Wednesday, 9 April 2014

வாய் - உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்

வயிற்றில் பாதி வாயில் 


உணவு ஜீரணம் என்று சொன்ன உடனே நமக்கு , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை தான் நினைவில் வரும் .  வாயினையும் ஒரு முக்கிய ஜீரண சக்தியுடைய உறுப்பாக பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

ஆனால் வாயினில் உணவினை நாம் மெல்லும்போது  நடைபெறும் நிகழ்வுகளை சற்று கவனித்தோமானால் "வயிற்றில் பாதி வாயில்" என்னும் கூற்றை அப்படியே ஆமோதிப்போம்.

உணவு ஜீரணம் என்பது வாயில் ஆரம்பித்து , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் நடைபெறும் ஒரு தொடர் நிகழ்வாக அமைகிறது

பற்கள்  


நமது வயிறு வெறும் தசைகளாலானது என்பதை நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வாயிலிட்ட உணவை மெல்லாமல் அப்படியே விழுங்கினால் என்ன ஆகும்?

பற்களின் உபயோகம்தான் என்ன?

வெட்டும்  பற்கள், கிழிக்கும் பற்கள் மற்றும் அரைக்கும் பற்கள் என முப்பத்து இரண்டு பற்களை  - இறைவன் எதற்காக தந்திருக்கிறார்?

தாடையில் வேர்விட்டு வளரும் பல்லின் வெளிப்புறம் எனாமல் எனப்படும்  கடினமான பூச்சாக அமைகிறது.   எனாமல் நமது உடலிலேயே மிக கடினமான திசு ஆகும்.

மிக  கடினமான உணவுப்பொருட்களையும் அரைத்து தருவதன் மூலம்,  வயிறு  உணவை ஜீரணிக்க பற்கள் மிகவும் உதவுகின்றன.
 
அவசரமாக மெல்லாமல் உண்ணும் உணவு, அதிக அமிலச்சுரப்புக்கு காரணமாக அமைந்து, வயிற்றை மிகவும் கெடுக்கிறது.

குறைந்தது பத்திலிருந்து பதினைந்து முறையாவது, உணவை கடித்து மென்று கூழாக்கி உண்ணுவது அவசியம்.

"நொறுங்கத்தின்றால்  நூறு வயது "  என்று  நமது முன்னோர்கள் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை என்பதை, அதை கடைப்பிடித்தவர் நன்கு அறிவர்.


 நாக்கு 

உணவை  நாம் வாயில் இட்டதும்,  அதன் முதல் ஸ்பரிசம் நாக்குடன்தான்.  உணவினை பற்களால் மெல்லுவதற்கேற்ப, நாக்கின்   அசைவுகள் - பற்களுக்கு  இடையில் சிக்கிக்கொள்ளாமல்  - மிகவும் லாவகமானவை.

 அடிநாக்கின் அலைபோன்ற அசைவின் உதவியினால் தான் உணவை விழுங்க முடியும்.

.நாக்கில் அமையப்பெற்ற சுவையரும்புகள், நாம் நமது உணவினை தேர்ந்தெடுத்து உண்ண உதவுகின்றன. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் நாக்கில் அமைந்துள்ள சுவை அரும்புகள் தன்மீது படும் உணவின் சுவையை அறிந்த கணமே - உணவின்  தன்மை, அதில் உள்ள சத்துக்கள், மற்றும் ஜீரணிக்க தேவையான இதர விஷயங்கள் பற்றிய தகவல்களை வயிற்றுக்கு - மூளை மூலமாக தந்தியடிக்கின்றன  என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

 இந்த இடத்தில் மூக்கின் வாசனை அறியும் திறனும் சேர்ந்து செயல்பட்டு வயிற்றுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

எந்தவிதமான  உணவு தன்னிடம் வந்தடைய இருக்கின்றது  - எந்த விதமான நொதியங்களைச் சுரக்கவேண்டும் - எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்,  என வயிறு தீர்மானிக்க,  நாக்கு  அனுப்பும் சமிக்ஞைகள் உதவுகின்றன.

முறையாக சுவைக்காமல், அவசரமாக விழுங்கப்படும் உணவு, முழுமையாக ஜீரணிக்கப்படாது என்பது உண்மை.


உமிழ்நீர்

 
வாய் என்றதும் பற்கள் , நாக்கு தவிர நாம் நினைவில் கொள்ள வேண்டியது உமிழ்நீர் சுரப்பிகள்  தாம்.

வயது வந்த ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு- மூன்று வேளையும் உணவருந்தும்போது - சுமார் 1500 மிலி அளவுக்கு உமிழ்நீர் சுரப்பதாக  கணக்கிடப்பட்டிருக்கின்றது.  உமிழ்நீரில் 99.5% நீரும் 0.5% கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் மற்றும் நொதியங்களும் அடங்கியுள்ளன.

பற்களால் நான்கு அரைக்கப்பட்ட உணவில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருளை,   உமிழ்நீரின் - அமிலேஸ்('salivary amylase') எனும் முக்கிய நொதியமானது,  டெக்ஸ்ட்றின்  மற்றும் மால்டோஸ் ஆக மாற்றுவதன் மூலம் ஜீரணம் வாயிலேயே ஆரம்பிக்கிறது - மேலும் இதன் தொடர்ச்சி வயிற்றில் நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமே உமிழ்நீரில் இருக்கக்கூடிய "மால்டேஸ்"  என்னும்  நொதியமானது "மால்டோஸ்"-ஐ  குளுக்கோசாக, அதாவது சர்க்கரையாக மாற்றுகிறது.

இதன்  மூலம்  வயிற்றில்  தரமான  நொதியங்கள் சுரக்க வழி  வகுக்கிறது  - விளைவாக -  கணையத்திலிருந்து  சுரக்கும் இன்சுலின் ஒத்துக்கொள்ளக் கூடிய பக்குவத்தில் குளுக்கோஸ் தயாராவதால் - நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் ஏற்படுவது தவிர்க்கப்பட ஏதுவாகிறது.

சர்க்கரை நோயின்  ஆரம்ப கட்ட பாதிப்பில் இருப்பவர்கள்  - சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்து, முறையான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுவதுடன் - நன்றாக மென்று சாப்பிடும் முறையை கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களின் சர்க்கரை  நோய் குணமாகக்கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
 
"லிங்குவல் லைபேஸ்" எனப்படும் உமிழ்நீரிலுள்ள ஓர் நொதியமானது , நாம் உண்ணும் உணவிலுள்ள "பால்மக் கொழுப்பின்"  மீது  (pre-emulsified fats) வினை  புரிந்து கொழுப்பு  ஜீரணத்திற்கு உதவி  செய்கிறது.

இதன் காரணமாக - கோலஸ்டரால் - பிரச்சினை வராமல் இருக்கவும், தேவைக்கு அதிகமாக எடை கூடாத வகையில், உடலை பேணவும், நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

உணவை வாயில் அரைத்து சுவைக்கும்போதே உமிழ்நீரில் உள்ள "லைஸோஸைம்" எனும் நொதியம் உணவில்  கலந்திருக்கக்கூடிய சில கெட்ட  பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.

உமிழ் நீருக்கு இத்தனை சிறப்பா? உமிழ் நீரினை  நாம்  ஏன்  "உயிர்நீர்"  என்று சொல்லக்கூடாது?

டான்சில்
 
நாக்கைதாண்டி தொண்டையில் நுழைய எத்தணிக்கும் ஒரு சில  கெட்ட  பாக்டீரியக்களை தொண்டையினுள் இருபுறமும் துவாரபாலகர்களைப்போல  அமைந்திருக்கும் டான்சில்கள் துவம்சம் செய்துவிடும்.

உணவை, மெல்ல, நிதானமாக சிறிது சிறிதாக  அரைத்து விழுங்கும்போது, டான்சில்களில் சுரக்கும் உடலின் பாதுகாப்புப்படை வீரர்களான ,  நோய்யெதிர்ப்புசக்திமிகுந்த , பலவித வெள்ளை அணுக்கள் , உணவில் உள்ள கெட்ட பாக்டீரியக்களை கொன்றுவிடுகின்றன.  (இதையும் தாண்டி வயிற்றுக்குள் செல்லும் சில  கெட்ட கிருமிகளை வயிற்றில் சுரக்கும் அமிலம் கவனித்துக்கொள்ளும்.)

இத்தனை பாதுகாப்பு செயல்பாடுகள் இருந்தும் டான்சில்களில் கிருமிதொற்று ஏன் ஏற்படுகிறது?  உணவினை  நன்றாக உமிழ்நீர்  கலந்து, மென்று சாப்பிடாததாலும், நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் காரணத்தினாலும், அளவுக்கு அதிகமாக கிருமித்தொற்று ஏற்படும் வகையில் நாம் உணவை தேர்ந்தெடுப்பதினாலும்தான்.
 
உணவை அள்ளி அள்ளி வாயினுள் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கினால்  பிரச்சினைதான்.


அகத்தின் அழகு வாயிலும் தெரியும் 

வாயினுள், நாக்கில், மற்றும் உதடுகளில் ஏற்படும்  சில புண்கள்,  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை உணர்த்தும் "குறிகள் " ஆகின்றன.

 நமது முறையற்ற உணவுப்பழக்கங்களினால் இரைப்பையில்  ஏற்படும் அதிக அமிலச்சுரப்பு - உதடுகளில் உண்டாகும் புண்கள், மற்றும் உதடுகளில் தோல் உரிதல் போன்றவைகளுக்கு   ஒரு  முக்கியமான காரணமாக அமைகிறது.

தவிர, நாக்கில்  புண்கள் ஏற்படுவதற்கு - உணவில் சத்துக்குறைபாடு, தூக்கமின்மை,  மற்றும் மன அழுத்தம் போன்றவை காரணங்களாகின்றன.

காய்கனிகள், மற்றும் உணவுப்பொருட்களின்   மீது  ஒட்டியிருக்கும் செயற்கையான பூச்சி  கொல்லி  மருந்துகளை, சரியான முறையில் சுத்தம் செய்யாமல் சமையலுக்கு பயன்படுத்துவது,  தொண்டையில் புண்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகிறது.


ஆரோக்கியம்  -  ஆரம்பம். 

           -  சிறந்த உணவு வகைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து
           -  சிறு சிறு கவளங்களாக வாயிலிட்டு
           -  நன்றாக பற்களால் அரைத்து  
           -  தாராளமாக உமிழ்நீர் கலந்து
           -  நாக்கினால் நன்கு சுவைத்து

            - சிறிது சிறிதாக உணவை உண்ணும் முறையினை நாம் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில்
   
                                           ஆரோக்கியம் ஆரம்பம்.2 comments:

  1. மிகப் பயனுள்ள தகவல்களை எளிமையாக விளக்கியுள்ளீர்கள் .

    மிக்க நன்றி!

    ReplyDelete
  2. வயிற்றில் பாதி வாயில்-சீரணம் முழுமை பெற மென்று தின்பதின் அவசியத்தை நன்கு விளக்கியுள்ளீர்கள்.ஆ.மதியழகன்.

    ReplyDelete