Monday, 21 April 2014

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்"

"அக்குபஞ்சர் என்று தலைப்பு தந்துவிட்டு, வாய், உமிழ்நீர், உணவு ஜீரணம் - என்று போக ஆரம்பித்து  விட்டதே- அக்குபஞ்சரைப்பற்றி மேலும் எப்போது எழுத ஆரம்பிப்பதாக உத்தேசம்? " என்பது சில  நண்பர்களின் கேள்வி.

அக்குபஞ்சர் என்பது, உடல் நலப் பிரச்சினைகளை தீர்க்கும் சிகிச்சை முறை மட்டுமல்லாது, நோய்கள் நம்மை அண்டவிடா வண்ணம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும், அற்புத சிகிச்சை ஆகும். "வருமுன் காப்போம்" - என்பதே நமது அக்குபஞ்சர் சிகிச்சையின் நிச்சயமான நோக்கமும் ஆகும்.

அக்குபஞ்சர் தத்துவப்படி, இரைப்பை "நிலம்" மூலகத்தின் ஓர் உறுப்பாகச் சொல்லப்படுகிறது.  இரைப்பை எனும் "மண்ணில்" போடும்  "விதையாகிய உணவு" நமது உடம்புக்கு தேவையான "சத்து" ஆக விளைகிறது என்பது உண்மை.

பொதுவாக, நமது ஜீரண மண்டலம் சரியாக செயல் பட்டாலே அறுபது முதல் எழுபது சதவிகித நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனவே, ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகளைப்பற்றியும், அவை செயல்படும் முறைகளைப்பற்றியும், சிறிதளவாவது நாம் அறிந்திருக்க  வேண்டியது அவசியமாகிறது. ஜீரணம் பற்றிய மிகவும் ஆழ்ந்த அறிவு எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை - அது அவசியமுமில்லை. ஓரளவு மேலோட்ட மாகவாவது தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

உணவு அருந்திய பின்னர், அது - சக்கையாக வெளியேறும் வரை நடைபெறும் அனைத்தும், நாம் உணராத வகையில், தன்னாலே நடைபெறும் " தானியங்கி" செயல்களாகும். நமது உடலின் "தன்னைத் தானே  குணப்படுத்திக்கொள்ளும் அற்புத சக்தி" சிறு சிறு பிரச்சினைகளை தானே சரிசெய்துகொள்ளும்.  ஆனால்,  ஜீரண மண்டலத்தில் ஏற்படும் அநேக பிரச்சினைகள், பல நாட்கள் கழித்தே நாம் உணரக்கூடியதாக  இருக்கும்.

குறைந்தது சுமார் பத்து  வருடங்களுக்கு முன்னர் வரை, நமது இல்லங்களில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு "முறை" இருந்தது. ஆசார அனுஷ்டானங்கள் என்ற  பெயரில் நாம் கடைப்பிடித்த பல நடைமுறைகள் நல்ல  உடல்  ஆரோக்கியத்தையே  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அரிசிச்சாதம் ஓரளவு பொதுவாக இருந்தாலும், குழம்பு வகைகள் தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும். ஒருமுறை வைத்த குழம்பு திரும்பவும் எட்டிப்பார்க்க குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது  ஆகும்.

இரவில் நகம் வெட்டக்கூடாது, எண்ணெய் தேய்த்து குளித்த அன்று பகலில் தூங்கக்கூடாது, நொறுங்கத் தின்றால் நூறு வயசு, கூழானாலும் குளித்துக் கூடி,  கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கோயிலில்லா  ஊரில் குடியிருக்க வேண்டாம்  ...... இப்படி பல சொற்கள் - எப்போதும் வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவை அனைத்தும் சுத்தம், சுகாதாரம் - என உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் அனைத்தையும் அள்ளி அள்ளித் தரும் ஆலோசனைகளாகவே  இருக்கும்.

தற்போதுள்ள  பரபரப்பான  வாழ்க்கையில், அநேக இல்லங்களில் அத்தகைய ஆலோசனைகள், குடும்ப உறுப்பினர்களின் காதில் விழ வாய்ப்புகள் மிகவும் குறைவு. எந்த ஒரு சந்தேகம் என்றாலும், வலைத்தளத்தில் தேடவே நாம் முயற்சி செய்கின்றோம்.

வயிற்றின் முக்கியமான பிரச்சினைகளாகிய, வயிறு உப்புசம்  - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல் - ஆகிய பிரச்சினைகளை, உணவு இடைவேளை  மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை சரியான முறையில்   கடைப்பிடித்தாலே தவிர்த்து விடலாம் என்பது நிச்சயமான உண்மை.

எனவே, அடுத்து நாம் பார்க்கப்போகும் தலைப்பு - இரைப்பை.

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்" 

No comments:

Post a Comment