Friday, 23 January 2015

பிரபஞ்சம் மேக்ரோகாசம் - மனிதர் மைக்ரோகாசம்.

ஒரு நபர், தன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும்  அவ்வப்போது  உடற்பிணிகளால் பாதிக்கப்படுவது ஏன்?

நாம் வாழும் இந்த பூமியின் பஞ்சபூதசக்திகளின் ஒத்திசைவான நிலைப்பாடு, அதாவது சுற்றுப்புற சூழல், பல காரணங்களால் சமன்பாட்டினை இழந்துவிடுவதுதான் காரணம். நமது சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் உள்ள  தொடர்பினை நாம் அறிவோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஒழுங்காக சூரியனைச் சுற்றி இயங்கி வரும் நமது பூமியின் பஞ்சபூதசக்திகளின் சமன்பாடு  அவ்வப்போது , காலத்தின் கட்டாயத்தால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சீர்குலைகின்றது  என்பது  மறுக்க   முடியாத  உண்மை.

அதிக வெப்பம், அதிக மழை, அதிக குளிர், வறண்ட காற்று என  சுற்றுப்புற சூழலில் ஏற்ற தாழ்வுகள் - அதன் காரணமாக  அமையும் இயற்கை நிகழ்வுகளால் பூமியின் பஞ்சபூத சக்திகளில் ஏற்படும் மாற்றங்கள்  - நமது உடலின் பஞ்சபூத சக்திகளில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தில் எங்கோ நகரும் ஒரு வால் நட்சத்திரத்தின் அசைவு,   சூரியனில் ஏற்படும் வெப்ப சலனம் மற்றும் கரும்  புள்ளிகள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்து, பூமியின் தட்ப வெட்ப   நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பூமியின் தட்ப வெட்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள்,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய  நமது உடலின் பஞ்சபூத சக்திகளின் சமன்பாட்டில்  இடையூறு செய்து, ஆரோக்கிய நிலைப்பாடு சீர்குலைய காரணமாக அமைகின்றன.

தவிர, அனைத்து கிரகங்களிலிருந்து பூமியினை வந்தடையும் மின்காந்தப்புலங்கள், பூமிக்கும் அவைகளுக்குமான இடைவெளியின் அளவைப்பொருத்து, பூமியினையும் அதில் வாழும் நம்மையும் நேரடியாக பாதிக்கின்றன. நமது பூமியின்  துணைக்கிரகமான சந்திரனை நாம் சற்று கவனிப்போம். அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது, கடல் நீர் மட்டம் மற்றும்  அலைகளின் எழுச்சி ஆகியவற்றில் ஏற்படும் தாக்கங்களை நாம் அறிவோம். அதே அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது   நீர் சம்பந்தப்பட்ட தோல்நோயினால் பாதிப்படைந்தவர்கள் அதிக உபாதையினை அனுபவிக்க நேரிடும். மேலும் மனநலம்  பாதிக்கப்பட்ட மனிதர்களில் பலரது ஆரோக்கிய பாதிப்பு சற்று உக்கிரமாகவே இருக்கக்கூடும்.

பிரபஞ்சம் (Galaxy) மேக்ரோகாசம் (Macrocosm) என்றால் பூமி (Earth) மைக்ரோகாசம் (Microcosm).  பூமி மேக்ரோகாசம்  என்றால் நாம்  மைக்ரோகாசம்.


எனவே பிரபஞ்சமாகிய மேக்ரோகாசத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமும் பிரபஞ்சத்தின் மைக்ரோகாசமாகிய  நம்மை  நேரடியாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வுலகம்  நீர்,  நிலம்,  நெருப்பு  ஆகாயம்,  காற்று எனும் பஞ்சபூத சக்திகளால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதனை நாம்  அறிவோம்.  அச்சக்திகளில்  ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்யும் வகையிலான செயல்பாடுகளே,  எரிமலை வெடித்து   அக்கினிக்குழம்பினை  வெளியேற்றுதல்,  பூகம்பம்,  ஆழிப்பேரலை, கடும் வெயில் - மழை -  காற்று -  குளிர் -  வெப்பம் -  வறட்சி போன்ற   நிகழ்வுகளாகும் என்பதையும் நாம் அறிவோம்.

 அதே வகையிலேயே,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய நமது பிண்டத்திலும் - அதாவது நமது உடலிலும் பஞ்ச பூத சக்திகளில்  ஏற்படும் ஏற்றதாழ்வுகளினால் உண்டாகும் விளைவுகளை - வலி, வீக்கம், காய்ச்சல் - என  நாம் நோயின் அறிகுறிகளாக உணருகிறோம்.

இத்தகைய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பெரிதாக நோய்வாய்ப்பாடமல் தப்பித்துக்கொள்ளும் வகையில்   எளிய தீர்வு ஏதேனும் உண்டா?

உண்டு.  அதுதான் நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி"

நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி" யின் மீது பலருக்கும் சிறிது சந்தேகம் இருக்கத்தான்  செய்கிறது.

எள்ளளவுகூட சந்தேகம் தேவையில்லை.

எவ்வாறு இயற்கை தன்னை தானே சரிசெய்துகொள்கிறதோ, அதேபோல் நமது  உடலும்  தன்னைத் தானே "சரி செய்து"  கொள்ள - இடைவிடாது 24x7 செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும், நமது உடலில்ஆரோக்கியத்தை எப்போதும் நிலைநிறுத்தும் வகையில், ஒரு  நொடி கூட இடைவெளி இல்லாதவாறு  சதா சர்வகாலமும் அற்புதமான இத்திறன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நம்முள் இயங்கும் பஞ்சபூத சக்திகள் தமக்குள் நிகழும் முரண்பாடுகளை தாமே சரிசெய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது. சில  சமயங்களில், சரியான சரிவிகித உணவு, மற்றும் முறையான  பழக்கவழக்கங்களை நாம் கைக்கொள்ளாதபோதும், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தாக்கத்தாலும்,  நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும்  பஞ்சபூதங்களாகிய மரம், நெருப்பு, நிலம்,  உலோகம், நீர் - ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தில்(flow of bio-electric energy;  acupuncture meridian ) தடைகள் ஏற்படுகின்றன.

இந்த சந்தர்ப்பங்களில் ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள "ஆற்றல் மிக்க உயிர்சக்தி" (vital energy)  பலவீனப்பட்டு, செயல்திறன் மிகவும் குறைந்திருக்குமேயனால், அவரது உடல் சுயமாக போராடும் தன்மையினை  இழக்கின்றது.

ஒருவரது உடலில் சுயமாக தாமே இயங்கி, சரிசெய்து கொள்ளமுடியாத இயலாத "பஞ்சபூதங்கள் சார்ந்த சக்தி ஓட்டத்தை",  அக்குபஞ்சர் தூண்டுதல்மூலம் சரிசெய்து ஒருவரது உயிர்சக்தி ஓட்டத்தை சரியாக இயங்கச்செய்யமுடியும். ஒருவரின்  "உயிர்  சக்தி" (vital energy) மிகவும் பாதிக்கப் பட்டிருக்காதவரையில் இது சாத்தியமே.

ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், தம்மை நாடி வரும்  ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின்  தற்போதைய நிலையினை அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனை மூலம் சோதிக்கிறார்.
மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர் - எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகளை நடத்திவரும்  உறுப்புகளாகிய

நுரையீரல்
பெருங்குடல்
இருதயம்
சிறுகுடல்
இருதய மேலுறை
மூவெப்ப மண்டலம்
இரைப்பை
மண்ணீரல்
கல்லீரல்
பித்தப்பை
சிறுநீரகம்
சிறுநீர்ப்பை

- ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தின் தன்மை நாடிப்பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

நாடிப்பரிசோதனை மூலம், பாதிக்கப்பட்ட மூலகத்தினை சோதித்து அறிந்து, பிரச்சனையை தெரிந்து கொள்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர்.

அந்தப்பிரச்சனை,  சம்பந்தப்பட்ட மூலகத்தின் செயல்திறன் குறைவால் ஏற்பட்டதா? - அல்லது, அம்மூலகத்தின் தேவைக்கு  அதிகமான செயல்பாட்டினால்  ஏற்பட்டதா? - என்பதை புரிந்து கொள்கிறார். தேவைப்பட்டால் அதற்கு காரணமாக அமைந்த  நிகழ்வுகளை, விசாரணை மூலம் அவர் அறிந்துகொள்கிறார்.

நாடிப்பரிசோதனையின் அடிப்படையில், அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தருவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனையின் மூல  காரணத்தினை சரிசெய்யும் வகையில் ஆலோசனைகள் தரப்படுகிறது.  தொடர்ந்து நீடித்த ஆரோக்கிய வாழ்க்கை அமைய,  அதாவது ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதமூலகங்களின் இசைவான உயிர்சக்தி ஓட்டம்"  தடையில்லாமல் இயங்கும் வகையில், மிக எளிதான முறையில், அவர் கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும்  பழக்கவழக்கங்களை ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்,  இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் முழுமையாக அடைய, அவரது "உயிர்சக்தி ஓட்டம்" எந்த வகையிலும்  தளராத வகையில், முறையான சரிவிகித உணவு, மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்ந்து  கைக்கொள்ளவேண்டும்  என்பது மிக மிக அவசியம்.

எந்த அளவுக்கு  இயற்கையோடு இணைந்து நமது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை கைக்கொள்கிறோமோ அந்த  அளவுக்கு நமது ஆரோக்கியம்  பாதுகாக்கப்படும்  என்பது உறுதி.

மற்ற துறையினைச் சார்ந்த மருத்துவர்கள் போல் அக்குபஞ்சர் மருத்துவர்களும் நிச்சயமாக -  நீடித்த நல்ஆரோக்கியத்திற்கு  மிகவும் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள்.

நமது உடலின் அற்புதமான இந்த தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் செயல், ஒரு தொடர் போராட்டமாகவே நம்முள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனி வரும் பதிவுகளில் அதனை நாம் பார்க்க இருக்கிறோம்.

எல்லாம் சரிதான் - நோய்வாய்ப்படாமலேயே நாம்  தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?

ஏன் இல்லை!?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிகோலும் கணக்கிலடங்காத அற்புதமான வழிமுறைகளை,  எண்ணிக்கையிலடங்காத  சித்தர்களும், மகான்களும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே - பண்பாடு, கலாச்சாரம் - என எளிய முறையில்  பின்பற்றத்தக்கவாறு வாழ்க்கையோடு இணைந்த முறையாக நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அற்புதமான அந்த வழிமுறைகளை  பின்பற்றுவோம் - 

                                                        வருமுன் காப்போம்

1 comment: