Sunday, 27 April 2014

அக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்

ஆரோக்கிய நிலை 


பஞ்சபூதங்களான   - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகிறது. ஐந்து மூலகங்களும் -  தமது, இயல்பை மீறாத, கட்டுக்கோப்பான முறையில்,  சீராக  செயல்படும்போது.  நமது "உயிர் சக்தி ஓட்டம்" (Flow of Bio Electric Energy) செவ்வனே நடைபெறுகிறது.  அதுதான் "ஆரோக்கிய நிலை".

இந்த ஆரோக்கிய நிலை தொடர்ந்து நீடிக்க நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பான "செல்"கள் யாவும் தமக்குரிய வேலையை சரிவரச் செய்து செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு - நமது உடலின் ஒவ்வொரு "செல்"லுக்கும், பிராணவாயுவும், பிற உயிர்ச்சத்துக்களும் தடையின்றி கிடைத்தாக வேண்டும்.

நமது உடலானது - சுவாசம் மற்றும் உணவு மூலமாக,  பிராணவாயு மற்றும் உயிர்ச்சத்துக்களை, உட்கிரகித்து, ஜீரணித்து, "சக்தி மாற்றம்"  செய்யும்  வேளையில் - திட, வாயு, மற்றும் திரவக்  கழிவுகள் உண்டாகின்றன. இந்தக் கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்பட வேண்டும். உடலில் கழிவுகளின் தேக்கம் தான்,  உடல் நலக் குறைவின்  மிக முக்கியமான காரணியாகும்.

இவ்வாறு, உட்கிரகித்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய செயல்கள், எந்த ஒரு அக  மற்றும் புறக்காரணிகளாலும் தடைப்படுத்தப்படாமல் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் நமது "உயிர் சக்தி ஓட்டத்தில்" எந்தவித பாதிப்பும் இல்லை.

ஏதாவது ஒரு காரணத்தால், பஞ்சபூதங்கள் எனப்படும்  - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று  - ஆகிய ஐந்து மூலகங்களில், ஏதேனும் ஒரு மூலகத்தின் செயல்பாடு, சற்றேனும் ஏறக்குறைய இருப்பின் "உயிர் மின் சக்தி ஓட்டத்தில்" தடை ஏற்படுகிறது. அந்த தடையினால் ஏற்படும் உடல் நலப் பாதிப்பினை, நாம் "வலி" "எரிச்சல்" "வீக்கம்", "மரத்துப்போகுதல்" என பல அறிகுறிகளாக உணருகிறோம்.


அக்குபஞ்சர் புள்ளிகள் 


நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகிய ஐந்து மூலகங்கள் -  பிரபஞ்சத்திலும் சரி, நமது உடம்பிலும் சரி - தனித்தனியாக இயங்குவதில்லை - இயங்கவும் முடியாது. அவை ஒன்றுடன் ஒன்றாக இணைந்து, பிணைந்தே செயலாற்றுகின்றன. எந்த ஒரு மூலகமும், சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் மற்ற அனைத்து மூலகங்களின் ஆதரவும் வேண்டும். எனவே,  எந்த  ஒரு  மூலகத்தின்  சக்தி  ஒட்டப்பாதையிலும்  மற்ற  அனைத்து  மூலகங்களின்  "பிரதானமாக இயங்கும்  இடங்கள்", அதாவது " அக்குபஞ்சர் புள்ளிகள் "  அமைந்திருக்கும்.


அக்குபஞ்சர் / அக்குபிரஷர் 


அக்குபஞ்சரின் தனிச்சிறப்பான நாடிப்பரிசோதனை மூலம்,  எந்த மூலகத்தின் "சக்தி ஒட்டப்பாதையில்" தடை ஏற்பட்டுள்ளது - அதற்கு காரணமான  மற்றொரு மூலகம் எது  -  என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

எந்த  மூலகத்தின் "உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  "எந்த மூலகப் புள்ளியில்" தடை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தடைகளை அகற்றும் வண்ணம், மெல்லிய   ஊசியினைச்  செலுத்தி  சிகிச்சை தருவது -  அல்லது  விரல்களால் அழுத்தம் தந்து முறைப்படி சிகிச்சையளிப்பது "அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர்"  சிகிச்சை  எனப்படும்.


உணவு - உடல்உழைப்பு -  உறக்கம் 

"உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  தடைகள் ஏற்பட்டு, உடல் நலத்தில் பிரச்சினை வந்த பிறகுதான் சிகிச்சை தர வேண்டுமா? உடல் நலக் குறைவு ஏற்படாமல், அதாவது "சக்தி ஒட்டப்பாதையில்" தடைகள் ஏற்படாவண்ணம்  பாதுகாத்துக்  கொள்ள இயலுமா?

நிச்சயமாக உண்டு. நமது முன்னோர்கள் நமக்கு நிறைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறார்கள். அவற்றில் பல - ஆசார அனுஷ்டானங்களாக இருக்கும் - அல்லது பக்தியோடு இணைந்த பழக்க வழக்கங்களாக இருக்கும். மற்றும் நிறைய குறிப்புகள் கலாச்சாரம் சார்ந்ததாக இருக்கும்.

பரபரப்பான இந்த வாழ்க்கையில் அவற்றை நாம் கிட்டத்தட்ட முழுவதுமாகவே தொலைத்து விட்டோம். புதிய கண்டுபிடிப்புகளால் நமக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது. ஆனால் கிடைக்கும்  நேரத்தை முறையாக பயன் படுத்துகிறோமா? உடல் உழைப்பு குறைவதோடு மட்டுமல்லாது, மன அழுத்தம் கூடும் வகையில் தான் நமது தினசரி வாழ்க்கைமுறை மாறிக்கொண்டிருக்கிறது.

காலத்திற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை தவற விடலாமா?

உணவு, உடல்உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நெறிப்படுத்தி முறைப்படுத்தினால் மட்டுமே நீடித்த ஆரோக்கியம் கிட்டும்.

எனினும் அவ்வப்போது, நாடிப்பரிசோதனை செய்துகொண்டு, எளிதான முறையில்,  மெல்லிய அழுத்தமாக  "அக்குபிரஷர்"  மட்டுமே தந்து  உடல் நலத்தை பாதுகாக்கலாம்.


                                                  " வருமுன் காப்போம்"

1 comment:

  1. பிடித்திருக்கிறது

    ReplyDelete