Thursday, 12 June 2014

பஞ்ச பூதங்கள் : "மரம்" - மூலகம் - உள்ளுறுப்பு " கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் - LIVER - அக்குபஞ்சர் குறியீடு "LIV"

நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியாக விளங்கும் -LIVER - எனப்படும் கல்லீரல், நமது உடலின் "இரசாயனத் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, நமக்கு அன்றாடம் தேவைப்படும் பலவித  உயிர்ச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து தயாரித்துத் தரும் முக்கிய பணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம் நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறதோ, அதேபோன்று, கல்லீரலானது நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களையும் நமது உடலின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பித்தருகிறது. தவிர, தான் வெட்டப்பட்டாலும், மீண்டும் முழுமையாக வளர்ந்துவிடக்கூடிய தன்மையுடையதாய் விளங்குவதால், கல்லீரல் மரம் மூலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்து பணிகளைப்பற்றியும் சொல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முக்கியமான பணிகளை மட்டும் சொல்லலாம் என்று யோசித்தால் எதை சொல்வது, எதை விடுவது என்று பிரிக்கவும் முடியவில்லை. ஓரளவு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்து பாகங்களிலிருந்து பெறப்படும் திரவ நிலையினை கண்காணித்து நிர்வகிக்கும் கல்லீரல், நமது உடலின் அனைத்து பாகங்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினை ஜீரணிக்கச்செய்யும் பித்தநீரினைச் சுரந்து, பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர், நோய்க்கிருமிகள், போதை தரும் மருந்துகள் மற்றும் மது - இவற்றினால்  இரத்தத்தில் சேரும் அனைத்து நச்சுப்பொருட்களையும் மற்றும் கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில் நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய, உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவுக்கு கொடிய நச்சுப்பொருளான "அமோனியா"வை  யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது, மொத்த இரத்தத்தில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை தன்னுள் எப்போதும் இருக்குமாறு வைத்துக்கொள்கிறது - அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும் தாதுப்பொருள் சத்துக்களை சேகரித்து வைத்து, தேவைப்படும் போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து சற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை கிளைகோஜனாக மாற்றி சேமித்து வைத்து, தேவைப்படும்போது குளுக்கோஸாக மாற்றி வெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத் தடுக்கத் (anticoagulant) தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும் காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும் "மின்பகு பொருள்" (ion) மற்றும் "நீர்" ஆகியவற்றின் சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும் செயலற்றுப்போன இரத்த சிகப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்"களை சிதைத்து, மறுசுழற்சி முறையில் மீண்டும் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தினை பிரித்து எலும்பு மஜ்ஜைக்கு அனுப்புவதோடு, அதில் பெறப்படும் கழிவினை வெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமான வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை, கல்லீரலானது, நமது உடலில் ஆரோக்கியம் நிலைத்திருக்கும் வகையில் இடைவிடாது செயாலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடையும்போது விளைந்த விஷத்தின் தாக்குதலிலிருந்து தேவகணங்களை காக்குமுகமாக, அவ்விஷத்தை விழுங்க முற்பட்ட சிவபெருமானைப்போல், நாம் உண்ணும் உணவு, மற்றும் நமக்கு ஏற்படும் கிருமித்தாக்குதல் ஆகியவற்றால் நமது இரத்தத்தில் கலந்துவிட்ட கொடிய விஷத்தை தனக்குள்ளேயே  வைத்துக்கொண்டு, தீங்கில்லாத உயிர்ச்சத்துக்களை மட்டும் இரத்ததில் கலக்கச்செய்து தான் இருக்கும் உடலின் ஆரோக்கியம் ஒன்றே பிரதானம் என்று செயலாற்றும் கல்லீரலின் கடமையுணர்ச்சியை என்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கைக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்.

                                               வருமுன் காப்போம். 
                          ஆரோக்கியவாழ்வினை அனுபவிப்போம்.

No comments:

Post a Comment