Showing posts with label மரம் மூலகம். Show all posts
Showing posts with label மரம் மூலகம். Show all posts

Tuesday, 1 July 2014

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி   - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை  இப்பதிவில்  பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"


எனக்கு நன்றாக நிணைவிருக்கிறது - எனது சிறுவயதில், எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் தாயார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது,  என்னை  சற்று உற்றுப்பார்த்த  மருத்துவர், சற்றே யோசித்தவராக எனது இரு கண்களின் கீழ் இமைகளையும் ஒவ்வொன்றாக கீழிழுத்துப்பார்த்து, உடனேயே சொன்னார் "பையன் உடம்பிலே ரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதான பரிசோதனை! உடனடி report!!


நமது உடலில்  இரத்தத்தின் அளவு குறைந்திருக்குமேயனால், கல்லீரலில், அவசரத்தேவைக்காக சேமித்து வைக்கப்படும் இரத்தத்தின் அளவும் அதே விகிதத்தில் குறைந்து விடும்.

கண்களின் கீழிமையை சற்று கீழிழுத்துப்பார்க்கும் போது தெரியும் உட்பகுதியில் நாம் காணும் சிகப்பு நிறத்தின் அடர்த்தி,  உடலின் இரத்த அளவினைக்காட்டும் "meter" ஆக விளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம், போதுமான இரத்தம் நமது உடலில் இருப்பதையும், வெளிறிய சிகப்பு நிறம்  உடலில் இரத்தம் குறைவாக இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

கண்ணின் வெண்விழிப்படலத்தில் தெரியும் மஞ்சள் நிறம், கல்லீரல் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர் வடிதல் ஆகியவை கல்லீரல் நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படுவதை அவ்வப்போது நமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கும் சுவைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில் "மரம்" மூலகத்தின் சுவை இயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்புச்சுவை அளவோடு இருக்க வேண்டும். ஏறக்குறைய இருப்பின்  "மரம்" மூலகத்தின் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் அமிலச்சுவை அதிகரிப்பதின் காரணமாக உடலின் அனைத்து இணைப்பு பாகங்களிலும் வலி ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின் இணைப்பு பாகங்களில் மிகுந்த வலியினால் அவதிப்படுபவர்கள், நிச்சயமாக  அதிகமாக புளிப்புச்சுவை மிகுந்த உணவில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்பு சுவை அதிகம் சேராமல் கவனத்துடன் இருப்பார்களேயானால்,  நிச்சயமாக மருந்துகளின் உதவியின்றி, படிப்படியாக வலியிலிருந்து  விடுபட அதிக வாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினை பித்தப்பையில் சேமித்து வைத்து பயன் படுத்துகிறது.  பித்தநீரின் மிக முக்கியமான பணியாகிய கொழுப்பு ஜீரணம் சரிவர நடைபெறாமல் தடைபட்டுப்போகும் நேரத்தில், பச்சை நிற "பித்தப்பை கற்கள்" பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்போதும், அல்லது சிறுகுடலில் வைரஸ்  தாக்குதல் ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும், பித்தநீரானது சிறுகுடலினுள் செல்ல வழியின்றி, மேலேறி இரைப்பையை அடையும்போது, இரைப்பையானது பித்தநீரினை சகித்துக்கொள்ளும் திறன் இல்லாததால் பித்தநீரை, பச்சைநிற பித்தவாந்தியாக வெளியேற்றுகிறது. 

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், குளோரபில் அல்லது இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட மருந்துகள் ஏதும் சேராதபோது, திடக்கழிவில் பச்சை நிறம் காணப்பட்டால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அதிவேக செயல்பாட்டினை உணர்த்துகிறது

Monday, 23 June 2014

"மரம்" - மூலகம்: தொடர்ச்சி - உட்புற இணைஉறுப்பு : பித்தப்பை GALL BLADDER

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை  ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன

உட்புற இணை உறுப்பு :   பித்தப்பை  GALL BLADDER - அக்குபஞ்சர் குறியீடு "GB" 

கல்லீரலின் அடிப்பக்கத்தில் அமைந்துள்ள பித்தப்பையானது சுமார் 50 முதல் 60 மில்லி லிட்டர் மட்டுமே  கொள்ளளவு உடையது.

கல்லீரலானது  பித்தநீரினை சுரந்து பித்தப்பையில் சேமிக்கிறது. பச்சை  நிறமான காரத்தன்மையுடையதான பித்தநீர், நாளொன்றுக்கு சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர்  வரை  சுரக்கப்படுகிறது.

கல்லீரல் ஓரளவு தொடர்ச்சியாக பித்தநீரினை சுரந்து கொண்டிருந்தாலும், பித்தப்பையானது, நாம் உணவு எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது இரைப்பையில் அரைக்கப்பட்ட உணவு முன்சிறுகுடலில்  நுழையும் போதோதான் பித்தநீரினை சிறுகுடலுக்கு அனுப்பித்தருகிறது.

சுமார் 50 அல்ல்து 60 மி.லி. கொள்ளளவே கொண்ட  பித்தப்பை கல்லீரலிலிருந்து தொடர்ச்சியாக  பெறப்படும் சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர் வரையான பித்த நீரை சேமித்து வைத்து பயன்படுத்த  வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் பெறக்கூடிய பித்தநீரின் அடர்த்தியை  10 முதல் 15 மடங்கு  வரை அதிகரித்து சேமித்து வைத்து தேவைப்படும்போது அதனை நீர்த்து பயன்படுத்துகிறது.

பித்தப்பையானது,  பித்தநீரை சிறுக்குடலுக்கு அனுப்பும்போது "மியூசின்" (musin) எனும்  திரவச்சுரப்பினையும் சேர்த்து அனுப்புகிறது. இந்த மியூசின் அரைக்கப்பட்ட  உணவு சிறுகுடலில் எளிதாக  தடையின்றி நகர்ந்து செல்ல எண்ணைப்பசை (lubricant) போல செயல்படுகிறது.

பித்தநீரானது 89 சதவீகிதம் நீரும், மீதம் 11 சதவிகிதத்தில்  பித்த உப்புக்கள், பித்த நிறமிகள், மியூசின்  போன்ற கரிம (organic) பொருட்களும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பை-கார்போனேட்  போன்ற  கனிம (inorganic) திடப்பொருட்களும் கொண்டதாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் கொழுப்பு ஜீரணத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் உருண்டைகளாக உருவாகும் கொழுப்பினை நுண்ணிய துகள்களாக உடைத்து கூழ் போன்று  திரவநிலைக்கு மாற்றி, சிறுகுடல் உறிஞ்சத்தக்கதாக மாற்றித்தருகின்றன.

சிறுகுடலின், peristatic movement எனப்படும் சுருங்கி விரியும் தன்மையை ஊக்குவித்து,  உணவுத்  திரவக்கூழின் சிறுகுடல் பயணத்தை எளிதாக்குகின்றன.

மேலும், பித்தநீரின் திரவத்தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கச் செய்கின்றன.

சிதைக்கப்பட்ட இரத்த சிக்கப்பணுக்களிலிருந்து பெறப்பட்ட பிலிருபின் - bilirubin - மனித உடலின் முக்கியமான  பித்த நிறமியாகின்றது. நமது மல, நீர்க்  கழிவுகளில் தெரியும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக அமைவது  இந்த பிலிருபின்தான்.

கல்லீரலின் செயல்திறனில் குறைபாடு ஏற்படுவதன் காரணமாக தோன்றும் நோய்களின் போது, பிலிருபின் இரத்ததில் அதிகமாக கலந்துவிட நேருவதால், மலம், சிறுநீர் மற்றும் கண்ணின் வெண்விழிப்படலம் ஆகியவற்றில் தோன்றும் மஞ்சள் நிறம், நோய்த்தாக்கத்தை நமக்கு உணர்த்தும் வகையில் பிலிருபினின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
 
கொழுப்பினை ஜீரணிக்க அத்தியாவசியமான பித்தநீரினை முறையாக பயன்படுத்தும் வகையில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் அமையவில்லையெனில், பித்தப்பையில் அளவுக்கு அதிகமாக பித்தநீர், சேர்ந்துவிடும்

இறுகிய பித்தநீர், கற்களாக மாறி பித்தப்பையினை வெடித்துவிடச்செய்யும் அளவுக்கு மோசமான நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.



                                                       வருமுன் காப்போம் . 


Thursday, 12 June 2014

பஞ்ச பூதங்கள் : "மரம்" - மூலகம் - உள்ளுறுப்பு " கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் - LIVER - அக்குபஞ்சர் குறியீடு "LIV"

நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியாக விளங்கும் -LIVER - எனப்படும் கல்லீரல், நமது உடலின் "இரசாயனத் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, நமக்கு அன்றாடம் தேவைப்படும் பலவித  உயிர்ச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து தயாரித்துத் தரும் முக்கிய பணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம் நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறதோ, அதேபோன்று, கல்லீரலானது நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களையும் நமது உடலின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பித்தருகிறது. தவிர, தான் வெட்டப்பட்டாலும், மீண்டும் முழுமையாக வளர்ந்துவிடக்கூடிய தன்மையுடையதாய் விளங்குவதால், கல்லீரல் மரம் மூலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்து பணிகளைப்பற்றியும் சொல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முக்கியமான பணிகளை மட்டும் சொல்லலாம் என்று யோசித்தால் எதை சொல்வது, எதை விடுவது என்று பிரிக்கவும் முடியவில்லை. ஓரளவு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்து பாகங்களிலிருந்து பெறப்படும் திரவ நிலையினை கண்காணித்து நிர்வகிக்கும் கல்லீரல், நமது உடலின் அனைத்து பாகங்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினை ஜீரணிக்கச்செய்யும் பித்தநீரினைச் சுரந்து, பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர், நோய்க்கிருமிகள், போதை தரும் மருந்துகள் மற்றும் மது - இவற்றினால்  இரத்தத்தில் சேரும் அனைத்து நச்சுப்பொருட்களையும் மற்றும் கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில் நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய, உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவுக்கு கொடிய நச்சுப்பொருளான "அமோனியா"வை  யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது, மொத்த இரத்தத்தில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை தன்னுள் எப்போதும் இருக்குமாறு வைத்துக்கொள்கிறது - அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும் தாதுப்பொருள் சத்துக்களை சேகரித்து வைத்து, தேவைப்படும் போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து சற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை கிளைகோஜனாக மாற்றி சேமித்து வைத்து, தேவைப்படும்போது குளுக்கோஸாக மாற்றி வெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத் தடுக்கத் (anticoagulant) தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும் காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும் "மின்பகு பொருள்" (ion) மற்றும் "நீர்" ஆகியவற்றின் சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும் செயலற்றுப்போன இரத்த சிகப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்"களை சிதைத்து, மறுசுழற்சி முறையில் மீண்டும் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தினை பிரித்து எலும்பு மஜ்ஜைக்கு அனுப்புவதோடு, அதில் பெறப்படும் கழிவினை வெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமான வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை, கல்லீரலானது, நமது உடலில் ஆரோக்கியம் நிலைத்திருக்கும் வகையில் இடைவிடாது செயாலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடையும்போது விளைந்த விஷத்தின் தாக்குதலிலிருந்து தேவகணங்களை காக்குமுகமாக, அவ்விஷத்தை விழுங்க முற்பட்ட சிவபெருமானைப்போல், நாம் உண்ணும் உணவு, மற்றும் நமக்கு ஏற்படும் கிருமித்தாக்குதல் ஆகியவற்றால் நமது இரத்தத்தில் கலந்துவிட்ட கொடிய விஷத்தை தனக்குள்ளேயே  வைத்துக்கொண்டு, தீங்கில்லாத உயிர்ச்சத்துக்களை மட்டும் இரத்ததில் கலக்கச்செய்து தான் இருக்கும் உடலின் ஆரோக்கியம் ஒன்றே பிரதானம் என்று செயலாற்றும் கல்லீரலின் கடமையுணர்ச்சியை என்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கைக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்.

                                               வருமுன் காப்போம். 
                          ஆரோக்கியவாழ்வினை அனுபவிப்போம்.