நமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
மூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன், மூளையின் கட்டளைக்காக காத்திருக்கிறது.
உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் "ஹார்மோன்" எனப்படும் "உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்பு நீர் " எனலாம். இத்தகைய "சுரப்பு நீர்" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும் சுரக்கப்படுகின்றன.
"நிலம்" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும் மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.
தவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, "ஆற்றல்" அல்லது "சக்தி நிலையில்" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால், "பசி" உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும் "க்ரெளின் " (Ghrelin) வயிற்றில் சுரக்கிறது.
வயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் - மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் "நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்" எனப்படும் "மின் அலை கடத்தி"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.
நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான "இரசாயன சமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும் "செரோடோனின்" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது. மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், "MOOD" எனப்படும் மன நிலையினை சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி நிவாரணம் தருதல் - போன்றவையும் "செரடோனின்" துணை புரியும் முக்கிய பணிகள் தான்.
ஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் "என்ன நடந்துவிடுமோ?" என்று தொடர்ந்து "கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்? விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால், இரைப்பை, மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.
அதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால் ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக, அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம் மறுக்க இயலாது.
இவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு? அதையெல்லாம் விட்டுவிடுங்கள். மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று யோசித்துப்பாருங்கள்.
நீங்கள் எதெற்கெடுத்தாலும் அதிகமாக கவலைப்படுகிறவரா?
குறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி? ஓரளவுக்கு, அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள் எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை இப்போதே எதற்கு?
தேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து, அவர் உங்கள் ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.
கவலையைப்பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள்.
வருமுன் காப்போம்