Monday, 21 April 2014

இரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.

இரைப்பை - அமைப்பு 


ஆங்கில எழுத்து "J" - இன்  வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும்  தன்மையுடையது இரைப்பை. நன்கு வளர்ந்த ஒருவரது இரைப்பையின் கொள்ளளவு மிகவும் சுருங்கிய - உணவு எடுத்துக்கொள்ளாத - நிலையில் சுமார் 50 மிலி- யாகவும்,  உணவு அருந்திய நிலையில்  கொள்ளளவு சுமார் 1500 மிலி - யாகவும் இருக்கும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்ட நிலையில் சுமார் 4000 மிலி அளவுவரை கூட விரியும் தன்மையுடையது.

"FUNDUS " எனப்படும் உதரவிதானத்தை ஒட்டிய (இடது பக்க) மேற்புடைப்பு
உடல் பகுதி
பைலோரிக் அறை
பைலோரிக் குழாய் பகுதி

     - என நான்கு பகுதிகளாக பிரித்து அறியப்படுகிறது - இரைப்பை.

இரைப்பையானது,  உட்புறச்சுவரான "ம்யூகோசா" உள்ளிட்ட நான்கு அடுக்கு தசைச்சுவர்களைக்கொண்டது. உணவுக்கேற்ப - இரைப்பைநீர், மற்றும் அமிலங்கள் சுரப்பதற்கு ஏற்பவும், உணவை அரைக்கவும்,  அரைக்கப்பட்ட உணவினை சிறுகுடலுக்குள் செலுத்துவதற்குமாக - அமைந்திருக்கும் மூன்று தனித்தன்மை  வாய்ந்த தசை அமைப்புகள், இரைப்பையின் சிறப்பாகும்.

கார்டியாக் திறப்பு எனும் சுருக்கு தசை இரைப்பையின் ஆரம்பமாக அமைந்திருப்பது போல், இரைப்பையின்  முடிவில் பைலோரிக் சுருக்கு தசை, சிறுகுடலின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

இரைப்பை - சுரப்புகள் - செயல்பாடுகள்


நாம் உண்ணும் உணவினை ஜீரணிக்க நாளொன்றுக்கு சுமார் 1.5 லிட்டர் இரைப்பை நீர் அல்லது ஜீரண நீர்  சுரக்கின்றது. ஜீரண நீரில் 99.5% நீரும்  0.5% நொதியங்களும் அடங்கியுள்ளன. உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட உணவுடன்  மேலும் ஜீரண நீர் கலந்து, ஒரு நல்ல கலவை இயந்திரம்  போல செயல்படுகிறது இரைப்பை. இரைப்பையின் கடைதல் ( churning ) போன்ற அசைவுகள்  உணவை  மேலும் சிறு துகள்களாகச் செய்கின்றன

ஜீரண நீரில் உள்ள ஹைடிரோகுளோரிக் அமிலம், மற்றொரு சுரப்பான "பெப்சினோஜென்" எனும்  நொதியத்தை "பெப்ஸின்" ஆக மாற்றுகிறது. பெப்ஸின் புரோட்டீன் எனும் புரதச் சத்தின் மீது வினை புரிந்து  ஜீரணிக்க வகை செய்கிறது.

கார்போஹைடிரேட் எனும் மாவுச் சத்து, மற்றும் கொழுப்புச் சத்துக்கள், சிறு குடலில்தான்  உறிஞ்சப்படுகின்றன. இரைப்பையில் தண்ணீர், மது மற்றும் சில இரசாயனங்கள், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்,  குறைந்த  அளவில் உறிஞ்சப்படுகின்றன.

Intrinsic factor - எனும் ஒரு சுரப்பு,  விட்டமின் B 12 சத்தினை குடல் உறிஞ்சுவதற்கு ஏற்ப வழி  வகுக்கிறது.

ஹைடிரோகுளோரிக் அமிலம் - உணவுடன் கலந்து வரும் சில கெட்ட நுண்ணுயிரிகளை  கொன்றுவிடுவதுமட்டுமல்லாமல், உடலுக்கு தீங்கு செய்யும் சில இரசாயனங்களை  செயலிழக்கச்செய்கிறது.

" கேஸ்டிரின் " - எனும் ஹார்மோன் சுரப்பு, இரைப்பை ஜீரணநீர் செவ்வனே சுரக்கச் செய்கிறது

உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட -  வாயிலிட்டு அரைக்கப்பட்ட உணவு, மேலும் கூழாக்கப்பட்டு,  பைலோரிக் திறப்பு மூலம் சிறிது சிறிதாக சிறு குடலுக்கு அனுப்பப்படுகிறது.

வயிற்றுப்பொருமல்- வயிறு உப்புசம் - ஏப்பம் - நெஞ்செரிச்சல்


பொதுவாக, உணவு அருந்திய பின் அளவாக ஏப்பம் வருவது இயற்கை. ஆனால், ஒரு சிலருக்கு,  வயிறு  உப்பிக்கொண்டு,  அதிக ஏப்பம் வருவது ஏன்?  - கொழுப்பு பதார்த்தங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வது  ஒரு முக்கிய காரணம்.  சோடா போன்ற கார்பனேட்டெட் பானங்கள் மற்றும் வாயுவை அதிகரிக்கச்செய்யும்  உணவு வகைகள் - அதிக ஏப்பம் வருவதற்கு மற்றொரு காரணம்

அவசர அவசரமாக சாப்பிடுவது - உணவை மெல்லாமல்  அப்படியே விழுங்குவது - பேசிக்கொண்டே  உணவு அருந்துவது, ஆகியவையும் காரணங்களாகும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்டு,  இரைப்பையை திணறச்செய்வது - மிக முக்கியமான  காரணம்.

இரைப்பையின் "பண்டஸ்" என்ற இடது பக்க மேல் புடைப்பு, நாம் ஒரு நேரத்தில் எவ்வளவு உணவு  எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கிறது. அந்த மெக்கானிசம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

இறைவன், ஒவ்வொருவருக்கும் அவரவரின் உடலமைப்புக்கு தகுந்தவாறே அணைத்து  உறுப்புக்களையும் தந்திருக்கிறார். கைகள், கால்கள், விரல்கள் மற்றும் யாவும் அவரவர் உடல் சிறப்பாக இயங்கும் வகையில்  கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அவரவர் கை அளவிற்கு அவரவர் உடம்பு எட்டு ஜாண் அளவு தான். சந்தேகமிருந்தால் அளந்து  பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு (இரைப்பை) ஒரு ஜாண் அளவு தான். வயிற்றின் கொள்ளளவு உடலின் தேவைக்கேற்ப டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

நாம் முறையாக உணவு அருந்தும்போது - அதிகமாக வாயுவை அதிகரிக்கச்செய்யாத வகையில் உணவினை தேர்ந்தெடுத்து  மற்றும் உதடுகளை மூடி, நன்றாக உமிழ்நீர் கலந்து சுவைத்து, மென்று உண்ணும் போது - இரைப்பையில் உணவு உடலின் தேவைக்கேற்ற  கொள்ளளவு அடைந்த  நிலையில் - இரைப்பையானது, இதற்கு மேலும் உணவு தனக்குள் வந்தால், தான் சிரமப்பட வேண்டியதிருக்கும்  என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, தான் விரிவடைவதை சற்று நிறுத்திக்கொண்டு,  "பண்டஸ்" பகுதியில்  இருக்கும் காற்றினை அதாவது வாயுவை ஏப்பமாக வாயின் வழியே வெளியேற்றுகிறது. அது ஒரு திருப்தியான ஏப்பமாக இருக்கும்.

அந்த ஏப்பத்தின் " அர்த்தம் " என்னவென்று புரிகிறதா?  "இதுதான் அளவு, இவ்வளவு தான் என் திறன்,  இதற்குமேல் என்னால் இயலாது, நிறுத்திக்கொள் இத்துடன் "  என்று நமக்கு உணர்த்துகிறது அந்த ஏப்பம்.  ஓரளவு நன்றாக உணவு அருந்திய நிலையில்  நமது உடல் நம்முடன் நடத்தும் உரையாடல் தான் அந்த  ஏப்பம் - வயிற்றின் மொழி. அதனைப் புரிந்து கொண்டு நாம் நடந்தால் வயிற்றுக்கு ஏது துன்பம்?

வயிறு துன்பப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம்,  சாப்பிடும் பொழுது - அல்லது சாப்பிட்ட  உடனே - அதிக நீர் அருந்துவது ஆகும்.

உணவுடன் தண்ணீர் எவ்வளவு அருந்தலாம்?


உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே நீர் அருந்துவதை நிறுத்தி விடுவது மிகவும்  நல்லது. அப்போதுதான் இரைப்பையில் சுரக்கப்படும் ஜீரணநீர் தரமானதாக இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும், உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதும் கூடாது. உணவு அருந்தி முடிந்த  பின்னரும் நிறைய நீர் அருந்துவதும், இரைப்பையின் செயலை முடக்கச் செய்து வயிறு உப்புசம் - அதிக  ஏப்பம் - ஆகியவற்றுக்கு காரணமாகின்றது.

உணவு அருந்தும் போது தாகம் எடுத்தால் என்ன செய்வது? தாகத்தை அலட்சியம் செயலாகாது. தண்ணீர்  குடித்தேயாக வேண்டும். ஆனால் - உணவை நன்றாக மென்று, நிறைய உமிழ்நீர் கலந்து நிதானமாக   விழுங்கும்போது தாகம் மற்றும் விக்கல் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

உணவு அருந்தி முடிந்த பின்னர் அதிக நீர் அருந்தினால், இரைப்பையின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு  ஜீரணக்குறைபாடு ஏற்படுகிறது. வயிறு உப்புசம் ஏற்படுகிறது. கூடவே எடுத்துக்கொண்ட உணவில் அதிக  கொழுப்பு பதார்த்தங்கள் இருக்குமேயனால், வயிற்றுப்பொருமல் ஏற்படுவதுடன் அதிக ஏப்பம் வரவும்  காரணமாகிறது.

உணவை நன்றாக மென்று, நன்கு உமிழ்நீர் கலந்து,  நிதானமாக, அளவாக உணவு அருந்தி முடித்திருக்கும்  பட்சத்தில், அரை டம்ளர் அல்லது அதற்கும் குறைவாகவே நீர்  அருந்தினால் போதுமானது.

நாம் அருந்திய உணவினை,  இரைப்பை நன்கு அரைத்து, சிறுகுடலில் நடைபெறவிருக்கும் ஜீரணத்திற்கு  தயார்ப்படுத்துவதற்கு, சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை கூட ஆகலாம். அந்த  ஜீரணம் நடைபெற்றுக்கொண்டிக்கும் நேரத்தில் நாம் அதிக தண்ணீர் அருந்துவோமேயானால்,  இரைப்பையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.

இரைப்பையில் ஜீரணம் நடந்து கொண்டிருக்கும்பொழுதில், இடையில் ஏதாவது காபி, டீ போன்ற  பானங்கள், அல்லது நொறுக்கு தீனி எடுப்போமேயானால், வயிறு மிகவும் குழம்பிய நிலையில், என்ன  செய்வது என்று தெரியாமல், சரியாகச் செயல்பட இயலாமால் ஆகிவிடும்.

பிறகென்ன? அனுபவிக்க வேண்டியது தான் !

நிறைய உணவு + அதிக தண்ணீர் = நெஞ்செரிச்சல்


இரைப்பையில் உணவு நிரம்பிய நிலையில் அதிக தண்ணீர் அருந்தினால் ஜீரணக்கோளாறு மட்டுமல்ல,  நெஞ்செரிச்சல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" என்னும் சுருக்கு  தசையினைத் தாண்டி உணவுக் குழாயினுள், இரைப்பையில் அரைகுறையாக அறிக்கப்பட்ட உணவுக்  குழம்பு எட்டிப் பார்க்கிறது. இந்த உணவுக் குழம்பி‌ல் இப்போது அமிலம் கலக்கப்பட்டிருக்கிறது.

இரைப்பையின் உட்புறச்சுவர், தான் சுரக்கும் அமிலத்தை தான் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது. எனவே அங்கு  பாதிப்பில்லை. ஆனால், உணவுக்குழாயின் உட்பக்கத்தில் உள்ள சளிச்சவ்வுப்படலம்  அமிலத்தின் அரிக்கும் தன்மையை, தாங்கிக்கொள்ள இயலாமல், பாழடைகிறது. இந்த நிகழ்வைத்தான்  நாம் நெஞ்செரிச்சலாக உணருகிறோம்.

நெஞ்செரிச்சல் - திரும்ப திரும்ப நிகழும்போது, அது முற்றினால் "ஹயாடல்  ஹெர்னியா" - மேலும்  முற்றினால் "கேன்சர்" உருவாகவும் வாய்ப்பு உண்டென்று சொல்லப்படுகிறது.

வயிறு முட்ட முட்ட " உணவு",  " குளிர் பானங்கள்", " உணவு அருந்திய பின் அதிக  தண்ணீர்" - என  எதுவாக இருந்தாலும், அனைத்தும் ஒரே பிரச்சினைக்குத்தான் காரணமாகிறது,  அது -  நெஞ்செரிச்சல்.

தண்ணீர் எப்போது அருந்தலாம்?


எப்போது தாகம் எடுத்தாலும்  அதை அலட்சியம் செய்தல் ஆகாது. கண்டிப்பாக நீர் அருந்தியே  ஆகவேண்டும் பொதுவாக, உணவு உட்கொண்ட பின், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இரைப்பைக்கு தண்ணீர்  தேவையானால், நமக்கு தாக உணர்வு வரும். அப்போது ஒரு டம்ளர் நீர் அருந்தலாம்.

இடையில் தாகம் எடுக்காதபட்சத்தில், உணவு உண்ட இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் கழித்து, அரைக்கப்பட்ட உணவு சிறு குடலுக்குள் செலுத்தப்படும் நேரத்தில், கண்டிப்பாக தாக உணர்வு வரும்.  அப்போது இரண்டு டம்ளர் வரை நீர் அருந்தலாம் - அருந்த வேண்டும்.

பொதுவாக இட்லி, இடியாப்பம் போன்ற அரிசிமாவினால் அவித்து சமைக்கப்பட்ட உணவு( அளவாக  உட்கொண்டிருக்கும் பட்சத்தில்) ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் இரைப்பையை கடந்து  விடக்கூடும். எண்ணெய் தடவி சுட்ட தோசை மற்றும் சப்பாத்தி ஜீரணமாக மேலும் அரைமணிநேரம்  அதிகமாகலாம்.  அரிசிசாதம், குழம்பு, காய்கனிக்கூட்டு என அமைந்த மதிய உணவு- காய்கனிகளின்  வேக்காட்டைப்பொருத்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கேட்கலாம். எண்ணெய் மற்றும்  டால்டா சேர்த்து சமைக்கப்பட்ட , சைவ அசைவ பிரியாணி வகைகள் மூன்று முதல் நான்கு மணி நேரம்  வரை கூட எடுத்துககொள்ளக்கூடும்.

நாம் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொண்டிருக்கிறோம்? அதனை இரைப்பை ஜீரணிக்க எவ்வளவு  நேரம் ஆகும்? - என்பதை ஒவ்வொருவரும் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, அறிந்து கொள்ள  வேண்டியது மிகவும் அவசியம்.

சில வகை உணவுடன் - சில உணவு வகைகள் அருந்தும் போது ஜீரணம் கெடுவதுடன் மொத்த  வயிற்றையும் பாதிக்கக்கூடும் என்பதால், ஒரே நேரத்தில் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய  உணவுப்பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பாக கவனம் தேவை. எந்தெந்த உணவுடன் எந்தெந்த உணவினை சேர்த்து அருந்தக்கூடாது என்பதை நாம் தனிப் பதிவாகப் பின்னர் பார்க்கலாம்.

எப்போதும் தண்ணீர் அருந்தும்போது,  அண்ணாந்த வாக்கில் மட மடவென குடித்துவிடலாகாது.  தண்ணீருக்கென்று ஒரு தனிச்சுவை உண்டு.  அதை நாவில் உணரவேண்டும். ஒவ்வொரு மிடறாக வாயில்  ஊற்றி, உதடுகளை மூடி,  தண்ணீரை நாவினால் சுவைத்து, உமிழ்நீர் கலந்துதான் அருந்த வேண்டும்.

இரவு உணவு


பகலில் பசியறிந்து உண்ணுதல் எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல் மிகவும் முக்கியம்.  இரவு தாமதமாக உண்ணப்படும் உணவின் கழிவுகள், காலையில்  வெளியேறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்பதால், பெருங்குடலில் மலக்கழிவுகள் தங்கிவிட  நேரிடுகிறது.  இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, பல பிரச்சினைகள் உருவாக ஏதுவாகின்றது.

சிறுகுடல்- பெருங்குடல்:


உணவை நன்றாக  மென்று  உண்ணுதல்
பசியறிந்து உண்ணுதல்
உண்ட உணவு ஜீரணமானதை அறிந்து அடுத்த வேளை உணவு உண்ணுதல்
இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல்
உணவுடன் அதிக தண்ணீர்  அருந்தாதிருத்தல்

       - என மேற்கூறிய அனைத்தையும் சரியாக கடைப்பிடிக்கும்போது, சிறுகுடல் மற்றும் பெருங்குடலின்  வேலைகள் எளிதாகின்றன. மேலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ஏற்படும் உந்துதல் உணர்வை மதித்து  நாம் நடப்போமேயானால் ஜீரணப்பாதையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

"வருமுன் காப்போம்"

2 comments:

  1. உணவு உண்ணும் முறையும்,நீர் அருந்தும் முறையும் நன்கு விளக்கப் பட்டுள்ளது.ஆ.மதியழகன்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்

    ReplyDelete