Friday, 24 July 2015

" அமில-காரத்தன்மை " - அக்குபஞ்சர் அறிவியல்

நமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள்  பல இருக்கின்றன. அவற்றில்  மிக மிக முக்கியமான ஒன்றாக  கருதப்படுவது  "நமது உடலின் அமில-காரத்தன்மை"யினை  (Acid - Alkaline Scale )  ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பானஅளவில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். 

"அமில-காரத்தன்மை " (Acid - Alkaline ) - என்பது என்ன?


பொதுவாக ஒரு திரவத்தின் அமில- காரத்தன்மையின் கலப்பு விகிதசாரம், அந்த திரவத்தின் ஹைட்ரஜன் (Hydrogen) மூலக்கூற்றின் செயல்திறனை - அதாவது - potency -யினை கணக்கிட்டு 1 முதல் 14 வரை அளவிடப்படுவதாகும். அதுவே, potency of hydrogen என்பதின் குறியீடாக "pH" என்று குறிப்பிடப்படுகிறது.

சுகாதாரமான குடிநீரின் "pH" குறியீடு 7 ஆகும். இதுவே "நடுநிலை" - neutral - ஆக கணக்கிடப்படுகிறது.

ஒருவரது ஆரோக்கியம் தொடர்ந்து நிலைத்திருக்க, அவரின் உடலில் ஓடும் இரத்தத்தின் இந்த "நடுநிலை" குறியீட்டு  எண் "pH" என்பது   "7.4" ஆக தொடரச்செய்ய வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே "அமிலம்" என்பது பற்றி நாம் அறிவோம். இங்கு "காரத்தன்மை" என்பது Alkalaine  எனப்படும் தன்மையாகும். "உறைப்புச்சுவை"  எனக்கொள்ளுதல் ஆகாது.

"Alkali" யானது,
    -  எளிதில் நீரில் கரையக்கூடியதும்
    -  தொடுவதற்கு வழுவழுப்பானதாகவும்
     - சிகப்பு "லிட்மஸ்" (Litmus) தாளை நீலநிறமாக மாற்றும் தன்மை 
        கொண்டதாகவும், மேலும்
  -  அடர்த்தி கூடிய அல்கலி பொருட்கள் "அரிக்கும்" (corrosive) தன்மை 
      கொண்டது எனவும்,  பள்ளியில் "விஞ்ஞான பாடத்தில்" படித்ததை
      நினைவு கூறுங்கள்.

நமது உடலின் இயல்பான கார- அமிலத்தன்மை சமன்பாடு சீர்குலைந்து, அமிலத்தன்மை  மிகுமேயானால், நமது உடல் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் தள்ளப்படும் என்பது உறுதி.

அமிலத்தன்மை அதிகமானால் விளைவுகள் என்ன?

அமிலத்தன்மை அதிகமாகும் போது, நமது உடலின் அடிப்படை கட்டமைப்பாகிய 'செல்'-லானது தனது அன்றாட கடமைகளை சரிவரச்செய்ய முடியாமல் போகும். 'செல்'-கள் அனைத்தும், இயல்பான முறையில் சுவாசித்தல், உணவு உண்ணுதல், கழிவுகளை நீக்குதல் ஆகிய அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலை உருவாகும்.

அதன் காரணமாக,  நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து, நோயினை   எதிர்த்து   போராடும்    திறன்   மிகவும்   குறைந்து   விடுகிறது. விளைவாக, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்காளான் மற்றும் 'பாராசைட்' என்னும் ஒட்டுண்ணிகள் சம்பந்தமான நோய்த்தாக்கங்கள் எளிதில் உடலினுள் புகுந்து ஆரோக்கிய சீர்கேட்டினை உண்டாக்கும்என்பதில் சந்தேகமில்லை.

-அடிக்கடி,எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகுதல்
-அதிக உடல் பருமன்
-அஜீரணக் கோளாறுகள்
-எளிதில் அதிகமாக களைத்துப்போகுதல்
-எலும்பு இணைப்புகளில் அதிக வலி
-எலும்புகள் பலவீனமாகுதல்
-பற்சிதைவு நோய்கள்
-தசைகளில் பிடிப்பும் வலியும்
-எரிச்சலூட்டும் மனஉணர்வு
-சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் அடிக்கடி உருவாகுதல்
-இளவயதில் முதுமை தோற்றம்

                 ஆகியவை நமது உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை மிகுவதால் ஏற்படக்கூடிய சில விளைவுகளாகும்.


அமிலத்தன்மை மிகுதியாக உள்ள உடலில் கேன்சர் உருவாகுமேயானால், அவை செழித்து(?) வளர வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

"அமில-காரத்தன்மை" சீர்குலைவு ஏன்?

முறையற்ற உணவுப்பழக்கம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல், உடலின் சக்திக்கு  மீறிய உழைப்பு, முறையான ஓய்வின்மை - ஆகியவையே காரணங்களாகும்.

நாம் உண்ணும் உணவு யாவற்றையும்- அதிக அமிலத்தன்மை கொண்டது, ஓரளவு அமிலத்தன்மை  கொண்டது, குறைந்த அளவு  அமிலத்தன்மை கொண்டது எனவும், மேலும்  அதிக காரத்தன்மை கொண்டது, ஓரளவு காரத்தன்மை  கொண்டது, சிறிதளவு காரத்தன்மை கொண்டது  எனவும் வகைப்படுத்தலாம் எனச்சொல்லப்படுகிறது. வலைத்தளத்தில் இவை பற்றிய கட்டுரைகள்  ஏராளம். ஆனால் பல உணவுப்பொருட்களைப்பற்றிய அமில-காரத்தன்மை தகவல்கள் சற்று  முரண்படுகின்றன.

ஆனால் - முறையானஉணவுப்பழக்கம், முறையற்ற உணவுச்சேர்க்கை என நம் முன்னோர்களின்  வழிகாட்டுதல் நமக்கு இருக்கிறது.

காலையில் - பகலில் - இரவில் என்னென்ன சாப்பிடலாம்,  என்னென்ன உணவுடன் என்னென்ன உணவைச் சேர்த்து சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது ; கோடை - மழை - குளிர் காலங்களில் ஆரோக்கியத்தை பேணும்  உணவு வகைகள் என, பல  குறிப்புகள்  உணவுக்கலாச்சாரமாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மூத்த குடிமக்களிடம்  கேட்டறிந்து கொள்வோம்.

நமது உடலின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் வகையில், அமில-காரத்தன்மை  சமன்பாட்டில் ஏற்ற இறக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்வதாக அமைந்ததுதான் நமது  முன்னோர்கள் நமக்கு போதித்த உணவுப்பழக்கம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- தயிர்,  மோருடன் வாழைப்பழம்
- மாமிச,  மீன்  உணவுடன்,  தயிர் மற்றும் மோர்
- உளுந்து அதிகம் சேர்த்த  உணவுடன் பால்

என சேர்த்து உண்ணும் போது,  வயிற்றில் புளிப்புச்சுவை அதிகமாகி, அதனால் உடலில் அமிலத்தன்மை கூடிவிடும் என்பதினால், அவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து உண்ணக்கூடாது என்பது  சித்த  மருத்துவத்தில் சொல்லப்படும் ஆரோக்கிய குறிப்புகள்.

பச்சரிசியினால் செய்யப்பட்ட ஆப்பம் சாப்பிடும்போது அதிகமாக ஏறக்கூடிய அமிலத்தன்மையை  சரிக்கட்ட, neutralizer ஆக தேங்காய்ப்பால் சேர்த்து உண்ண நமக்கு தெளிவாகவே  சொல்லப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களால்.

வேர்க்கடலையின் புரத்தச்சத்து நமக்கு அவசியம். வேர்க்கடலை அதிகமானால் ஏற்படும் அமிலமிகுதி, அதனுடன் நாம் சேர்த்து சாப்பிடும் பனங்கருப்பட்டியினால் சரிசெய்யப்படுகிறது. அதுதான் "கடலை உருண்டை" எனச் சொல்லவும் வேண்டுமா!

அடுத்ததாக, அதிக உடல் உழைப்பும்/உடற்பயிற்சியும்  உடலின் அமில-காரத்தன்மை சீர்கெட ஒரு காரணமாக அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், "Stress " - எனப்படும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், மேலும் கோபம், பயம், அதிக துக்கம், எளிதில் எரிச்சலடைதல், பொறாமை, தேவையில்லாத கவலை போன்ற எதிர்மறை  எண்ணங்கள் யாவும்  -  உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வண்ணம், நமது இரத்தத்தில் அமில-காரத்தன்மையின் சமன்பாடு  சீர்குலைய காரணமாக அமைகின்றன.

எப்படி?

நமது மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் - நமது உடலில் அமைந்துள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லாத சுரப்பிகளிலிருந்து பலவகை சுரப்புகள்   சுரக்கின்றன என்பதனை நாம் அறிவோம்.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது, அதன் விளைவாக உடலில் சுரக்கும்  ஹார்மோன் எனப்படும் "இயக்குநீர்" இரத்தத்தில் அமிலத்தன்மையினை வெகுவாக ஏறச்செய்கிறது என்றும்; மாறாக "அன்பு"  "மகிழ்ச்சி" "ஆனந்தம்" ... போன்ற நல்ல எண்ணங்கள், அதிக அமிலத்தன்மையினை மட்டுப்படுத்தும்  வகையில் காரச்சுவையினை (alkaline) சுரக்கச்செய்யும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடியதாக  இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் அமைதியான மனம்தான் என்பதால் தான் "அன்பே சிவம்" என்றார் திருமூலர்.

"அன்பே கடவுள்" - எனும் வாக்கினை ஆராய்ந்தோர் இதனை நன்கறிவர்.

அது சரிதான்...... இப்படியான உணவுகளை தரம் பிரித்து..  தேடித் தேடி ... - அது எல்லோராலும்  சாத்தியமா?

உடல் உழைப்பு? - பகலில் தூங்கி, இரவில் கண் விழித்து, அதிக நேரம் வேலை செய்தால்தானே  வாழ்க்கை ஓடும்?

மேலும், அவசர கதியில் இயங்கும் இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் மனதைக் கட்டிப்போட  முடியவில்லையே? டென்ஷன், கோபம், பதட்டம், பயம் மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்க்க  முடிவதில்லையே?

அக்குபஞ்சர் மருத்துவத்தில் "அமில-காரத்தன்மை" சமன்பாட்டுக்கு வழி உண்டா?

நிச்சயமாக உண்டு

அக்குபஞ்சர் அறிவியலில்  - நமது நமது உடலில் பஞ்சபூத சக்திகளை  செவ்வனே இயங்கச்செய்ய  ஆறு சுவைகளும் அன்றாடம்  உணவில் அளவோடு உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று  தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும் ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. அதிகம் சிரமப்பட  வேண்டியதில்லை. ஆறு சுவைகளும்,  அளவோடு,  அன்றாடம்  உணவில் இருக்குமாறு  அமைத்துக்கொண்டால்  நமது உடலின்  அமில-காரத்தன்மை சமப்படும்.  சுவையறிந்து அளவாக  உணவருந்தினால் மட்டுமே  போதும்.

தேவை எனில் அக்குபஞ்சர் மருத்துவரிடம் நாடிப்பரிசோதனை செய்துகொண்டு அவரிடம் ஆலோசனை  பெறலாம். எந்த  மூலகத்தின் நாடியில் சமன்பாடு இல்லையோ, அம்மூலகம் சம்பந்தமான சுவையுள்ள  உணவு  வகைகளை கூட்டவோ குறைத்துக்கொள்ளவோ அவர் ஆலோசனை தருவார். அதன்மூலம்  உடலில் உள்ள அமில-காரத்தன்மை சீர்கேடு சமன்பட வாய்ப்பு நிறைய உண்டு.


உடல் உழைப்பு / பயிற்சி  - அவரவர்  கையில்தானே இருக்கிறது? இதைக்கூட தனது   சொந்த   முயற்சியில் சரி  செய்துகொள்ள முடியவில்லை என்றால் எப்படி?

கட்டிப்போடமுடியாத மனதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஒரு சில  அக்குபஞ்சர் புள்ளிகளை, தேவைப்படும் வகையில் தூண்டுவதன் மூலம்,  மனதை சாந்தப்படுத்தி  அமைதி  ஏற்படுத்திக்கொள்ளலாம். தேவைல்லாத பதட்டத்தினால் சுரக்கக்கூடிய  தீமை தரும்  ஹார்மோன் சுரப்புகளைத் தவிர்க்கலாம்.

உணவு - உடல் உழைப்பு - உடலுக்கும் உள்ளத்திற்குமான ஓய்வாகிய உறக்கம் இம்மூன்றினையும் நெறிப்படுத்தி தொடர்ந்து பின்பற்றுவோம்.

                                                  வருமுன்  காப்போம்

Friday, 23 January 2015

பிரபஞ்சம் மேக்ரோகாசம் - மனிதர் மைக்ரோகாசம்.

ஒரு நபர், தன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும்  அவ்வப்போது  உடற்பிணிகளால் பாதிக்கப்படுவது ஏன்?

நாம் வாழும் இந்த பூமியின் பஞ்சபூதசக்திகளின் ஒத்திசைவான நிலைப்பாடு, அதாவது சுற்றுப்புற சூழல், பல காரணங்களால் சமன்பாட்டினை இழந்துவிடுவதுதான் காரணம். நமது சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் உள்ள  தொடர்பினை நாம் அறிவோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஒழுங்காக சூரியனைச் சுற்றி இயங்கி வரும் நமது பூமியின் பஞ்சபூதசக்திகளின் சமன்பாடு  அவ்வப்போது , காலத்தின் கட்டாயத்தால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சீர்குலைகின்றது  என்பது  மறுக்க   முடியாத  உண்மை.

அதிக வெப்பம், அதிக மழை, அதிக குளிர், வறண்ட காற்று என  சுற்றுப்புற சூழலில் ஏற்ற தாழ்வுகள் - அதன் காரணமாக  அமையும் இயற்கை நிகழ்வுகளால் பூமியின் பஞ்சபூத சக்திகளில் ஏற்படும் மாற்றங்கள்  - நமது உடலின் பஞ்சபூத சக்திகளில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தில் எங்கோ நகரும் ஒரு வால் நட்சத்திரத்தின் அசைவு,   சூரியனில் ஏற்படும் வெப்ப சலனம் மற்றும் கரும்  புள்ளிகள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்து, பூமியின் தட்ப வெட்ப   நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பூமியின் தட்ப வெட்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள்,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய  நமது உடலின் பஞ்சபூத சக்திகளின் சமன்பாட்டில்  இடையூறு செய்து, ஆரோக்கிய நிலைப்பாடு சீர்குலைய காரணமாக அமைகின்றன.

தவிர, அனைத்து கிரகங்களிலிருந்து பூமியினை வந்தடையும் மின்காந்தப்புலங்கள், பூமிக்கும் அவைகளுக்குமான இடைவெளியின் அளவைப்பொருத்து, பூமியினையும் அதில் வாழும் நம்மையும் நேரடியாக பாதிக்கின்றன. நமது பூமியின்  துணைக்கிரகமான சந்திரனை நாம் சற்று கவனிப்போம். அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது, கடல் நீர் மட்டம் மற்றும்  அலைகளின் எழுச்சி ஆகியவற்றில் ஏற்படும் தாக்கங்களை நாம் அறிவோம். அதே அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது   நீர் சம்பந்தப்பட்ட தோல்நோயினால் பாதிப்படைந்தவர்கள் அதிக உபாதையினை அனுபவிக்க நேரிடும். மேலும் மனநலம்  பாதிக்கப்பட்ட மனிதர்களில் பலரது ஆரோக்கிய பாதிப்பு சற்று உக்கிரமாகவே இருக்கக்கூடும்.

பிரபஞ்சம் (Galaxy) மேக்ரோகாசம் (Macrocosm) என்றால் பூமி (Earth) மைக்ரோகாசம் (Microcosm).  பூமி மேக்ரோகாசம்  என்றால் நாம்  மைக்ரோகாசம்.


எனவே பிரபஞ்சமாகிய மேக்ரோகாசத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமும் பிரபஞ்சத்தின் மைக்ரோகாசமாகிய  நம்மை  நேரடியாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வுலகம்  நீர்,  நிலம்,  நெருப்பு  ஆகாயம்,  காற்று எனும் பஞ்சபூத சக்திகளால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதனை நாம்  அறிவோம்.  அச்சக்திகளில்  ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்யும் வகையிலான செயல்பாடுகளே,  எரிமலை வெடித்து   அக்கினிக்குழம்பினை  வெளியேற்றுதல்,  பூகம்பம்,  ஆழிப்பேரலை, கடும் வெயில் - மழை -  காற்று -  குளிர் -  வெப்பம் -  வறட்சி போன்ற   நிகழ்வுகளாகும் என்பதையும் நாம் அறிவோம்.

 அதே வகையிலேயே,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய நமது பிண்டத்திலும் - அதாவது நமது உடலிலும் பஞ்ச பூத சக்திகளில்  ஏற்படும் ஏற்றதாழ்வுகளினால் உண்டாகும் விளைவுகளை - வலி, வீக்கம், காய்ச்சல் - என  நாம் நோயின் அறிகுறிகளாக உணருகிறோம்.

இத்தகைய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பெரிதாக நோய்வாய்ப்பாடமல் தப்பித்துக்கொள்ளும் வகையில்   எளிய தீர்வு ஏதேனும் உண்டா?

உண்டு.  அதுதான் நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி"

நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி" யின் மீது பலருக்கும் சிறிது சந்தேகம் இருக்கத்தான்  செய்கிறது.

எள்ளளவுகூட சந்தேகம் தேவையில்லை.

எவ்வாறு இயற்கை தன்னை தானே சரிசெய்துகொள்கிறதோ, அதேபோல் நமது  உடலும்  தன்னைத் தானே "சரி செய்து"  கொள்ள - இடைவிடாது 24x7 செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும், நமது உடலில்ஆரோக்கியத்தை எப்போதும் நிலைநிறுத்தும் வகையில், ஒரு  நொடி கூட இடைவெளி இல்லாதவாறு  சதா சர்வகாலமும் அற்புதமான இத்திறன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நம்முள் இயங்கும் பஞ்சபூத சக்திகள் தமக்குள் நிகழும் முரண்பாடுகளை தாமே சரிசெய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது. சில  சமயங்களில், சரியான சரிவிகித உணவு, மற்றும் முறையான  பழக்கவழக்கங்களை நாம் கைக்கொள்ளாதபோதும், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தாக்கத்தாலும்,  நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும்  பஞ்சபூதங்களாகிய மரம், நெருப்பு, நிலம்,  உலோகம், நீர் - ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தில்(flow of bio-electric energy;  acupuncture meridian ) தடைகள் ஏற்படுகின்றன.

இந்த சந்தர்ப்பங்களில் ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள "ஆற்றல் மிக்க உயிர்சக்தி" (vital energy)  பலவீனப்பட்டு, செயல்திறன் மிகவும் குறைந்திருக்குமேயனால், அவரது உடல் சுயமாக போராடும் தன்மையினை  இழக்கின்றது.

ஒருவரது உடலில் சுயமாக தாமே இயங்கி, சரிசெய்து கொள்ளமுடியாத இயலாத "பஞ்சபூதங்கள் சார்ந்த சக்தி ஓட்டத்தை",  அக்குபஞ்சர் தூண்டுதல்மூலம் சரிசெய்து ஒருவரது உயிர்சக்தி ஓட்டத்தை சரியாக இயங்கச்செய்யமுடியும். ஒருவரின்  "உயிர்  சக்தி" (vital energy) மிகவும் பாதிக்கப் பட்டிருக்காதவரையில் இது சாத்தியமே.

ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், தம்மை நாடி வரும்  ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின்  தற்போதைய நிலையினை அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனை மூலம் சோதிக்கிறார்.
மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர் - எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகளை நடத்திவரும்  உறுப்புகளாகிய

நுரையீரல்
பெருங்குடல்
இருதயம்
சிறுகுடல்
இருதய மேலுறை
மூவெப்ப மண்டலம்
இரைப்பை
மண்ணீரல்
கல்லீரல்
பித்தப்பை
சிறுநீரகம்
சிறுநீர்ப்பை

- ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தின் தன்மை நாடிப்பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

நாடிப்பரிசோதனை மூலம், பாதிக்கப்பட்ட மூலகத்தினை சோதித்து அறிந்து, பிரச்சனையை தெரிந்து கொள்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர்.

அந்தப்பிரச்சனை,  சம்பந்தப்பட்ட மூலகத்தின் செயல்திறன் குறைவால் ஏற்பட்டதா? - அல்லது, அம்மூலகத்தின் தேவைக்கு  அதிகமான செயல்பாட்டினால்  ஏற்பட்டதா? - என்பதை புரிந்து கொள்கிறார். தேவைப்பட்டால் அதற்கு காரணமாக அமைந்த  நிகழ்வுகளை, விசாரணை மூலம் அவர் அறிந்துகொள்கிறார்.

நாடிப்பரிசோதனையின் அடிப்படையில், அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தருவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனையின் மூல  காரணத்தினை சரிசெய்யும் வகையில் ஆலோசனைகள் தரப்படுகிறது.  தொடர்ந்து நீடித்த ஆரோக்கிய வாழ்க்கை அமைய,  அதாவது ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதமூலகங்களின் இசைவான உயிர்சக்தி ஓட்டம்"  தடையில்லாமல் இயங்கும் வகையில், மிக எளிதான முறையில், அவர் கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும்  பழக்கவழக்கங்களை ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்,  இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் முழுமையாக அடைய, அவரது "உயிர்சக்தி ஓட்டம்" எந்த வகையிலும்  தளராத வகையில், முறையான சரிவிகித உணவு, மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்ந்து  கைக்கொள்ளவேண்டும்  என்பது மிக மிக அவசியம்.

எந்த அளவுக்கு  இயற்கையோடு இணைந்து நமது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை கைக்கொள்கிறோமோ அந்த  அளவுக்கு நமது ஆரோக்கியம்  பாதுகாக்கப்படும்  என்பது உறுதி.

மற்ற துறையினைச் சார்ந்த மருத்துவர்கள் போல் அக்குபஞ்சர் மருத்துவர்களும் நிச்சயமாக -  நீடித்த நல்ஆரோக்கியத்திற்கு  மிகவும் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள்.

நமது உடலின் அற்புதமான இந்த தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் செயல், ஒரு தொடர் போராட்டமாகவே நம்முள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனி வரும் பதிவுகளில் அதனை நாம் பார்க்க இருக்கிறோம்.

எல்லாம் சரிதான் - நோய்வாய்ப்படாமலேயே நாம்  தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?

ஏன் இல்லை!?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிகோலும் கணக்கிலடங்காத அற்புதமான வழிமுறைகளை,  எண்ணிக்கையிலடங்காத  சித்தர்களும், மகான்களும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே - பண்பாடு, கலாச்சாரம் - என எளிய முறையில்  பின்பற்றத்தக்கவாறு வாழ்க்கையோடு இணைந்த முறையாக நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அற்புதமான அந்த வழிமுறைகளை  பின்பற்றுவோம் - 

                                                        வருமுன் காப்போம்