Friday 16 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :

நிலம் - மூலகம் :

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "நிலம்"  மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :   மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு "SP"

SPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும்  மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.

ஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality  & validity-  அங்கு சரிபார்க்கப் படுகிறது.

நிலமானது  எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச்  சிதைத்து, மறு சுழற்சிக்கு  தயார்ப்படுத்துகிறதோ,  அதேபோல்  இறந்த  மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை  சிதைத்து,  கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. "இரத்த  சிகப்பணுக்களின் கல்லறை" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை  அறிந்த நமது முன்னோர்கள் -  உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,  தமிழில் "மண்-ஈரல்"
என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தவிர, T- லிம்போசைட் மேலும்  B - லிம்போசைட்  ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய "நிணநீர் உறுப்பு" எனப்படுகிறது.

எப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.  இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும்  இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.

மண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் "யின்" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.


உட்புற இணை உறுப்பு :  இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு "ST"

எவ்வாறு, EARTH - நிலம் , மண்  - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை  - நாம் உண்ட உணவினை - "நொதியம்" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில்  - தயாரித்துத் தருகிறது.

மண்ணீரலின்   இணை  உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் "யாங்"   உறுப்பாக  அறியப்படுகிறது.

நிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின்  செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

No comments:

Post a Comment