Monday 7 April 2014

அக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை

நோய்க்காரணிகள்  

 

அக்குபஞ்சர் தத்துவப்படி,   நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே நோய் தோன்றுகிறது.

              -  நமது முறையற்ற உணவுப் பழக்க  வழக்கங்கள்
              - அளவான உடல் உழைப்பு, அல்லது உடற்பயிற்சி இன்மை
              -  போதுமான அளவு உறக்கமின்மை

ஆகிய காரணங்களால்,  பஞ்சபூதங்களின் செயல்திறன்‌ பாதிக்கப்படுவதனால், நமது உடலில் நோய் தோன்றுகிறது.


மேலும்
              - குளிர்
              - வெப்பம்
              - அதிக வெப்பம்
              - காற்று
              - ஈரப்பதம்
              - மிகவும் உலர்ந்த தன்மை

ஆகிய சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்களும் காரணமாகின்றன.

இவை தவிர

              -  கோபம்
              -  துக்கம்
              -  ஆழ்ந்த சிந்தனை
              -  கவலை
              -  ஆவல்/பதட்டம்
              -  பயம்
              -  சந்தோஷம்

ஆகிய ஏழு வகை உணர்ச்சிகள் ,  அளவுக்கு அதிகமாக மனதை ஆக்கிரமிக்கும்போது, உடலின் சக்தி ஒட்டப்பாதையில் குறுக்கீடு ஏற்பட்டு, நோய் ஏற்படுகிறது.

தவிர,

              - கீழே விழுதல்
              -  விபத்து

போன்ற காரணங்களும் உண்டு.


"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " 


மேற்கூறிய பல காரணங்களால்,  நமது உடலின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் செயல்திறன் கெடுகிறது.

 நமது உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும்  தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான  காற்றை சுவாசிக்கிறது,  மற்றும்  உணவு எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம்.

வாயு,  திரவ மற்றும் திட தாதுக்களின்  "சக்தி கிரியை" ஒவ்வொரு "செல்"லுக்குள்ளும்  முடிவடைந்த நிலையில் - கழிவுகள் "செல்" லிலிருந்து நீக்கப்படுகின்றன.

"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " இவ்விரண்டு செயல்களும் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கையில் உடல் நலத்திற்குப்  எவ்விதப் பங்கமுமில்லை.  இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் வலி, வீக்கம் மற்றும் நோய்க்குறிகளாக அறியப்படுகின்றன.

 கழிவுகளின் தேக்கமே அநேக நோய்கள்  ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகிறது.

தும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு - ஆகியவை ஏற்படும்போது, அதற்கான காரணத்தை நாம் அறிய முற்படவேண்டும்.  அவை  நமது உடலில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நிகழ்க்கூடிய  இயற்கையான கழிவு நீக்கச்செயலாக இருக்கலாம்.

உடலுக்கு தேவையில்லாத, ஒவ்வாத ஒன்றினை, வெளியேற்றும் செயல்களே தும்மல், இருமல் முதலியன.

நமது உடலின் - தன்னை தானே சரி செய்து குணப்படுத்திக்கொள்ளும் அற்புத ஆற்றல் அது.  அது பெரும்பாலும், உடலின் பஞ்ச மூலக சமன்பாடு சீர் குலையாமல் பாதுகாப்பதன் பொருட்டு  நிகழும் அனிச்சைச் செயலாகவே இருக்கும்.

பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிவதோடு, இயல்பான கழிவு நீக்கம் நடைபெறும் வகையில் நமது செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், ஒருவர் - தனது உடலைப்பற்றியும் , அதன் செயல்பாடுகளைப்  பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது.

தேவையில்லாமல் - கழிவு நீக்கத்தை நிறுத்த முற்படும்போது - கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உடலில் பிரச்சினை  மேலும் முற்றுகிறது.



அக்குபஞ்சரின் சிறப்பு  - நாடிப்பரிசோதனை

 

உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை  - பஞ்சமூலகங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக கைநாடி மூலம் உணரப்படுவது அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனையின் சிறப்பு.


ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், நோயாளியை நாடிப்பரிசோதனை செய்கிறார். அதன்மூலம், நோயாளியின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அறிந்து கொள்கிறார்.

நமது உடலை இயக்கும் பஞ்சபூதங்களின் சுழற்சி , மற்றும் செயல்பாட்டினை அவன் நன்கு அறிந்தவராதலால்  அவரால் கைநாடி மூலம் எளிதில் பிரச்சினையை அறிய முடிகிறது.

அளவுக்கு அதிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் , அல்லது செயலிழந்து கொண்டிருக்கும் மூலகத்தை  அறிகிறார்.

தேவைப்பட்டால்,  நோய்வாய்ப்பட்டவரிடம்,  சிறு விசாரணை செய்து நோயின் தன்மையை அறிந்து கொள்கிறார்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது, சில அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை "வலி" யாக உணர்த்தும். அந்த புள்ளிகளில் இலேசாக அழுத்தம் தந்து,  நோயின் தன்மை அறியப்படுகிறது.

நோயின் மூல  காரணம் உடலிலா அல்லது, மனதிலா  என்பதை அறிந்து  அதற்கேற்ப சிகிச்சை தருகிறார்.

நமது உடலில் இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சபூதசக்தி ஒட்டப்பாதைகளில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் சிகிச்சை தரப்படுகிறது.

அது, உடலுக்கும் உள்ளத்திற்கும்  - ஒரே நேரத்தில் தரப்படும் சிகிச்சையாக அமைகிறது.

இது மட்டும் போதுமா?


வருமுன் காக்கும் வழி உண்டா? 

 

திரும்பவும் அதேபோல் அதே பிரச்சினை நோய்வாய்பட்டவருக்கு வர வாய்ப்பில்லையா?

நின்ற வண்டியை அவ்வப்போது உந்தி  தள்ளி விட்டு உதவி செய்யலாம். வருடம் முழுவதும்,  வாழ்க்கை முழுவதும்  தள்ளிவிட்டுக்கொண்டு கூடவே ஓடத்தேவையா?

இந்த இடத்தில் நோயாளியின் பங்கு  நிச்சயம் தேவை.

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது வெறுமனே உடலில் ஊசிகள் செலுத்துவது, அல்லது கைவிரல்களால் அழுத்தி குணம் தருவது மட்டுமல்ல.

தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து விடுபடத்தேவையான ஆலோசனைகள், மற்றும் மீண்டும் அதே  பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான உபாயங்களை சொல்லித்தருவது ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்.

ஒருவரின் தினசரி நடவடிக்கைகளில், எங்கே  தவறு ஏற்பட்டுள்ளது - அதை எப்படி சரிசெய்யலாம் - என்னும் ஆலோசனைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.

இதன்  மூலம் - நோய் வருமுன், நம்மை நாமே  பாதுகாத்துக்கொள்வோம்  - என்ற சொல்லை முன் வைக்கிறார். சிகிச்சையாளர்.

பிரச்சினையின் மூல காரணம் என்னவென்பதை எடுத்துச் சொல்லி, மீண்டும், மீண்டும் நோய்வாய்ப்படாமலிருக்க, நமது உடல், மற்றும் உடலின் செயல்பாடுகள் பற்றிய  சிறு சிறு விளக்கங்கள் தருகிறார்.

உணவு, உடல் உழைப்பு, உறக்கம் - இம்மூன்று விஷயத்திலும்  கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள் நிச்சயம் தரப்படுகிறது.

கூடவே -  அக்குபஞ்சரின்  நாடி சமன் செய்தல் சிறப்பு சிகிச்சை தருவதினால் , ஒருவரின்  நோய் எதிர்ப்பு சக்தி தூண்டி விடப்படுகிறது.

அவ்வப்போது ,  முன்னெச்சரிக்கையாக  அக்குபஞ்சர்  சிகிச்சை எடுத்துக்கொள்வது  மட்டுமல்லாமல் - கூடவே - ஒருவர்  உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடுடன் கூடிய  நடைமுறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் போது - நோய் என்பது எட்டிப்பார்க்கக்கூட வழியில்லை.


உடல், உள்ளம்  

 

 உடல், உள்ளம் - இவை இரண்டின் ஆரோக்கியம் முழுமையாக பாதுகாக்கப்பட்டால் மட்டுமே,  நமது உயிர் எனும் ஆத்மா எடுத்துக்கொண்டுள்ள  பிறவிக்குரிய  கடமையை சரியாகச் செய்ய இயலும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உடலின் உள்ளுறுப்புகளுக்கும், நேரடித்தொடர்பு  உள்ளது நாம் அறிந்ததுதான். உடலின் உபாதைகள் - உள்ளத்தைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வடைந்த உள்ளம் காரணமாக உடலில் உபாதைகள் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அடிக்கடி தேவைல்லாமல் கோபத்திற்கு ஆளாகுபவரின்  கல்லீரலின் செயல்திறன் குன்றிப்போகிறது.

சகிப்புத்தன்மை இன்றி "எரிச்சல்" உணர்ச்சி  மிகுந்தோரின் வயிறு புண்ணாகிப்போகிறது.

பய உணர்ச்சி மிகுந்தவர்களின் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட மறுக்கின்றன.

காரணம் என்ன? - நாம் மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சி அலைகளுக்கும், பதில் விளைவு  தரும் வகையில்  நமது உடலில் அமைந்துள்ள ,   நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் "ஹார்மோன்" எனப்படும் "இயக்குநீர்" - மற்றும் நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "என்ஸைம்" எனப்படும் நொதியங்கள் செய்யும் அதிகப்படியான வேலைதான்.

எதற்கும் அதிக உணர்ச்சிவயப்படாமல் மனநலம் காப்பதுதான் நோயற்ற வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளம். 

உடல் நலமும் உள்ளத்தின் நலமும் சிறந்து விளங்க.  பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்களின் "எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்" எனற திரைப்படப்பாடலின் ஒற்றை  வரியின்  உண்மையை உணர்ந்து கொண்டாலே போதும்.

ஒரே நேரத்தில் உடல், உள்ளம் - இவை இரண்டிற்குமான எளிய, விரைவான, முழுமையான சிகிச்சை அக்குபஞ்சர் / அக்குபிரஷர் என்றால் அது மிகையல்ல.

 அக்குபஞ்சர்  -  வருமுன் காப்போம் வாழ்க்கை முறை


No comments:

Post a Comment