Tuesday, 1 July 2014

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி   - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை  இப்பதிவில்  பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"


எனக்கு நன்றாக நிணைவிருக்கிறது - எனது சிறுவயதில், எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் தாயார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது,  என்னை  சற்று உற்றுப்பார்த்த  மருத்துவர், சற்றே யோசித்தவராக எனது இரு கண்களின் கீழ் இமைகளையும் ஒவ்வொன்றாக கீழிழுத்துப்பார்த்து, உடனேயே சொன்னார் "பையன் உடம்பிலே ரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதான பரிசோதனை! உடனடி report!!


நமது உடலில்  இரத்தத்தின் அளவு குறைந்திருக்குமேயனால், கல்லீரலில், அவசரத்தேவைக்காக சேமித்து வைக்கப்படும் இரத்தத்தின் அளவும் அதே விகிதத்தில் குறைந்து விடும்.

கண்களின் கீழிமையை சற்று கீழிழுத்துப்பார்க்கும் போது தெரியும் உட்பகுதியில் நாம் காணும் சிகப்பு நிறத்தின் அடர்த்தி,  உடலின் இரத்த அளவினைக்காட்டும் "meter" ஆக விளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம், போதுமான இரத்தம் நமது உடலில் இருப்பதையும், வெளிறிய சிகப்பு நிறம்  உடலில் இரத்தம் குறைவாக இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

கண்ணின் வெண்விழிப்படலத்தில் தெரியும் மஞ்சள் நிறம், கல்லீரல் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர் வடிதல் ஆகியவை கல்லீரல் நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படுவதை அவ்வப்போது நமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கும் சுவைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில் "மரம்" மூலகத்தின் சுவை இயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்புச்சுவை அளவோடு இருக்க வேண்டும். ஏறக்குறைய இருப்பின்  "மரம்" மூலகத்தின் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் அமிலச்சுவை அதிகரிப்பதின் காரணமாக உடலின் அனைத்து இணைப்பு பாகங்களிலும் வலி ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின் இணைப்பு பாகங்களில் மிகுந்த வலியினால் அவதிப்படுபவர்கள், நிச்சயமாக  அதிகமாக புளிப்புச்சுவை மிகுந்த உணவில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்பு சுவை அதிகம் சேராமல் கவனத்துடன் இருப்பார்களேயானால்,  நிச்சயமாக மருந்துகளின் உதவியின்றி, படிப்படியாக வலியிலிருந்து  விடுபட அதிக வாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினை பித்தப்பையில் சேமித்து வைத்து பயன் படுத்துகிறது.  பித்தநீரின் மிக முக்கியமான பணியாகிய கொழுப்பு ஜீரணம் சரிவர நடைபெறாமல் தடைபட்டுப்போகும் நேரத்தில், பச்சை நிற "பித்தப்பை கற்கள்" பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்போதும், அல்லது சிறுகுடலில் வைரஸ்  தாக்குதல் ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும், பித்தநீரானது சிறுகுடலினுள் செல்ல வழியின்றி, மேலேறி இரைப்பையை அடையும்போது, இரைப்பையானது பித்தநீரினை சகித்துக்கொள்ளும் திறன் இல்லாததால் பித்தநீரை, பச்சைநிற பித்தவாந்தியாக வெளியேற்றுகிறது. 

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், குளோரபில் அல்லது இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட மருந்துகள் ஏதும் சேராதபோது, திடக்கழிவில் பச்சை நிறம் காணப்பட்டால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அதிவேக செயல்பாட்டினை உணர்த்துகிறது

No comments:

Post a Comment