார் 50 முதல் 60 மில்லி லிட்டர் மட்டுமே  கொள்ளளவு உடையது.

கல்லீரலானது  பித்தநீரினை சுரந்து பித்தப்பையில் சேமிக்கிறது. பச்சை  நிறமான காரத்தன்மையுடையதான பித்தநீர், நாளொன்றுக்கு சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர்  வரை  சுரக்கப்படுகிறது.

கல்லீரல் ஓரளவு தொடர்ச்சியாக பித்தநீரினை சுரந்து கொண்டிருந்தாலும், பித்தப்பையானது, நாம் உணவு எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது இரைப்பையில் அரைக்கப்பட்ட உணவு முன்சிறுகுடலில்  நுழையும் போதோதான் பித்தநீரினை சிறுகுடலுக்கு அனுப்பித்தருகிறது.

சுமார் 50 அல்ல்து 60 மி.லி. கொள்ளளவே கொண்ட  பித்தப்பை கல்லீரலிலிருந்து தொடர்ச்சியாக  பெறப்படும் சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர் வரையான பித்த நீரை சேமித்து வைத்து பயன்படுத்த  வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் பெறக்கூடிய பித்தநீரின் அடர்த்தியை  10 முதல் 15 மடங்கு  வரை அதிகரித்து சேமித்து வைத்து தேவைப்படும்போது அதனை நீர்த்து பயன்படுத்துகிறது.

பித்தப்பையானது,  பித்தநீரை சிறுக்குடலுக்கு அனுப்பும்போது "மியூசின்" (musin) எனும்  திரவச்சுரப்பினையும் சேர்த்து அனுப்புகிறது. இந்த மியூசின் அரைக்கப்பட்ட  உணவு சிறுகுடலில் எளிதாக  தடையின்றி நகர்ந்து செல்ல எண்ணைப்பசை (lubricant) போல செயல்படுகிறது.

பித்தநீரானது 89 சதவீகிதம் நீரும், மீதம் 11 சதவிகிதத்தில்  பித்த உப்புக்கள், பித்த நிறமிகள், மியூசின்  போன்ற கரிம (organic) பொருட்களும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பை-கார்போனேட்  போன்ற  கனிம (inorganic) திடப்பொருட்களும் கொண்டதாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் கொழுப்பு ஜீரணத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் உருண்டைகளாக உருவாகும் கொழுப்பினை நுண்ணிய துகள்களாக உடைத்து கூழ் போன்று  திரவநிலைக்கு மாற்றி, சிறுகுடல் உறிஞ்சத்தக்கதாக மாற்றித்தருகின்றன.

சிறுகுடலின், peristatic movement எனப்படும் சுருங்கி விரியும் தன்மையை ஊக்குவித்து,  உணவுத்  திரவக்கூழின் சிறுகுடல் பயணத்தை எளிதாக்குகின்றன.

மேலும், பித்தநீரின் திரவத்தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கச் செய்கின்றன.

சிதைக்கப்பட்ட இரத்த சிக்கப்பணுக்களிலிருந்து பெறப்பட்ட பிலிருபின் - bilirubin - மனித உடலின் முக்கியமான  பித்த நிறமியாகின்றது. நமது மல, நீர்க்  கழிவுகளில் தெரியும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக அமைவது  இந்த பிலிருபின்தான்.

கல்லீரலின் செயல்திறனில் குறைபாடு ஏற்படுவதன் காரணமாக தோன்றும் நோய்களின் போது, பிலிருபின் இரத்ததில் அதிகமாக கலந்துவிட நேருவதால், மலம், சிறுநீர் மற்றும் கண்ணின் வெண்விழிப்படலம் ஆகியவற்றில் தோன்றும் மஞ்சள் நிறம், நோய்த்தாக்கத்தை நமக்கு உணர்த்தும் வகையில் பிலிருபினின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
 
கொழுப்பினை ஜீரணிக்க அத்தியாவசியமான பித்தநீரினை முறையாக பயன்படுத்தும் வகையில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் அமையவில்லையெனில், பித்தப்பையில் அளவுக்கு அதிகமாக பித்தநீர், சேர்ந்துவிடும்

இறுகிய பித்தநீர், கற்களாக மாறி பித்தப்பையினை வெடித்துவிடச்செய்யும் அளவுக்கு மோசமான நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.



                                                       வருமுன் காப்போம் . 


Thursday, 12 June 2014

பஞ்ச பூதங்கள் : "மரம்" - மூலகம் - உள்ளுறுப்பு " கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் - LIVER - அக்குபஞ்சர் குறியீடு "LIV"

நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியாக விளங்கும் -LIVER - எனப்படும் கல்லீரல், நமது உடலின் "இரசாயனத் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, நமக்கு அன்றாடம் தேவைப்படும் பலவித  உயிர்ச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து தயாரித்துத் தரும் முக்கிய பணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம் நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறதோ, அதேபோன்று, கல்லீரலானது நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களையும் நமது உடலின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பித்தருகிறது. தவிர, தான் வெட்டப்பட்டாலும், மீண்டும் முழுமையாக வளர்ந்துவிடக்கூடிய தன்மையுடையதாய் விளங்குவதால், கல்லீரல் மரம் மூலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்து பணிகளைப்பற்றியும் சொல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முக்கியமான பணிகளை மட்டும் சொல்லலாம் என்று யோசித்தால் எதை சொல்வது, எதை விடுவது என்று பிரிக்கவும் முடியவில்லை. ஓரளவு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்து பாகங்களிலிருந்து பெறப்படும் திரவ நிலையினை கண்காணித்து நிர்வகிக்கும் கல்லீரல், நமது உடலின் அனைத்து பாகங்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினை ஜீரணிக்கச்செய்யும் பித்தநீரினைச் சுரந்து, பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர், நோய்க்கிருமிகள், போதை தரும் மருந்துகள் மற்றும் மது - இவற்றினால்  இரத்தத்தில் சேரும் அனைத்து நச்சுப்பொருட்களையும் மற்றும் கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில் நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய, உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவுக்கு கொடிய நச்சுப்பொருளான "அமோனியா"வை  யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது, மொத்த இரத்தத்தில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை தன்னுள் எப்போதும் இருக்குமாறு வைத்துக்கொள்கிறது - அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும் தாதுப்பொருள் சத்துக்களை சேகரித்து வைத்து, தேவைப்படும் போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து சற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை கிளைகோஜனாக மாற்றி சேமித்து வைத்து, தேவைப்படும்போது குளுக்கோஸாக மாற்றி வெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத் தடுக்கத் (anticoagulant) தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும் காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும் "மின்பகு பொருள்" (ion) மற்றும் "நீர்" ஆகியவற்றின் சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும் செயலற்றுப்போன இரத்த சிகப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்"களை சிதைத்து, மறுசுழற்சி முறையில் மீண்டும் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தினை பிரித்து எலும்பு மஜ்ஜைக்கு அனுப்புவதோடு, அதில் பெறப்படும் கழிவினை வெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமான வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை, கல்லீரலானது, நமது உடலில் ஆரோக்கியம் நிலைத்திருக்கும் வகையில் இடைவிடாது செயாலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடையும்போது விளைந்த விஷத்தின் தாக்குதலிலிருந்து தேவகணங்களை காக்குமுகமாக, அவ்விஷத்தை விழுங்க முற்பட்ட சிவபெருமானைப்போல், நாம் உண்ணும் உணவு, மற்றும் நமக்கு ஏற்படும் கிருமித்தாக்குதல் ஆகியவற்றால் நமது இரத்தத்தில் கலந்துவிட்ட கொடிய விஷத்தை தனக்குள்ளேயே  வைத்துக்கொண்டு, தீங்கில்லாத உயிர்ச்சத்துக்களை மட்டும் இரத்ததில் கலக்கச்செய்து தான் இருக்கும் உடலின் ஆரோக்கியம் ஒன்றே பிரதானம் என்று செயலாற்றும் கல்லீரலின் கடமையுணர்ச்சியை என்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கைக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்.

                                               வருமுன் காப்போம். 
                          ஆரோக்கியவாழ்வினை அனுபவிப்போம்.

Wednesday, 4 June 2014

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்

ஒரு நபரின் உடலில்,  பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு  எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எனினும் அதை  உறுதிப்படுத்தும் வகையில், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - கழிவு நீக்க செயல்பாடு. 

ஒவ்வொரு மூலகத்தின் உள்ளுறுப்பின் செயல்பாடும், அந்தந்த உறுப்பின் கழிவு வெளியேற்றத்தினால்  எளிதாக  உணரப்படுகிறது. ஆரோக்கிய நிலையில், ஒரு உறுப்பின் கழிவின் தன்மை, மற்றும் அளவு  அதன் இயல்பான  நிலையில் அமைந்திருக்கும். உள்ளுறுப்பின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கழிவுகள் வெளியேறுவதில் இயல்பு நிலையில் மாற்றம் நிகழ்கிறது.

அக்குபஞ்சர் தத்துவத்தில், பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகள் அனைத்திற்குமான கழிவுகள் நாம் எளிதில் அவதானிக்கக்கூடிய வகையில் திரவ நிலையில் அமைந்துள்ளன. அந்த வகையில், "நிலம்" மூலகத்தின் உள்ளுறுப்பான  மண்ணீரலின் கழிவுத்திரவம் எச்சில் எனப்படும் "உமிழ்நீர்" ஆகும்.

நிலம் மூலகத்தின் உறுப்புகளான இரைப்பை மற்றும் மண்ணீரலின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும்  வேளையில், அதன் வெளியுறுப்பான வாய் அல்லது  உதட்டில், உமிழ்நீரானது உடனே சுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி வாய் உலர்ந்து விடுதல், அல்லது எப்போதும் அதிக உமிழ்நீர் சுரந்து கொண்டிருத்தல் - நிலம்  மூலகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினைக் குறிக்கிறது.

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும் பின்வருமாறு :



Sunday, 25 May 2014

பஞ்சபூதங்கள் "நிலம்" மூலகம் - தொடர்ச்சி : மன உணர்ச்சி - "கவலை"

நமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள்  இல்லை.

மூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன்,   மூளையின்   கட்டளைக்காக  காத்திருக்கிறது.

உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "ஹார்மோன்" எனப்படும் "உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்பு நீர் " எனலாம். இத்தகைய "சுரப்பு நீர்" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும்  சுரக்கப்படுகின்றன.

"நிலம்" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும்  மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.

தவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, "ஆற்றல்" அல்லது "சக்தி நிலையில்" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால்,  "பசி" உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும்  "க்ரெளின் "  (Ghrelin)  வயிற்றில்  சுரக்கிறது.

வயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் -  மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் "நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்" எனப்படும் "மின் அலை கடத்தி"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு  இடையூறும்   இல்லாத  பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.

நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான "இரசாயன சமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத  தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு  இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும்  "செரோடோனின்" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது.  மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், "MOOD" எனப்படும் மன நிலையினை  சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி  நிவாரணம் தருதல்  - போன்றவையும்  "செரடோனின்"  துணை  புரியும் முக்கிய  பணிகள் தான்.

ஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் "என்ன நடந்துவிடுமோ?" என்று தொடர்ந்து "கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்? விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால்,  இரைப்பை,  மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு  எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.

அதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால்  ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக,  அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம்  மறுக்க இயலாது.

இவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு? அதையெல்லாம் விட்டுவிடுங்கள்.  மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று  யோசித்துப்பாருங்கள். 

நீங்கள்  எதெற்கெடுத்தாலும்  அதிகமாக  கவலைப்படுகிறவரா?

குறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி? ஓரளவுக்கு,  அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை  சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின்  அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள்  எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை  இப்போதே  எதற்கு?

தேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை  சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து,   அவர் உங்கள்  ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.

                  கவலையைப்பற்றிய கவலையை  இனி விட்டுவிடுங்கள்.

                                               வருமுன் காப்போம் 

Tuesday, 20 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, "அகத்தின் அழகு  முகத்தில் தெரியும்" என்னும்  பழமொழியின் அடிப்படையில்தான்.  பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே  படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் "நிலம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின்  வடிவத்தையொத்த "உதடு" அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது  உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.

இரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும்.  மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின்  அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள்  ஏற்படும்.

நிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் " மஞ்சள் " ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன்  ஏறக்குறைய இருக்குமானால்,  அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக்  கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.

தவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின்  அறிகுறியாக இருப்பினும், அதில் "நிலம்" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில்  இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக  உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு  நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில்  அதிகமாக கலப்பதினால்,  அதன் அறிகுறியாக "மரம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான "கண்"ணில்,  "நிலம்" மூலகத்தின் "மஞ்சள்" நிறம் வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை : இனிப்பு, துவர்ப்பு

"நிலம்" மூலகத்தின் சுவை இயல்பு  "இனிப்பு" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை"  மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது

பொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு "வலி"-யாக  உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு  முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற  ஆரம்பித்திருக்கும் அல்லவா?  சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே  அதனை  நாம்  உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் "நிச்சயம் இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின்  நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது  ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும்  ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி  எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் "போதும்- திகட்டிவிட்டது" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய  உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது"  என்று இனிப்பு சுவையை  ஒதுக்கினாலும், அல்லது  "  இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்" என்று  மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான "கேள்வி - பதில்" பகுதியிலேயே,  அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,  உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு  கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை  உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும்  வேண்டுமா?

                                              "வருமுன் காப்போம்"

Friday, 16 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :

நிலம் - மூலகம் :

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "நிலம்"  மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :   மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு "SP"

SPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும்  மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.

ஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality  & validity-  அங்கு சரிபார்க்கப் படுகிறது.

நிலமானது  எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச்  சிதைத்து, மறு சுழற்சிக்கு  தயார்ப்படுத்துகிறதோ,  அதேபோல்  இறந்த  மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை  சிதைத்து,  கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. "இரத்த  சிகப்பணுக்களின் கல்லறை" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை  அறிந்த நமது முன்னோர்கள் -  உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,  தமிழில் "மண்-ஈரல்"
என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தவிர, T- லிம்போசைட் மேலும்  B - லிம்போசைட்  ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய "நிணநீர் உறுப்பு" எனப்படுகிறது.

எப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.  இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும்  இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.

மண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் "யின்" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.


உட்புற இணை உறுப்பு :  இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு "ST"

எவ்வாறு, EARTH - நிலம் , மண்  - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை  - நாம் உண்ட உணவினை - "நொதியம்" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில்  - தயாரித்துத் தருகிறது.

மண்ணீரலின்   இணை  உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் "யாங்"   உறுப்பாக  அறியப்படுகிறது.

நிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின்  செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.