Tuesday, 20 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, "அகத்தின் அழகு  முகத்தில் தெரியும்" என்னும்  பழமொழியின் அடிப்படையில்தான்.  பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே  படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் "நிலம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின்  வடிவத்தையொத்த "உதடு" அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது  உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.

இரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும்.  மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின்  அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள்  ஏற்படும்.

நிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் " மஞ்சள் " ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன்  ஏறக்குறைய இருக்குமானால்,  அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக்  கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.

தவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின்  அறிகுறியாக இருப்பினும், அதில் "நிலம்" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில்  இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக  உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு  நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில்  அதிகமாக கலப்பதினால்,  அதன் அறிகுறியாக "மரம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான "கண்"ணில்,  "நிலம்" மூலகத்தின் "மஞ்சள்" நிறம் வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை : இனிப்பு, துவர்ப்பு

"நிலம்" மூலகத்தின் சுவை இயல்பு  "இனிப்பு" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை"  மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது

பொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு "வலி"-யாக  உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு  முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற  ஆரம்பித்திருக்கும் அல்லவா?  சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே  அதனை  நாம்  உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் "நிச்சயம் இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின்  நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது  ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும்  ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி  எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் "போதும்- திகட்டிவிட்டது" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய  உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது"  என்று இனிப்பு சுவையை  ஒதுக்கினாலும், அல்லது  "  இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்" என்று  மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான "கேள்வி - பதில்" பகுதியிலேயே,  அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,  உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு  கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை  உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும்  வேண்டுமா?

                                              "வருமுன் காப்போம்"

1 comment:

  1. Bet365 Casino Review (2021) | Claim Your £300
    Bet365 Casino Review. Up to 토토 검증 먹튀 랭크 £300 Welcome 카카오스포츠 Bonus. Play with a maximum of £10 free bet for av 보는 곳 a mlb 분석 minimum of 수 있습니다 £10.

    ReplyDelete