Tuesday 18 March 2014

அக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்

அக்குபஞ்சர் ஆரோக்கியம்
 
அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும், அதன் அடிப்படை தத்துவம் நமது பாரம்பரிய வர்மக்கலை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆரம்பத்தில் கூரான கற்கள் மற்றும் உலோக உபகரணங்களால் செய்து வரப்பட்ட அக்குபஞ்சர்,  சீன தேசத்தவரால் மிகவும் மெல்லிய உலோக ஊசிகளை பயன்படுத்தும் மிக எளிய சிகிச்சை முறையாக மாற்றப்பட்டது. அனால் கையால் அழுத்தம் கொடுத்து செய்யப்படும் அக்குபிரஷர் தொடுசிகிச்சை நமது பாரம்பரியத்தைச் சார்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அக்குபஞ்சர் தத்துவம் 

"அண்டம்" எனப்படும் (Galaxy ) பிரபஞ்சமானது நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு  எனும் ஐந்து மூலகங்களால் ஆனது.  பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாகிய "பிண்டம்" எனப்படும் நாமும் அதே ஐந்து மூலகங்களால் உருவாக்கப்பட்டவர்கள்தாம் . நாம் வாழும் இந்த பூமியும் அதே ஐந்து மூலகங்களால்ஆனது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  " அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது."

பூமியானது தன் கட்டமைப்பான  - நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு - ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை  தனக்கு தானே சரி செய்து கொள்ளுகிறது. உதாரணம் - எரிமலை, பூகம்பம், புயல், மழை போன்றவை. 

நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு -  எனும் ஐந்து மூலகங்களால்ஆன நமது  உடலும் தனது கட்டமைப்பில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை தமக்கு தாமே சரி செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றது.

விபத்துபோன்ற சந்தர்ப்பங்கள் , பாக்டீரியா , வைரஸ், பங்கஸ் மற்றும் பாரசைட்   போன்ற தொற்று  நோய்கள், கேன்சர், எய்ட்ஸ் மற்றும் நுண்கிருமிகளால் ஏற்படும் தீவிர கொள்ளை நோய்கள் தவிர  அநேக சுகவீன பிரச்சினைகளை
  ---இயற்கையோடு மாறுபடாத, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை நாம் கொண்டிருக்கும் பட்சத்தில் ---
 நமது உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.

http://apps.who.int/medicinedocs/en/d/Js4926e/5.html

ஒருவரின்  உணவு , உழைப்பு  மற்றும் உறக்கம்  ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளினாலும் சுற்றுப்புற சூழ்நிலைகளினால்  ஏற்படும் பாதிப்பாலும் நமது உடலில் இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் உயிர்சக்தி ஒட்டத்தில் தடைகள் ஏற்பட்டு நோய் ஏற்படுகிறது.

 உயிர்சக்தி ஒட்டத்தில் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நமது  உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும்திறனை இழந்து நோய்வாய்ப்  பட ஏதுவாகிறது.

உயிர்சக்தி ஒட்டத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி உடலில் ஏற்பட்டுள்ள பிணிகளை குணமாக்குவது மட்டுமல்லாது மீண்டும் நோய் தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளும் சிகிச்சை முறையாக அக்குபஞ்சர் or  அக்குபிரஷர் திகழ்கிறது.

நோய் அறிதல் 

அக்குபஞ்சர்  சிகிச்சை முறையில் நோய் அறிதல் மிகவும்  எளிமையாக்கப்பட்டுள்ளது. "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்ற கூற்றுப்படி ஒருசில நோய் தாக்கங்களை முகத்தில் ஏற்படும் குறிகளைக்கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக நாக்கு. நாக்கின் நிறம், அமைப்பு, நாக்கின் மீதுள்ள படிவங்கள் , நாக்கில் தோன்றியுள்ள குறிகள் ஆகியவற்றின் மூலமாக ஒருவரின் ஆரோக்கிய நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அறிய ஏதுவாகிறது.

அடுத்ததாக, எச்சரிக்கை புள்ளிகள் எனப்படும் சில அக்குபஞ்சர் புள்ளிகளை  தொட்டு உணர்ந்தும் சில உடல் பிரச்சினைகளை கண்டறிய ஏதுவாகிறது.

அக்குபஞ்சர்  சிகிச்சை முறையில்  மிக முக்கியமானதாக "நாடிப்பரிசோதனை" அமைகிறது. இரண்டு கைகளிலும் நாடி பார்த்து  நமது உடலில் - நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு - ஆகிய மூலகங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள  ஏற்ற தாழ்வுகளை  கண்டறிய முடிகிறது. கல்லீரல், நுரையீரல், வயிறு, பெருங்குடல், சிறுநீரகம், இதயம், சிறுகுடல் போன்ற உள்ளுறுப்புகளின்  செயல்திறனை மட்டுமல்லாது, மனம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் கூட அறிய முடிகிறது.
  
அக்குபஞ்சர் சிகிச்சை
தேவைக்கேற்றவாறு,  அக்குபஞ்சர் புள்ளிகளில்  நாடி சமன்பாட்டு கோட்பாடுகளின் படி சிகிச்சை தரும்போது நோய் குணமாக்கப் படுகிறது. நாடிப்பரிசோதனை மூலம் உடலில் நோய் தோன்றக்கூடிய  சாத்தியக்கூறு களை யும் முன்னதாகவே அறிந்து கொண்டு , நமது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் நோய்வாய்ப்படாமல் தப்பித்துக்கொள்ள ஏதுவாகிறது.

 உடல், மனம் : 


மனதில் தோன்றும் அதிக உணர்ச்சிகளும் பல நேரங்களில் நமது நோய்க்கு காரணமாக அமைகிறது- அல்லது நாம் உண்ணும் உணவுகளின் தன்மைகளினால்  நமது உணர்வு நிலைகள் பாதிப்படைந்து அதன் காரணமாக நமது உடலில்,  தேவைக்கு அதிகமாக , அல்லது தேவைக்கு குறைவாக சுரக்கும் இயக்குநீரின் ((hormones and other secretions) தன்மைகளைப் பொருத்து நோய்வாய்ப்படவும் நிறைய வாய்ப்புள்ளது.

 உடல், மனம் ஆகிய இரண்டில்  - ஒன்று பாதிப்படையும்போது  அது மற்றொன்றையும் பாதிக்கும்  என்பது மறுக்க முடியாத உண்மை. இரு வகைகளிலும் தோன்றியுள்ள பிரச்சினைகளை " நாடிப்பரிசோதனை " மூலம் தெளிவாக அறிந்து கொண்டு சிகிச்சை  தருவது அக்குபஞ்சரின் சிறப்பு.

ஆரம்பகட்டத்தில்  உள்ள மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர் பக்கவிளைவுகள் இல்லாத அற்புதமான சிகிச்சையாகும்.  கோபம் , துக்கம் , கவலை, பயம் போன்ற உணர்சிகள் அளவுக்கு அதிகமாகும் போது  அவற்றை கட்டுப்படுத்தி ,  நாம் நோய் வாய்ப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் உதவுகின்றது.

தவிர, நோய்வாய்ப்பட்டவரின் அன்றாட உணவு மற்றும் பழக்க வழக்கங்களை கேட்டறிந்து  அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் தருவது ஒரு அக்குபஞ்சர் மருத்துவரின் கடமையாகிறது. அதன் மூலம் "வருமுன் காப்போம்" என்ற வகையிலும் அக்குபஞ்சர்  சிகிச்சை நமக்கு மிகவும் கை கொடுக்கிறது.

அக்குபஞ்சர்  சார்ந்த சிகிச்சை முறைகளாக, பாத அழுத்த சிகிச்சை, கை அழுத்த சிகிச்சை, காது அக்குபஞ்சர், தலை அக்குபஞ்சர்  போன்ற சிகிச்சை முறைகளும் நல்ல பலன் தருபவை.

மருந்துகள் ஒத்துக்கொள்ளாத போது  மட்டுமல்லாது , நோய் வருமுன் நம்மை பாது காத்துக்கொள்ளும் வகையிலும்  கைகொடுக்கும் அக்குபஞ்சர் மருத்துவத்தின் மகத்துவம் நம்மை வியக்க வைக்கிறது.


                                                        "வருமுன் காப்போம்"