Sunday, 11 May 2014

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?

நோயெதிர்ப்பு போராட்டம் 


"அக்குபஞ்சர் புள்ளிகள்"
தூண்டிவிடப்படுவதன் மூலம் செய்யப்படும், மருந்தில்லா மருத்துவம் எனும் அக்குபஞ்சர்  மருத்துவம், பஞ்சபூதங்கள் எனப்படும்  "நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்"  ஆகியவற்றின்  அடிப்படை சக்தியில் செயல்படுகிறது.

நாம் ஜீவித்திருக்கும் சதா சர்வ காலமும் நமது  உடல் நலம் பேணும் வகையில், பஞ்சபூத மூலகங்களின் ஒருங்கிணைந்த சீரான "செயல்பாடு" தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. "செயல்பாடு" என்று சொல்வதைவிட "போராட்டம்" என்று சொல்வது மிகவும் பொருந்தும். கண்ணிமைக்கும்  நேரம் கூட கவனப்பிசகில்லாமல், ஓர் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது உடலின் ஆரோக்கியத்திற்காக.

"அறுபடைவீடுகள்"


1. உடலெங்கும் அமைந்துள்ள நிணநீர் முடிச்சுக்கள் எனும்  போர்க்கூடாரங்கள்

2. போராட்ட வீரர்களான  "B-லிம்போசைட்"  வெள்ளை அணுக்களை  உற்பத்தி செய்து பயிற்சி தரும்  எலும்பு மஜ்ஜை

3. சிறுகுடலின் மூன்றாவது பகுதியான -  "இலியம்" பகுதியில் அமைந்திருக்கும், குடல் பகுதியினை பாதுகாக்கக்கூடிய வெள்ளையணுக்கள் நிரம்பிய "பேயரின் திட்டுக்கள்"

4. "மாக்றோபேகஸ் செல் " எனும் "பாதுகாப்பு நுண்ணுயிர்விழுங்கி" அமைந்துள்ள,  இரத்தத்தின் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்ட மண்ணீரல்.

5. வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்துப்போராடும்  "T-லிம்போசைட்" - எனப்படும் பாதுகாப்பு செல்களுக்கு "இராணுவப்பயிற்சி" தரும் "தைமஸ் சுரப்பி"

6. நாம் அருந்தும் எந்த உணவானாலும், அதில் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவை இருந்தால்  அவற்றுடன் போராடுவது, மேலும்,  நாசி மற்றும் வாய் வழியே சுவாசக்குழாயினுள் நுழைய எத்தனிக்கும்  கிருமிகளை செயலிழக்கச் செய்வது என கோவிலின் கருவறைக்கு பாதுகாப்பாக இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் போல், தொண்டையின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் - "டான்சில்ஸ்"

இவ்வாறாக, ஆறு படைத்தளங்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனின் , "அறுபடைவீடுகள்" எனும் வகையில்  அமைந்துள்ளன.  "யாமிருக்க பயம் ஏன்?" என்று பகை விரட்டி அபயம் தரும் இறைவனின் கருணைக்கு  ஈடாக, உடலுக்கு பகையான கிருமிகளை எதிர்த்துப்போராடும் அற்புத அமைப்புகளாகும் அவை.  நமக்கு  இயற்கை அளித்துள்ள இந்த பாதுகாப்பு கவசம் நன்றாக செயல்பட்டாலே போதும் - நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

 

உணவு, உழைப்பு, உறக்கம்  


உணவு, உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நன்னெறியில் முறைப்படுத்திக் கொண்டாலே நமது உடலில்  அமைந்துள்ள அனைத்து பாதுகாப்புக் கவசங்களும் முழுமூச்சுடன் செயல்பட ஏதுவாகும்.

நல்ல பழக்க வழக்கங்களை தவறவிடும்போது, பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடு திறம்பட இயங்க  முடியாத நிலை ஏற்பட்டு, " உயிர் சக்தி ஒட்டப்பாதையில்" அடைப்புகள் ஏற்பட்டு - அதனால் நோயெதிர்ப்பு  சக்தி சரியான முறையில் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?


 பிரச்சினையிலிருந்து மீண்டுவர, அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் எளிதான, பக்கவிளைவற்ற  மருத்துவமுறையாக அமைகிறது. "அக்குபஞ்சர் புள்ளிகள்" நமது உடலை காக்கும் அற்புத சக்தி  வாய்ந்தவை. அவற்றைமுறையாக  அக்குபஞ்சர் சிகிச்சை மூலம், தூண்டிவிடுவதனால் பஞ்ச பூதங்களின் செயல்திறனை முடுக்கி  விடலாம். அதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும்  பெறலாம்.

மேலும், நீடித்த,  நிலைத்த ஆரோக்கியத்திற்கு  - "உணவு, உழைப்பு, உறக்கம்"  இம்மூன்றின் முறையான பழக்க  வழக்கங்களை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
                               

                                                          "வருமுன் காப்போம்"

 

 

No comments:

Post a Comment