Tuesday, 20 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, "அகத்தின் அழகு  முகத்தில் தெரியும்" என்னும்  பழமொழியின் அடிப்படையில்தான்.  பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே  படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் "நிலம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின்  வடிவத்தையொத்த "உதடு" அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது  உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.

இரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும்.  மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின்  அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள்  ஏற்படும்.

நிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் " மஞ்சள் " ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன்  ஏறக்குறைய இருக்குமானால்,  அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக்  கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.

தவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின்  அறிகுறியாக இருப்பினும், அதில் "நிலம்" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில்  இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக  உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு  நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில்  அதிகமாக கலப்பதினால்,  அதன் அறிகுறியாக "மரம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான "கண்"ணில்,  "நிலம்" மூலகத்தின் "மஞ்சள்" நிறம் வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை : இனிப்பு, துவர்ப்பு

"நிலம்" மூலகத்தின் சுவை இயல்பு  "இனிப்பு" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை"  மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது

பொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு "வலி"-யாக  உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு  முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற  ஆரம்பித்திருக்கும் அல்லவா?  சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே  அதனை  நாம்  உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் "நிச்சயம் இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின்  நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது  ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும்  ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி  எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் "போதும்- திகட்டிவிட்டது" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய  உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது"  என்று இனிப்பு சுவையை  ஒதுக்கினாலும், அல்லது  "  இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்" என்று  மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான "கேள்வி - பதில்" பகுதியிலேயே,  அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,  உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு  கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை  உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும்  வேண்டுமா?

                                              "வருமுன் காப்போம்"

Friday, 16 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :

நிலம் - மூலகம் :

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "நிலம்"  மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :   மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு "SP"

SPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும்  மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.

ஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality  & validity-  அங்கு சரிபார்க்கப் படுகிறது.

நிலமானது  எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச்  சிதைத்து, மறு சுழற்சிக்கு  தயார்ப்படுத்துகிறதோ,  அதேபோல்  இறந்த  மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை  சிதைத்து,  கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. "இரத்த  சிகப்பணுக்களின் கல்லறை" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை  அறிந்த நமது முன்னோர்கள் -  உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,  தமிழில் "மண்-ஈரல்"
என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தவிர, T- லிம்போசைட் மேலும்  B - லிம்போசைட்  ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய "நிணநீர் உறுப்பு" எனப்படுகிறது.

எப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.  இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும்  இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.

மண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் "யின்" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.


உட்புற இணை உறுப்பு :  இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு "ST"

எவ்வாறு, EARTH - நிலம் , மண்  - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை  - நாம் உண்ட உணவினை - "நொதியம்" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில்  - தயாரித்துத் தருகிறது.

மண்ணீரலின்   இணை  உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் "யாங்"   உறுப்பாக  அறியப்படுகிறது.

நிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின்  செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Thursday, 15 May 2014

பஞ்சபூத மூலகங்களின் குணாதிசயங்கள்

மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சையில், இருக்கும் நோய்களை குணப்படுத்துவதற்கும்,  வருமுன் காக்கும் வகையில் சிகிச்சை தருவதற்கும்  "உயிர் சக்தி ஒட்டப்பாதை"யில் அமைந்துள்ள  பஞ்சபூதங்களின் தொடர்பிலான அக்குபஞ்சர் புள்ளிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே பஞ்சபூதங்களான " நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம் " பற்றி நன்கு அறிந்திருக்க  வேண்டியது   மிகவும்  அவசியமாகிறது.

பஞ்சபூத மூலகங்களின் தனித்தன்மை, தனித்தனியே அவற்றின் குணாதிசயங்கள் ஒன்று  மற்றொன்றினுடன்  சேர்ந்து செயலாற்றும் விதம் ஆகியவற்றின் தெளிவு மிகவும் அவசியம்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் வலி நிவாரணப்புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை வலியினை நீக்குவது  மட்டுமல்லாது, அந்த வலி ஏற்படுவதற்குக் காரணமான பிர்ச்சினையினையும்  குணமாக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் பஞ்சமூலகங்களின் நிலையினை நாடிப்பரிசோதனை மூலம்  சோதித்தறிந்து, அதன் அடிப்படையில் தரப்படும் சிகிச்சையே  முழுமையானதாகும்.

எனவே, வரும் பதிவுகளில், நாம்  முதலில் தெரிந்துகொள்ளப்போகும் மூலகம் "EARTH - நிலம், மண் "


                                                         "வருமுன் காப்போம்"


Sunday, 11 May 2014

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?

நோயெதிர்ப்பு போராட்டம் 


"அக்குபஞ்சர் புள்ளிகள்"
தூண்டிவிடப்படுவதன் மூலம் செய்யப்படும், மருந்தில்லா மருத்துவம் எனும் அக்குபஞ்சர்  மருத்துவம், பஞ்சபூதங்கள் எனப்படும்  "நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்"  ஆகியவற்றின்  அடிப்படை சக்தியில் செயல்படுகிறது.

நாம் ஜீவித்திருக்கும் சதா சர்வ காலமும் நமது  உடல் நலம் பேணும் வகையில், பஞ்சபூத மூலகங்களின் ஒருங்கிணைந்த சீரான "செயல்பாடு" தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. "செயல்பாடு" என்று சொல்வதைவிட "போராட்டம்" என்று சொல்வது மிகவும் பொருந்தும். கண்ணிமைக்கும்  நேரம் கூட கவனப்பிசகில்லாமல், ஓர் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது உடலின் ஆரோக்கியத்திற்காக.

"அறுபடைவீடுகள்"


1. உடலெங்கும் அமைந்துள்ள நிணநீர் முடிச்சுக்கள் எனும்  போர்க்கூடாரங்கள்

2. போராட்ட வீரர்களான  "B-லிம்போசைட்"  வெள்ளை அணுக்களை  உற்பத்தி செய்து பயிற்சி தரும்  எலும்பு மஜ்ஜை

3. சிறுகுடலின் மூன்றாவது பகுதியான -  "இலியம்" பகுதியில் அமைந்திருக்கும், குடல் பகுதியினை பாதுகாக்கக்கூடிய வெள்ளையணுக்கள் நிரம்பிய "பேயரின் திட்டுக்கள்"

4. "மாக்றோபேகஸ் செல் " எனும் "பாதுகாப்பு நுண்ணுயிர்விழுங்கி" அமைந்துள்ள,  இரத்தத்தின் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்ட மண்ணீரல்.

5. வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்துப்போராடும்  "T-லிம்போசைட்" - எனப்படும் பாதுகாப்பு செல்களுக்கு "இராணுவப்பயிற்சி" தரும் "தைமஸ் சுரப்பி"

6. நாம் அருந்தும் எந்த உணவானாலும், அதில் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவை இருந்தால்  அவற்றுடன் போராடுவது, மேலும்,  நாசி மற்றும் வாய் வழியே சுவாசக்குழாயினுள் நுழைய எத்தனிக்கும்  கிருமிகளை செயலிழக்கச் செய்வது என கோவிலின் கருவறைக்கு பாதுகாப்பாக இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் போல், தொண்டையின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் - "டான்சில்ஸ்"

இவ்வாறாக, ஆறு படைத்தளங்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனின் , "அறுபடைவீடுகள்" எனும் வகையில்  அமைந்துள்ளன.  "யாமிருக்க பயம் ஏன்?" என்று பகை விரட்டி அபயம் தரும் இறைவனின் கருணைக்கு  ஈடாக, உடலுக்கு பகையான கிருமிகளை எதிர்த்துப்போராடும் அற்புத அமைப்புகளாகும் அவை.  நமக்கு  இயற்கை அளித்துள்ள இந்த பாதுகாப்பு கவசம் நன்றாக செயல்பட்டாலே போதும் - நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

 

உணவு, உழைப்பு, உறக்கம்  


உணவு, உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நன்னெறியில் முறைப்படுத்திக் கொண்டாலே நமது உடலில்  அமைந்துள்ள அனைத்து பாதுகாப்புக் கவசங்களும் முழுமூச்சுடன் செயல்பட ஏதுவாகும்.

நல்ல பழக்க வழக்கங்களை தவறவிடும்போது, பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடு திறம்பட இயங்க  முடியாத நிலை ஏற்பட்டு, " உயிர் சக்தி ஒட்டப்பாதையில்" அடைப்புகள் ஏற்பட்டு - அதனால் நோயெதிர்ப்பு  சக்தி சரியான முறையில் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?


 பிரச்சினையிலிருந்து மீண்டுவர, அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் எளிதான, பக்கவிளைவற்ற  மருத்துவமுறையாக அமைகிறது. "அக்குபஞ்சர் புள்ளிகள்" நமது உடலை காக்கும் அற்புத சக்தி  வாய்ந்தவை. அவற்றைமுறையாக  அக்குபஞ்சர் சிகிச்சை மூலம், தூண்டிவிடுவதனால் பஞ்ச பூதங்களின் செயல்திறனை முடுக்கி  விடலாம். அதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும்  பெறலாம்.

மேலும், நீடித்த,  நிலைத்த ஆரோக்கியத்திற்கு  - "உணவு, உழைப்பு, உறக்கம்"  இம்மூன்றின் முறையான பழக்க  வழக்கங்களை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
                               

                                                          "வருமுன் காப்போம்"

 

 

Thursday, 8 May 2014

அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

அக்குபஞ்சர் - 
இயற்கை வைத்தியம்
ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

 

பிரபஞ்சம் ஓர் "முழுமை


"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு  உணரப்படும்" என்ற இணையதளத்தில் படித்த  சிலந்தி வலைத் தத்துவம் ("SPIDER WEB PHILOSOPHY")

மற்றும்

"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா? " என்ற 1972ம் ஆண்டின்  "கேயாஸ் தியரி " (CHAOS THEORY")
- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன?
 
பிரபஞ்சம் ஓர் "முழுமை"
அதன்  அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் "முழுமை"
     
 "பிரபஞ்சம்" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள்  "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" என்று.

பூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன.  அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி  மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது  - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் "முழுமைத்தன்மை" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுகள்தான்  இவை  யாவும்.

இதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு "முழுமை"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த "முழுமை" எனப்படுவது வேறொன்றும் அல்ல;    நமது "நலம்" எனும் "ஆரோக்கியம்" தான்.

ஆக்கும் சுற்று 


"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

         நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)
         நிலத்தினுள் உருவாவது  உலோகம்
         உலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்
         நீரின் தன்மையால் வளருவது மரம்
         மரங்கள் உராய்வதினால் உண்டாவது  நெருப்பு
        மறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......

தவிர,  ஒரு மூலகக்திலிருந்து  மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் "தாய் மூலகம்"  எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் "சேய் / மகன் மூலகம்" என அழைக்கப்படுகிறது.

       "தாய்" மூலகம்             "சேய்" மூலகம்

            நெருப்பு                         -      நிலம் 
            நிலம்                              -      உலோகம்
            உலோகம்                     -      நீர் 
            நீர்                                     -      மரம்
            மரம்                                -      நெருப்பு



  


இவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது "ஆக்கும் சுழற்சி " (GNERATING CYCLE)  அல்லது சீனத்தில் Sheng Cycle  எனப்படும்.

அழிக்கும் சுற்று 


சில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் "தாயின் தாய் மூலகம்", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இவ்வகையில் -

  மரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.
  நிலமானது, தேவைக்குமேல்  நீரினை -  உறிஞ்சிக் கொள்கிறது.
  நீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.
  நெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது
  உலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.




இந்தச்சுழற்சி "அழிக்கும் சுற்று" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle  எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான  செயலாகவும் அமைகிறது. எனவே இது "கட்டுப்படுத்தும் சுற்று" எனவும் சொல்லப்படுகிறது.


எதிர் வினை சுற்று

 


ஒரு மூலகத்தின்  "சேயின் சேய் மூலகம்"  அம்மூலகத்தின் மீது எதிர் வினை  புரியவும் செய்கிறது.

அதாவது,

நிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.
நீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.
உலோகமாகிய காற்றானது நெருப்பை அனைத்து விடுகிறது.
மரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.

பஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான "நாடிப்பரிசோதனை"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர்  புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.



                                                         "வருமுன் காப்போம்"

 

 

 

 

Wednesday, 7 May 2014

அக்குபஞ்சர் - பஞ்சபூதங்கள்

அண்டமும்  பிண்டமும் ஒன்றே


ஆகாயம், நெருப்பு, நிலம், காற்று, நீர் - ஆகிய பஞ்சபூதங்கள்தான் "அண்டம்" (GALAXY-MACROCOSM) எனப்படும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகள் ஆகும். "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" - என்ற வகையில், அண்டத்தின் ஒரு துகளாகிய பூமியாகிய உலகமும், உலகத்தின் ஓர் அங்கமாகிய,  மனிதராகிய (HUMAN-MICROCOSM)   நாமும்   அதே ஐந்து  மூலக்கூறுகளால்  உருவாக்கப்  பட்டவர்கள்தாம்.

ஐந்து மூலகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒரு முழுமையான சக்தியாக - நமது பிரபஞ்சம், உலகம், நமது உடல் ஆகியவற்றில்  "உயிர் சக்தி" யாக ஓடி இயக்கிக்கொண்டிருக்கிறது.

சீன அக்குபஞ்சரில், பஞ்ச பூதங்களில், "ஆகாயம்"  மூலகத்தை  "மரம்" என்றும் "காற்று" மூலகத்தை  "உலோகம்" என்றும் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

எனவே,
      மரம்  (Wood)
     நெருப்பு  (Fire)
     நிலம்  (Earth)
     உலோகம் (Metal)
     நீர்  (Water)
    
ஆகிய ஐந்தும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதங்கள்" அல்லது "ஐந்து மூலகங்கள்" ஆகும்.

நமது உடலின் உயிர்சக்தி நிலைத்திருக்கும் வண்ணம் செயல்படும் பன்னிரண்டு பிரதான உள்ளுறுப்புகள், அவற்றின் இயல்பினை கருத்தில் கொண்டு, பஞ்சபூதங்களின் தன்மை கொண்டதாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

யின்-யாங் தத்துவப்படி, ஒவ்வொரு மூலகத்திலும் ஒரு யின் மற்றும் ஒரு யாங் உறுப்பு உண்டு. யின்-யாங் உறுப்புகள்  "சாங்க் - ஃபூ" - (ZANG-FU) உறுப்புகள் எனவும் சொல்லப்படும்




"நெருப்பு"  மூலகத்தில் மட்டும்  இரண்டு  ஜோடி  உறுப்புகள் அமைகின்றன.

"இருதயம்" மற்றும் அதன் இணை உறுப்பான "சிறுகுடல்" ஜோடியினை "பெரிய நெருப்பு" - BIG FIRE - எனவும், "இருதய மேலுறை" மற்றும் அதன் இணை  உறுப்பான "மூவெப்பமண்டலம்"  ஜோடியினை "சிறிய நெருப்பு" - SMALL FIRE - எனவும் நாம் பிரித்தறிந்து கொள்ளலாம்.


Wednesday, 30 April 2014

"யின் -யாங்" - தத்துவம்

நமது சிவ-சக்தி தத்துவத்தை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான்  சீன "யின் -யாங்"  (yin-yang)-தத்துவம்   எனலாம்.  "யின்" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும்  "எதிர்மறை சக்தி" மற்றும் "யாங்" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் "நேர்மறை சக்தி" ஆகும். "யின் -யாங்" இவ்விரண்டின் நுண்ணியமான  "சேர்ந்து இயங்கும்" தன்மைதான்   நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

யின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு,  நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள்  ஏற்பட்டு உடல்  நலக்குறைவு உண்டாகிறது.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம்  சீராகிறது.

"உடல் நலக்குறைவு" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் "யின்-யாங்"   இணைந்து நடத்தும்   போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. இதனை தனிப் பதிவாக பார்ப்போம்.



யின்-யாங் குணங்கள்:

       யின்                  -            யாங்

நெகட்டிவ்                  -   பாசிடிவ்
பெண் தன்மை         -     ஆண் தன்மை
கெட்டியானது         -    பை போன்று குழிவானது
குளிர்                           -   வெப்பம் 
இருட்டு                      -    வெளிச்சம்
கருப்பு                         -    வெள்ளை
மந்தம்                         -    சுறுசுறுப்பு
இடது                           -    வலது


யின்-யாங் செயல் தன்மைகள்


இரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல்  இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல்  "யின்" மட்டும் தனியாகவோ அல்லது "யாங்" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை.
எந்த ஒரு "யின்"னும் சிறிதளவாவது "யாங்" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு "யாங்"கும் சிறிதளவாவது "யின்" இல்லாமல் இருப்பதுமில்லை.

இரண்டும் எப்போதும் "சம அளவு"  "நிலையாக" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன.

ஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ-  மற்றொன்றின்  இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும்.

உடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

"யின்- யாங்" தத்துவம்  - ஒரு சாகச வித்தை
 

ஒரு எளிதான உதாரணம், "யின்-யாங்"கின் இயக்கத்தினை தெளிவுறச்செய்யும் முயற்சியாக தருகிறேன். எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஒருவர் கம்பியின் மீது நடக்கும் சாகசச்செயலை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர் நடக்கையில், சமநிலை பாதிக்கப்படும்போது, புவிஈர்ப்பு விசையினை சரிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சியை நினைவுகூருங்கள்.

இடப்பக்கம் சாய நேரும்போது, வலப்பக்கம் சற்று உடலை வளைத்து, கூடவே வலது காலினை சற்று உயர்த்தி, கம்பிக்கு  வலது பக்கமாக எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, உடல் சம நிலைப்படும் அதேகணமே, வலது காலை இறக்கி புவி ஈர்ப்பை சமணம் செய்கிறார். சிறிது கூட இடைவெளி இல்லாமல் நடைப்பயணம் முடியும் வரை அவரது இட-வலது போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் - ஒருவரின் வாழ்க்கை முழுவதும் அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவரது  'யின்-யாங்" நடத்தும் போராட்டத்தைப் போலவே.

    

                                                 "வருமுன் காப்போம்"