Wednesday, 30 April 2014

"யின் -யாங்" - தத்துவம்

நமது சிவ-சக்தி தத்துவத்தை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான்  சீன "யின் -யாங்"  (yin-yang)-தத்துவம்   எனலாம்.  "யின்" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும்  "எதிர்மறை சக்தி" மற்றும் "யாங்" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் "நேர்மறை சக்தி" ஆகும். "யின் -யாங்" இவ்விரண்டின் நுண்ணியமான  "சேர்ந்து இயங்கும்" தன்மைதான்   நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

யின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு,  நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள்  ஏற்பட்டு உடல்  நலக்குறைவு உண்டாகிறது.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம்  சீராகிறது.

"உடல் நலக்குறைவு" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் "யின்-யாங்"   இணைந்து நடத்தும்   போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. இதனை தனிப் பதிவாக பார்ப்போம்.



யின்-யாங் குணங்கள்:

       யின்                  -            யாங்

நெகட்டிவ்                  -   பாசிடிவ்
பெண் தன்மை         -     ஆண் தன்மை
கெட்டியானது         -    பை போன்று குழிவானது
குளிர்                           -   வெப்பம் 
இருட்டு                      -    வெளிச்சம்
கருப்பு                         -    வெள்ளை
மந்தம்                         -    சுறுசுறுப்பு
இடது                           -    வலது


யின்-யாங் செயல் தன்மைகள்


இரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல்  இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல்  "யின்" மட்டும் தனியாகவோ அல்லது "யாங்" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை.
எந்த ஒரு "யின்"னும் சிறிதளவாவது "யாங்" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு "யாங்"கும் சிறிதளவாவது "யின்" இல்லாமல் இருப்பதுமில்லை.

இரண்டும் எப்போதும் "சம அளவு"  "நிலையாக" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன.

ஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ-  மற்றொன்றின்  இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும்.

உடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

"யின்- யாங்" தத்துவம்  - ஒரு சாகச வித்தை
 

ஒரு எளிதான உதாரணம், "யின்-யாங்"கின் இயக்கத்தினை தெளிவுறச்செய்யும் முயற்சியாக தருகிறேன். எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஒருவர் கம்பியின் மீது நடக்கும் சாகசச்செயலை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர் நடக்கையில், சமநிலை பாதிக்கப்படும்போது, புவிஈர்ப்பு விசையினை சரிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சியை நினைவுகூருங்கள்.

இடப்பக்கம் சாய நேரும்போது, வலப்பக்கம் சற்று உடலை வளைத்து, கூடவே வலது காலினை சற்று உயர்த்தி, கம்பிக்கு  வலது பக்கமாக எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, உடல் சம நிலைப்படும் அதேகணமே, வலது காலை இறக்கி புவி ஈர்ப்பை சமணம் செய்கிறார். சிறிது கூட இடைவெளி இல்லாமல் நடைப்பயணம் முடியும் வரை அவரது இட-வலது போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் - ஒருவரின் வாழ்க்கை முழுவதும் அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவரது  'யின்-யாங்" நடத்தும் போராட்டத்தைப் போலவே.

    

                                                 "வருமுன் காப்போம்"


Sunday, 27 April 2014

அக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்

ஆரோக்கிய நிலை 


பஞ்சபூதங்களான   - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகிறது. ஐந்து மூலகங்களும் -  தமது, இயல்பை மீறாத, கட்டுக்கோப்பான முறையில்,  சீராக  செயல்படும்போது.  நமது "உயிர் சக்தி ஓட்டம்" (Flow of Bio Electric Energy) செவ்வனே நடைபெறுகிறது.  அதுதான் "ஆரோக்கிய நிலை".

இந்த ஆரோக்கிய நிலை தொடர்ந்து நீடிக்க நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பான "செல்"கள் யாவும் தமக்குரிய வேலையை சரிவரச் செய்து செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு - நமது உடலின் ஒவ்வொரு "செல்"லுக்கும், பிராணவாயுவும், பிற உயிர்ச்சத்துக்களும் தடையின்றி கிடைத்தாக வேண்டும்.

நமது உடலானது - சுவாசம் மற்றும் உணவு மூலமாக,  பிராணவாயு மற்றும் உயிர்ச்சத்துக்களை, உட்கிரகித்து, ஜீரணித்து, "சக்தி மாற்றம்"  செய்யும்  வேளையில் - திட, வாயு, மற்றும் திரவக்  கழிவுகள் உண்டாகின்றன. இந்தக் கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்பட வேண்டும். உடலில் கழிவுகளின் தேக்கம் தான்,  உடல் நலக் குறைவின்  மிக முக்கியமான காரணியாகும்.

இவ்வாறு, உட்கிரகித்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய செயல்கள், எந்த ஒரு அக  மற்றும் புறக்காரணிகளாலும் தடைப்படுத்தப்படாமல் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் நமது "உயிர் சக்தி ஓட்டத்தில்" எந்தவித பாதிப்பும் இல்லை.

ஏதாவது ஒரு காரணத்தால், பஞ்சபூதங்கள் எனப்படும்  - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று  - ஆகிய ஐந்து மூலகங்களில், ஏதேனும் ஒரு மூலகத்தின் செயல்பாடு, சற்றேனும் ஏறக்குறைய இருப்பின் "உயிர் மின் சக்தி ஓட்டத்தில்" தடை ஏற்படுகிறது. அந்த தடையினால் ஏற்படும் உடல் நலப் பாதிப்பினை, நாம் "வலி" "எரிச்சல்" "வீக்கம்", "மரத்துப்போகுதல்" என பல அறிகுறிகளாக உணருகிறோம்.


அக்குபஞ்சர் புள்ளிகள் 


நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகிய ஐந்து மூலகங்கள் -  பிரபஞ்சத்திலும் சரி, நமது உடம்பிலும் சரி - தனித்தனியாக இயங்குவதில்லை - இயங்கவும் முடியாது. அவை ஒன்றுடன் ஒன்றாக இணைந்து, பிணைந்தே செயலாற்றுகின்றன. எந்த ஒரு மூலகமும், சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் மற்ற அனைத்து மூலகங்களின் ஆதரவும் வேண்டும். எனவே,  எந்த  ஒரு  மூலகத்தின்  சக்தி  ஒட்டப்பாதையிலும்  மற்ற  அனைத்து  மூலகங்களின்  "பிரதானமாக இயங்கும்  இடங்கள்", அதாவது " அக்குபஞ்சர் புள்ளிகள் "  அமைந்திருக்கும்.


அக்குபஞ்சர் / அக்குபிரஷர் 


அக்குபஞ்சரின் தனிச்சிறப்பான நாடிப்பரிசோதனை மூலம்,  எந்த மூலகத்தின் "சக்தி ஒட்டப்பாதையில்" தடை ஏற்பட்டுள்ளது - அதற்கு காரணமான  மற்றொரு மூலகம் எது  -  என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

எந்த  மூலகத்தின் "உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  "எந்த மூலகப் புள்ளியில்" தடை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தடைகளை அகற்றும் வண்ணம், மெல்லிய   ஊசியினைச்  செலுத்தி  சிகிச்சை தருவது -  அல்லது  விரல்களால் அழுத்தம் தந்து முறைப்படி சிகிச்சையளிப்பது "அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர்"  சிகிச்சை  எனப்படும்.


உணவு - உடல்உழைப்பு -  உறக்கம் 

"உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  தடைகள் ஏற்பட்டு, உடல் நலத்தில் பிரச்சினை வந்த பிறகுதான் சிகிச்சை தர வேண்டுமா? உடல் நலக் குறைவு ஏற்படாமல், அதாவது "சக்தி ஒட்டப்பாதையில்" தடைகள் ஏற்படாவண்ணம்  பாதுகாத்துக்  கொள்ள இயலுமா?

நிச்சயமாக உண்டு. நமது முன்னோர்கள் நமக்கு நிறைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறார்கள். அவற்றில் பல - ஆசார அனுஷ்டானங்களாக இருக்கும் - அல்லது பக்தியோடு இணைந்த பழக்க வழக்கங்களாக இருக்கும். மற்றும் நிறைய குறிப்புகள் கலாச்சாரம் சார்ந்ததாக இருக்கும்.

பரபரப்பான இந்த வாழ்க்கையில் அவற்றை நாம் கிட்டத்தட்ட முழுவதுமாகவே தொலைத்து விட்டோம். புதிய கண்டுபிடிப்புகளால் நமக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது. ஆனால் கிடைக்கும்  நேரத்தை முறையாக பயன் படுத்துகிறோமா? உடல் உழைப்பு குறைவதோடு மட்டுமல்லாது, மன அழுத்தம் கூடும் வகையில் தான் நமது தினசரி வாழ்க்கைமுறை மாறிக்கொண்டிருக்கிறது.

காலத்திற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை தவற விடலாமா?

உணவு, உடல்உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நெறிப்படுத்தி முறைப்படுத்தினால் மட்டுமே நீடித்த ஆரோக்கியம் கிட்டும்.

எனினும் அவ்வப்போது, நாடிப்பரிசோதனை செய்துகொண்டு, எளிதான முறையில்,  மெல்லிய அழுத்தமாக  "அக்குபிரஷர்"  மட்டுமே தந்து  உடல் நலத்தை பாதுகாக்கலாம்.


                                                  " வருமுன் காப்போம்"





Monday, 21 April 2014

இரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.

இரைப்பை - அமைப்பு 


ஆங்கில எழுத்து "J" - இன்  வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும்  தன்மையுடையது இரைப்பை. நன்கு வளர்ந்த ஒருவரது இரைப்பையின் கொள்ளளவு மிகவும் சுருங்கிய - உணவு எடுத்துக்கொள்ளாத - நிலையில் சுமார் 50 மிலி- யாகவும்,  உணவு அருந்திய நிலையில்  கொள்ளளவு சுமார் 1500 மிலி - யாகவும் இருக்கும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்ட நிலையில் சுமார் 4000 மிலி அளவுவரை கூட விரியும் தன்மையுடையது.

"FUNDUS " எனப்படும் உதரவிதானத்தை ஒட்டிய (இடது பக்க) மேற்புடைப்பு
உடல் பகுதி
பைலோரிக் அறை
பைலோரிக் குழாய் பகுதி

     - என நான்கு பகுதிகளாக பிரித்து அறியப்படுகிறது - இரைப்பை.

இரைப்பையானது,  உட்புறச்சுவரான "ம்யூகோசா" உள்ளிட்ட நான்கு அடுக்கு தசைச்சுவர்களைக்கொண்டது. உணவுக்கேற்ப - இரைப்பைநீர், மற்றும் அமிலங்கள் சுரப்பதற்கு ஏற்பவும், உணவை அரைக்கவும்,  அரைக்கப்பட்ட உணவினை சிறுகுடலுக்குள் செலுத்துவதற்குமாக - அமைந்திருக்கும் மூன்று தனித்தன்மை  வாய்ந்த தசை அமைப்புகள், இரைப்பையின் சிறப்பாகும்.

கார்டியாக் திறப்பு எனும் சுருக்கு தசை இரைப்பையின் ஆரம்பமாக அமைந்திருப்பது போல், இரைப்பையின்  முடிவில் பைலோரிக் சுருக்கு தசை, சிறுகுடலின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

இரைப்பை - சுரப்புகள் - செயல்பாடுகள்


நாம் உண்ணும் உணவினை ஜீரணிக்க நாளொன்றுக்கு சுமார் 1.5 லிட்டர் இரைப்பை நீர் அல்லது ஜீரண நீர்  சுரக்கின்றது. ஜீரண நீரில் 99.5% நீரும்  0.5% நொதியங்களும் அடங்கியுள்ளன. உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட உணவுடன்  மேலும் ஜீரண நீர் கலந்து, ஒரு நல்ல கலவை இயந்திரம்  போல செயல்படுகிறது இரைப்பை. இரைப்பையின் கடைதல் ( churning ) போன்ற அசைவுகள்  உணவை  மேலும் சிறு துகள்களாகச் செய்கின்றன

ஜீரண நீரில் உள்ள ஹைடிரோகுளோரிக் அமிலம், மற்றொரு சுரப்பான "பெப்சினோஜென்" எனும்  நொதியத்தை "பெப்ஸின்" ஆக மாற்றுகிறது. பெப்ஸின் புரோட்டீன் எனும் புரதச் சத்தின் மீது வினை புரிந்து  ஜீரணிக்க வகை செய்கிறது.

கார்போஹைடிரேட் எனும் மாவுச் சத்து, மற்றும் கொழுப்புச் சத்துக்கள், சிறு குடலில்தான்  உறிஞ்சப்படுகின்றன. இரைப்பையில் தண்ணீர், மது மற்றும் சில இரசாயனங்கள், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்,  குறைந்த  அளவில் உறிஞ்சப்படுகின்றன.

Intrinsic factor - எனும் ஒரு சுரப்பு,  விட்டமின் B 12 சத்தினை குடல் உறிஞ்சுவதற்கு ஏற்ப வழி  வகுக்கிறது.

ஹைடிரோகுளோரிக் அமிலம் - உணவுடன் கலந்து வரும் சில கெட்ட நுண்ணுயிரிகளை  கொன்றுவிடுவதுமட்டுமல்லாமல், உடலுக்கு தீங்கு செய்யும் சில இரசாயனங்களை  செயலிழக்கச்செய்கிறது.

" கேஸ்டிரின் " - எனும் ஹார்மோன் சுரப்பு, இரைப்பை ஜீரணநீர் செவ்வனே சுரக்கச் செய்கிறது

உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட -  வாயிலிட்டு அரைக்கப்பட்ட உணவு, மேலும் கூழாக்கப்பட்டு,  பைலோரிக் திறப்பு மூலம் சிறிது சிறிதாக சிறு குடலுக்கு அனுப்பப்படுகிறது.

வயிற்றுப்பொருமல்- வயிறு உப்புசம் - ஏப்பம் - நெஞ்செரிச்சல்


பொதுவாக, உணவு அருந்திய பின் அளவாக ஏப்பம் வருவது இயற்கை. ஆனால், ஒரு சிலருக்கு,  வயிறு  உப்பிக்கொண்டு,  அதிக ஏப்பம் வருவது ஏன்?  - கொழுப்பு பதார்த்தங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வது  ஒரு முக்கிய காரணம்.  சோடா போன்ற கார்பனேட்டெட் பானங்கள் மற்றும் வாயுவை அதிகரிக்கச்செய்யும்  உணவு வகைகள் - அதிக ஏப்பம் வருவதற்கு மற்றொரு காரணம்

அவசர அவசரமாக சாப்பிடுவது - உணவை மெல்லாமல்  அப்படியே விழுங்குவது - பேசிக்கொண்டே  உணவு அருந்துவது, ஆகியவையும் காரணங்களாகும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்டு,  இரைப்பையை திணறச்செய்வது - மிக முக்கியமான  காரணம்.

இரைப்பையின் "பண்டஸ்" என்ற இடது பக்க மேல் புடைப்பு, நாம் ஒரு நேரத்தில் எவ்வளவு உணவு  எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கிறது. அந்த மெக்கானிசம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

இறைவன், ஒவ்வொருவருக்கும் அவரவரின் உடலமைப்புக்கு தகுந்தவாறே அணைத்து  உறுப்புக்களையும் தந்திருக்கிறார். கைகள், கால்கள், விரல்கள் மற்றும் யாவும் அவரவர் உடல் சிறப்பாக இயங்கும் வகையில்  கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அவரவர் கை அளவிற்கு அவரவர் உடம்பு எட்டு ஜாண் அளவு தான். சந்தேகமிருந்தால் அளந்து  பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு (இரைப்பை) ஒரு ஜாண் அளவு தான். வயிற்றின் கொள்ளளவு உடலின் தேவைக்கேற்ப டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

நாம் முறையாக உணவு அருந்தும்போது - அதிகமாக வாயுவை அதிகரிக்கச்செய்யாத வகையில் உணவினை தேர்ந்தெடுத்து  மற்றும் உதடுகளை மூடி, நன்றாக உமிழ்நீர் கலந்து சுவைத்து, மென்று உண்ணும் போது - இரைப்பையில் உணவு உடலின் தேவைக்கேற்ற  கொள்ளளவு அடைந்த  நிலையில் - இரைப்பையானது, இதற்கு மேலும் உணவு தனக்குள் வந்தால், தான் சிரமப்பட வேண்டியதிருக்கும்  என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, தான் விரிவடைவதை சற்று நிறுத்திக்கொண்டு,  "பண்டஸ்" பகுதியில்  இருக்கும் காற்றினை அதாவது வாயுவை ஏப்பமாக வாயின் வழியே வெளியேற்றுகிறது. அது ஒரு திருப்தியான ஏப்பமாக இருக்கும்.

அந்த ஏப்பத்தின் " அர்த்தம் " என்னவென்று புரிகிறதா?  "இதுதான் அளவு, இவ்வளவு தான் என் திறன்,  இதற்குமேல் என்னால் இயலாது, நிறுத்திக்கொள் இத்துடன் "  என்று நமக்கு உணர்த்துகிறது அந்த ஏப்பம்.  ஓரளவு நன்றாக உணவு அருந்திய நிலையில்  நமது உடல் நம்முடன் நடத்தும் உரையாடல் தான் அந்த  ஏப்பம் - வயிற்றின் மொழி. அதனைப் புரிந்து கொண்டு நாம் நடந்தால் வயிற்றுக்கு ஏது துன்பம்?

வயிறு துன்பப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம்,  சாப்பிடும் பொழுது - அல்லது சாப்பிட்ட  உடனே - அதிக நீர் அருந்துவது ஆகும்.

உணவுடன் தண்ணீர் எவ்வளவு அருந்தலாம்?


உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே நீர் அருந்துவதை நிறுத்தி விடுவது மிகவும்  நல்லது. அப்போதுதான் இரைப்பையில் சுரக்கப்படும் ஜீரணநீர் தரமானதாக இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும், உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதும் கூடாது. உணவு அருந்தி முடிந்த  பின்னரும் நிறைய நீர் அருந்துவதும், இரைப்பையின் செயலை முடக்கச் செய்து வயிறு உப்புசம் - அதிக  ஏப்பம் - ஆகியவற்றுக்கு காரணமாகின்றது.

உணவு அருந்தும் போது தாகம் எடுத்தால் என்ன செய்வது? தாகத்தை அலட்சியம் செயலாகாது. தண்ணீர்  குடித்தேயாக வேண்டும். ஆனால் - உணவை நன்றாக மென்று, நிறைய உமிழ்நீர் கலந்து நிதானமாக   விழுங்கும்போது தாகம் மற்றும் விக்கல் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

உணவு அருந்தி முடிந்த பின்னர் அதிக நீர் அருந்தினால், இரைப்பையின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு  ஜீரணக்குறைபாடு ஏற்படுகிறது. வயிறு உப்புசம் ஏற்படுகிறது. கூடவே எடுத்துக்கொண்ட உணவில் அதிக  கொழுப்பு பதார்த்தங்கள் இருக்குமேயனால், வயிற்றுப்பொருமல் ஏற்படுவதுடன் அதிக ஏப்பம் வரவும்  காரணமாகிறது.

உணவை நன்றாக மென்று, நன்கு உமிழ்நீர் கலந்து,  நிதானமாக, அளவாக உணவு அருந்தி முடித்திருக்கும்  பட்சத்தில், அரை டம்ளர் அல்லது அதற்கும் குறைவாகவே நீர்  அருந்தினால் போதுமானது.

நாம் அருந்திய உணவினை,  இரைப்பை நன்கு அரைத்து, சிறுகுடலில் நடைபெறவிருக்கும் ஜீரணத்திற்கு  தயார்ப்படுத்துவதற்கு, சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை கூட ஆகலாம். அந்த  ஜீரணம் நடைபெற்றுக்கொண்டிக்கும் நேரத்தில் நாம் அதிக தண்ணீர் அருந்துவோமேயானால்,  இரைப்பையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.

இரைப்பையில் ஜீரணம் நடந்து கொண்டிருக்கும்பொழுதில், இடையில் ஏதாவது காபி, டீ போன்ற  பானங்கள், அல்லது நொறுக்கு தீனி எடுப்போமேயானால், வயிறு மிகவும் குழம்பிய நிலையில், என்ன  செய்வது என்று தெரியாமல், சரியாகச் செயல்பட இயலாமால் ஆகிவிடும்.

பிறகென்ன? அனுபவிக்க வேண்டியது தான் !

நிறைய உணவு + அதிக தண்ணீர் = நெஞ்செரிச்சல்


இரைப்பையில் உணவு நிரம்பிய நிலையில் அதிக தண்ணீர் அருந்தினால் ஜீரணக்கோளாறு மட்டுமல்ல,  நெஞ்செரிச்சல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" என்னும் சுருக்கு  தசையினைத் தாண்டி உணவுக் குழாயினுள், இரைப்பையில் அரைகுறையாக அறிக்கப்பட்ட உணவுக்  குழம்பு எட்டிப் பார்க்கிறது. இந்த உணவுக் குழம்பி‌ல் இப்போது அமிலம் கலக்கப்பட்டிருக்கிறது.

இரைப்பையின் உட்புறச்சுவர், தான் சுரக்கும் அமிலத்தை தான் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது. எனவே அங்கு  பாதிப்பில்லை. ஆனால், உணவுக்குழாயின் உட்பக்கத்தில் உள்ள சளிச்சவ்வுப்படலம்  அமிலத்தின் அரிக்கும் தன்மையை, தாங்கிக்கொள்ள இயலாமல், பாழடைகிறது. இந்த நிகழ்வைத்தான்  நாம் நெஞ்செரிச்சலாக உணருகிறோம்.

நெஞ்செரிச்சல் - திரும்ப திரும்ப நிகழும்போது, அது முற்றினால் "ஹயாடல்  ஹெர்னியா" - மேலும்  முற்றினால் "கேன்சர்" உருவாகவும் வாய்ப்பு உண்டென்று சொல்லப்படுகிறது.

வயிறு முட்ட முட்ட " உணவு",  " குளிர் பானங்கள்", " உணவு அருந்திய பின் அதிக  தண்ணீர்" - என  எதுவாக இருந்தாலும், அனைத்தும் ஒரே பிரச்சினைக்குத்தான் காரணமாகிறது,  அது -  நெஞ்செரிச்சல்.

தண்ணீர் எப்போது அருந்தலாம்?


எப்போது தாகம் எடுத்தாலும்  அதை அலட்சியம் செய்தல் ஆகாது. கண்டிப்பாக நீர் அருந்தியே  ஆகவேண்டும் பொதுவாக, உணவு உட்கொண்ட பின், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இரைப்பைக்கு தண்ணீர்  தேவையானால், நமக்கு தாக உணர்வு வரும். அப்போது ஒரு டம்ளர் நீர் அருந்தலாம்.

இடையில் தாகம் எடுக்காதபட்சத்தில், உணவு உண்ட இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் கழித்து, அரைக்கப்பட்ட உணவு சிறு குடலுக்குள் செலுத்தப்படும் நேரத்தில், கண்டிப்பாக தாக உணர்வு வரும்.  அப்போது இரண்டு டம்ளர் வரை நீர் அருந்தலாம் - அருந்த வேண்டும்.

பொதுவாக இட்லி, இடியாப்பம் போன்ற அரிசிமாவினால் அவித்து சமைக்கப்பட்ட உணவு( அளவாக  உட்கொண்டிருக்கும் பட்சத்தில்) ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் இரைப்பையை கடந்து  விடக்கூடும். எண்ணெய் தடவி சுட்ட தோசை மற்றும் சப்பாத்தி ஜீரணமாக மேலும் அரைமணிநேரம்  அதிகமாகலாம்.  அரிசிசாதம், குழம்பு, காய்கனிக்கூட்டு என அமைந்த மதிய உணவு- காய்கனிகளின்  வேக்காட்டைப்பொருத்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கேட்கலாம். எண்ணெய் மற்றும்  டால்டா சேர்த்து சமைக்கப்பட்ட , சைவ அசைவ பிரியாணி வகைகள் மூன்று முதல் நான்கு மணி நேரம்  வரை கூட எடுத்துககொள்ளக்கூடும்.

நாம் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொண்டிருக்கிறோம்? அதனை இரைப்பை ஜீரணிக்க எவ்வளவு  நேரம் ஆகும்? - என்பதை ஒவ்வொருவரும் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, அறிந்து கொள்ள  வேண்டியது மிகவும் அவசியம்.

சில வகை உணவுடன் - சில உணவு வகைகள் அருந்தும் போது ஜீரணம் கெடுவதுடன் மொத்த  வயிற்றையும் பாதிக்கக்கூடும் என்பதால், ஒரே நேரத்தில் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய  உணவுப்பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பாக கவனம் தேவை. எந்தெந்த உணவுடன் எந்தெந்த உணவினை சேர்த்து அருந்தக்கூடாது என்பதை நாம் தனிப் பதிவாகப் பின்னர் பார்க்கலாம்.

எப்போதும் தண்ணீர் அருந்தும்போது,  அண்ணாந்த வாக்கில் மட மடவென குடித்துவிடலாகாது.  தண்ணீருக்கென்று ஒரு தனிச்சுவை உண்டு.  அதை நாவில் உணரவேண்டும். ஒவ்வொரு மிடறாக வாயில்  ஊற்றி, உதடுகளை மூடி,  தண்ணீரை நாவினால் சுவைத்து, உமிழ்நீர் கலந்துதான் அருந்த வேண்டும்.

இரவு உணவு


பகலில் பசியறிந்து உண்ணுதல் எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல் மிகவும் முக்கியம்.  இரவு தாமதமாக உண்ணப்படும் உணவின் கழிவுகள், காலையில்  வெளியேறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்பதால், பெருங்குடலில் மலக்கழிவுகள் தங்கிவிட  நேரிடுகிறது.  இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, பல பிரச்சினைகள் உருவாக ஏதுவாகின்றது.

சிறுகுடல்- பெருங்குடல்:


உணவை நன்றாக  மென்று  உண்ணுதல்
பசியறிந்து உண்ணுதல்
உண்ட உணவு ஜீரணமானதை அறிந்து அடுத்த வேளை உணவு உண்ணுதல்
இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல்
உணவுடன் அதிக தண்ணீர்  அருந்தாதிருத்தல்

       - என மேற்கூறிய அனைத்தையும் சரியாக கடைப்பிடிக்கும்போது, சிறுகுடல் மற்றும் பெருங்குடலின்  வேலைகள் எளிதாகின்றன. மேலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ஏற்படும் உந்துதல் உணர்வை மதித்து  நாம் நடப்போமேயானால் ஜீரணப்பாதையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

"வருமுன் காப்போம்"

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்"

"அக்குபஞ்சர் என்று தலைப்பு தந்துவிட்டு, வாய், உமிழ்நீர், உணவு ஜீரணம் - என்று போக ஆரம்பித்து  விட்டதே- அக்குபஞ்சரைப்பற்றி மேலும் எப்போது எழுத ஆரம்பிப்பதாக உத்தேசம்? " என்பது சில  நண்பர்களின் கேள்வி.

அக்குபஞ்சர் என்பது, உடல் நலப் பிரச்சினைகளை தீர்க்கும் சிகிச்சை முறை மட்டுமல்லாது, நோய்கள் நம்மை அண்டவிடா வண்ணம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும், அற்புத சிகிச்சை ஆகும். "வருமுன் காப்போம்" - என்பதே நமது அக்குபஞ்சர் சிகிச்சையின் நிச்சயமான நோக்கமும் ஆகும்.

அக்குபஞ்சர் தத்துவப்படி, இரைப்பை "நிலம்" மூலகத்தின் ஓர் உறுப்பாகச் சொல்லப்படுகிறது.  இரைப்பை எனும் "மண்ணில்" போடும்  "விதையாகிய உணவு" நமது உடம்புக்கு தேவையான "சத்து" ஆக விளைகிறது என்பது உண்மை.

பொதுவாக, நமது ஜீரண மண்டலம் சரியாக செயல் பட்டாலே அறுபது முதல் எழுபது சதவிகித நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனவே, ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகளைப்பற்றியும், அவை செயல்படும் முறைகளைப்பற்றியும், சிறிதளவாவது நாம் அறிந்திருக்க  வேண்டியது அவசியமாகிறது. ஜீரணம் பற்றிய மிகவும் ஆழ்ந்த அறிவு எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை - அது அவசியமுமில்லை. ஓரளவு மேலோட்ட மாகவாவது தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

உணவு அருந்திய பின்னர், அது - சக்கையாக வெளியேறும் வரை நடைபெறும் அனைத்தும், நாம் உணராத வகையில், தன்னாலே நடைபெறும் " தானியங்கி" செயல்களாகும். நமது உடலின் "தன்னைத் தானே  குணப்படுத்திக்கொள்ளும் அற்புத சக்தி" சிறு சிறு பிரச்சினைகளை தானே சரிசெய்துகொள்ளும்.  ஆனால்,  ஜீரண மண்டலத்தில் ஏற்படும் அநேக பிரச்சினைகள், பல நாட்கள் கழித்தே நாம் உணரக்கூடியதாக  இருக்கும்.

குறைந்தது சுமார் பத்து  வருடங்களுக்கு முன்னர் வரை, நமது இல்லங்களில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு "முறை" இருந்தது. ஆசார அனுஷ்டானங்கள் என்ற  பெயரில் நாம் கடைப்பிடித்த பல நடைமுறைகள் நல்ல  உடல்  ஆரோக்கியத்தையே  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அரிசிச்சாதம் ஓரளவு பொதுவாக இருந்தாலும், குழம்பு வகைகள் தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும். ஒருமுறை வைத்த குழம்பு திரும்பவும் எட்டிப்பார்க்க குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது  ஆகும்.

இரவில் நகம் வெட்டக்கூடாது, எண்ணெய் தேய்த்து குளித்த அன்று பகலில் தூங்கக்கூடாது, நொறுங்கத் தின்றால் நூறு வயசு, கூழானாலும் குளித்துக் கூடி,  கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கோயிலில்லா  ஊரில் குடியிருக்க வேண்டாம்  ...... இப்படி பல சொற்கள் - எப்போதும் வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவை அனைத்தும் சுத்தம், சுகாதாரம் - என உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் அனைத்தையும் அள்ளி அள்ளித் தரும் ஆலோசனைகளாகவே  இருக்கும்.

தற்போதுள்ள  பரபரப்பான  வாழ்க்கையில், அநேக இல்லங்களில் அத்தகைய ஆலோசனைகள், குடும்ப உறுப்பினர்களின் காதில் விழ வாய்ப்புகள் மிகவும் குறைவு. எந்த ஒரு சந்தேகம் என்றாலும், வலைத்தளத்தில் தேடவே நாம் முயற்சி செய்கின்றோம்.

வயிற்றின் முக்கியமான பிரச்சினைகளாகிய, வயிறு உப்புசம்  - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல் - ஆகிய பிரச்சினைகளை, உணவு இடைவேளை  மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை சரியான முறையில்   கடைப்பிடித்தாலே தவிர்த்து விடலாம் என்பது நிச்சயமான உண்மை.

எனவே, அடுத்து நாம் பார்க்கப்போகும் தலைப்பு - இரைப்பை.

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்" 

Monday, 14 April 2014

உணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்

உணவுக்குழாய்


நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும்  உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic movement)  வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது.

இரைப்பையின் ஆரம்பமாக அமைந்துள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" (cardiac sphincter) எனும் சுருக்கு தசை துளையில் முடிவடையும் உணவுக்குழாயின் நீளம் சுமார் 25 செ. மீட்டர்.

உணவு அருந்தாத நிலையில் ஓய்வாக இருக்கும் உணவுக்குழாய், உணவின் வருகையால் தூண்டப்பட்டு,  மேலிருந்து கீழாக, ஒரே சீராக, அலை அலையாக சுருங்கி விரியும் தன்மையால், உணவினை  வயிற்றுக்கு கொண்டு செல்கிறது.

இந்த இயக்கம் எளிதாக நடைபெற, உணவுக்குழாயின் உட்புறத்தில் சுரக்கும், "ம்யூகஸ்" என்னும்  சளித்திரவம் துணை புரிகின்றது.

விக்கல்


நாக்கினால் தொண்டைக்குள் அனுப்பப்படும் உணவு, உணவுக்குழாயினுள் நுழைந்த மறுகணம் ஏற்படும் தொந்திரவில் ஒன்று விக்கல். விக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஜீரண மண்டலம் சம்பந்தமான ஒன்றை மட்டும் நாம் இங்கே  பார்ப்போம்.

தொண்டையில், குரல்வளைப்பகுதியில் - மூச்சுக்குழலும், உணவுக்குழலும் பிரியும் இடத்தில், மூச்சுக்குழலுக்குள் உணவுத்துகள்கள் சென்றுவிடாமல் தேவைக்குத் தகுந்தாற்போல் திறந்து மூடும் தானியங்கி அமைப்பு "எபிகிளாடிஸ்" எனப்படும்.

நெஞ்சறை, மற்றும் வயிற்றறை - இரண்டையும் பிரிக்கும் தசைத்தட்டு "உதரவிதானம்" எனப்படுகிறது.

உணவு அருந்தும்போதும், நமது மூச்சு சீராக இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.  சுவாசம் சீராக நடைபெற,  நுரையீரல் சுருங்கி விரியும் வண்ணம் உதரவிதானம் ஏறி - இறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

உணவினை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது ""எபிகிளாடிஸ்" செய்யும் பணிக்கு எந்தவித  தொந்தரவும் இல்லை.

உணவினை சரியாக மெல்லாமல், உமிழ்நீர் கலக்காமல், அவசர அவசரமாக அல்லது பெரிய கவளமாக விழுங்கும்போது,  குரல்வளையின்  இயல்பான தானியங்கிச் செயல்பாடு சற்றே குளறுபடியாக நிகழும்

இந்நிலையில், மூச்சுக்குழலினுள்  உணவு சென்று விடாமல் பாதுகாக்கும் "அனிச்சை செயலாக" எபிகிளாடிஸ்  மூடிக்கொள்கிறது.

மூடிக்கொள்ளும் அதே வேளையில், உதரவிதானமானது -  மூச்சை உள்ளிளுக்க வேண்டி, நுரையீரலை விரியச்செய்யும்  முயற்சியாக - கீழிறங்க முற்பட  -  எபிகிளாடிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள  காற்றுத்தடையினால் விக்கல் சப்தம்  எழுகிறது.

இந்த விக்கல் ஆபத்தானதா?  இந்த விக்கலை எவ்வாறு நிறுத்துவது?

மேற்சொன்ன காரணத்தினால் ஏற்படும் விக்கல் - மூச்சை சற்று நிதானப்படுத்தி விடச் செய்தாலே நின்று  விடும்.

தண்ணீர் அருந்தினால் நின்று விடுகிறதே?  அது எப்படி?

தண்ணீர் அருந்தும் வேளையில், மூச்சு நிதானப்படுகிறது என்பதுதான் அங்கே உண்மை.

அதிர்ச்சி தரும் சிறு பயமுறுத்தல் கூட, மூச்சினை சற்று நிறுத்தி, நிதானப்படுத்துவதால், விக்கல்  நின்றுவிட ஏதுவாகிறது.

எந்தவித விக்கலானலும் -   இரண்டு  அல்லது மூன்று அக்குபஞ்சர் புள்ளிகளை  தூண்டுவதன்மூலம்  நிறுத்திவிட அதிக வாய்ப்பு உள்ளது.

உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது விக்கல் ஏன் வருகிறது?

வருமுன் காப்போம்.

நெஞ்செரிச்சல் - முற்றினால் - ஹையாடல் ஹெர்னியா


உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது "கார்டியாக் ஸ்பிங்க்டர்"  அல்லது  "LES" எனப்படும் "Lower Esophageal  Sphincter ".

உணவுக்குழாயின் இயக்கம்,  மேலிருந்து கீழாக, ஒருவழிப்பாதையாகவே நடைபெறுகிறது; என்றாலும் சில  நேரங்களில், நாம் செய்யும் தவறுகளால் - அத்துமீறல் நடைபெற ஏதுவாகிறது.

அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, உணவுக்குழாயில் மேலேற எத்தனிக்கிறது - மேலேறவும்  செய்கிறது.


மேலேறிய அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, அமிலக் கலப்புடன் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இரைப்பைக்கு உண்டு. ஆனால் உணவுக் குழாயின் உட்புறச்சுவரானது அமிலத்தை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு உறுதி வாய்ந்தது அல்ல.

அதன் மெல்லிய தசைச்சுவற்றின் உட்புற சளிச்சவ்வுப்படலம் அமிலத்தை தாங்கிக்கொள்ள இயலாமல், பாதிப்படைகிறது. அந்த பாதிப்பு நெஞ்செரிச்சலாக உணரப்படுகிறது.

ஒருவருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுமேயனால், உணவுக்குழாயின் கீழ்பகுதியான "L E S " பகுதியில் தசை சுவர்கள் பலமிழந்து, தளர்ந்த நிலையில் வீக்கம் ஏற்பட்டு,  முற்றுகிறது.

இந்நிலை "ஹயாடல் ஹெர்னியா" என்று சொல்லப்படுகிறது. இந்நிலையினை அடைந்தோருக்கு, மேலும் மேலும்  பிரச்சினை முற்றுமானால் அந்த இடத்தில் "கேன்சர்"  உருவாகவும் வாய்ப்பு உண்டு

ஆரம்ப நிலையிலேயே நெஞ்செரிச்சலை குணப்படுத்த அக்குபஞ்சர் மிகவும் பயன்படும்.

வருமுன் காப்போம்


Wednesday, 9 April 2014

வாய் - உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்

வயிற்றில் பாதி வாயில் 


உணவு ஜீரணம் என்று சொன்ன உடனே நமக்கு , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை தான் நினைவில் வரும் .  வாயினையும் ஒரு முக்கிய ஜீரண சக்தியுடைய உறுப்பாக பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

ஆனால் வாயினில் உணவினை நாம் மெல்லும்போது  நடைபெறும் நிகழ்வுகளை சற்று கவனித்தோமானால் "வயிற்றில் பாதி வாயில்" என்னும் கூற்றை அப்படியே ஆமோதிப்போம்.

உணவு ஜீரணம் என்பது வாயில் ஆரம்பித்து , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் நடைபெறும் ஒரு தொடர் நிகழ்வாக அமைகிறது

பற்கள்  


நமது வயிறு வெறும் தசைகளாலானது என்பதை நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வாயிலிட்ட உணவை மெல்லாமல் அப்படியே விழுங்கினால் என்ன ஆகும்?

பற்களின் உபயோகம்தான் என்ன?

வெட்டும்  பற்கள், கிழிக்கும் பற்கள் மற்றும் அரைக்கும் பற்கள் என முப்பத்து இரண்டு பற்களை  - இறைவன் எதற்காக தந்திருக்கிறார்?

தாடையில் வேர்விட்டு வளரும் பல்லின் வெளிப்புறம் எனாமல் எனப்படும்  கடினமான பூச்சாக அமைகிறது.   எனாமல் நமது உடலிலேயே மிக கடினமான திசு ஆகும்.

மிக  கடினமான உணவுப்பொருட்களையும் அரைத்து தருவதன் மூலம்,  வயிறு  உணவை ஜீரணிக்க பற்கள் மிகவும் உதவுகின்றன.
 
அவசரமாக மெல்லாமல் உண்ணும் உணவு, அதிக அமிலச்சுரப்புக்கு காரணமாக அமைந்து, வயிற்றை மிகவும் கெடுக்கிறது.

குறைந்தது பத்திலிருந்து பதினைந்து முறையாவது, உணவை கடித்து மென்று கூழாக்கி உண்ணுவது அவசியம்.

"நொறுங்கத்தின்றால்  நூறு வயது "  என்று  நமது முன்னோர்கள் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை என்பதை, அதை கடைப்பிடித்தவர் நன்கு அறிவர்.


 நாக்கு 

உணவை  நாம் வாயில் இட்டதும்,  அதன் முதல் ஸ்பரிசம் நாக்குடன்தான்.  உணவினை பற்களால் மெல்லுவதற்கேற்ப, நாக்கின்   அசைவுகள் - பற்களுக்கு  இடையில் சிக்கிக்கொள்ளாமல்  - மிகவும் லாவகமானவை.

 அடிநாக்கின் அலைபோன்ற அசைவின் உதவியினால் தான் உணவை விழுங்க முடியும்.

.நாக்கில் அமையப்பெற்ற சுவையரும்புகள், நாம் நமது உணவினை தேர்ந்தெடுத்து உண்ண உதவுகின்றன. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் நாக்கில் அமைந்துள்ள சுவை அரும்புகள் தன்மீது படும் உணவின் சுவையை அறிந்த கணமே - உணவின்  தன்மை, அதில் உள்ள சத்துக்கள், மற்றும் ஜீரணிக்க தேவையான இதர விஷயங்கள் பற்றிய தகவல்களை வயிற்றுக்கு - மூளை மூலமாக தந்தியடிக்கின்றன  என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

 இந்த இடத்தில் மூக்கின் வாசனை அறியும் திறனும் சேர்ந்து செயல்பட்டு வயிற்றுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

எந்தவிதமான  உணவு தன்னிடம் வந்தடைய இருக்கின்றது  - எந்த விதமான நொதியங்களைச் சுரக்கவேண்டும் - எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்,  என வயிறு தீர்மானிக்க,  நாக்கு  அனுப்பும் சமிக்ஞைகள் உதவுகின்றன.

முறையாக சுவைக்காமல், அவசரமாக விழுங்கப்படும் உணவு, முழுமையாக ஜீரணிக்கப்படாது என்பது உண்மை.


உமிழ்நீர்

 
வாய் என்றதும் பற்கள் , நாக்கு தவிர நாம் நினைவில் கொள்ள வேண்டியது உமிழ்நீர் சுரப்பிகள்  தாம்.

வயது வந்த ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு- மூன்று வேளையும் உணவருந்தும்போது - சுமார் 1500 மிலி அளவுக்கு உமிழ்நீர் சுரப்பதாக  கணக்கிடப்பட்டிருக்கின்றது.  உமிழ்நீரில் 99.5% நீரும் 0.5% கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் மற்றும் நொதியங்களும் அடங்கியுள்ளன.

பற்களால் நான்கு அரைக்கப்பட்ட உணவில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருளை,   உமிழ்நீரின் - அமிலேஸ்('salivary amylase') எனும் முக்கிய நொதியமானது,  டெக்ஸ்ட்றின்  மற்றும் மால்டோஸ் ஆக மாற்றுவதன் மூலம் ஜீரணம் வாயிலேயே ஆரம்பிக்கிறது - மேலும் இதன் தொடர்ச்சி வயிற்றில் நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமே உமிழ்நீரில் இருக்கக்கூடிய "மால்டேஸ்"  என்னும்  நொதியமானது "மால்டோஸ்"-ஐ  குளுக்கோசாக, அதாவது சர்க்கரையாக மாற்றுகிறது.

இதன்  மூலம்  வயிற்றில்  தரமான  நொதியங்கள் சுரக்க வழி  வகுக்கிறது  - விளைவாக -  கணையத்திலிருந்து  சுரக்கும் இன்சுலின் ஒத்துக்கொள்ளக் கூடிய பக்குவத்தில் குளுக்கோஸ் தயாராவதால் - நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் ஏற்படுவது தவிர்க்கப்பட ஏதுவாகிறது.

சர்க்கரை நோயின்  ஆரம்ப கட்ட பாதிப்பில் இருப்பவர்கள்  - சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்து, முறையான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுவதுடன் - நன்றாக மென்று சாப்பிடும் முறையை கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களின் சர்க்கரை  நோய் குணமாகக்கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
 
"லிங்குவல் லைபேஸ்" எனப்படும் உமிழ்நீரிலுள்ள ஓர் நொதியமானது , நாம் உண்ணும் உணவிலுள்ள "பால்மக் கொழுப்பின்"  மீது  (pre-emulsified fats) வினை  புரிந்து கொழுப்பு  ஜீரணத்திற்கு உதவி  செய்கிறது.

இதன் காரணமாக - கோலஸ்டரால் - பிரச்சினை வராமல் இருக்கவும், தேவைக்கு அதிகமாக எடை கூடாத வகையில், உடலை பேணவும், நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

உணவை வாயில் அரைத்து சுவைக்கும்போதே உமிழ்நீரில் உள்ள "லைஸோஸைம்" எனும் நொதியம் உணவில்  கலந்திருக்கக்கூடிய சில கெட்ட  பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.

உமிழ் நீருக்கு இத்தனை சிறப்பா? உமிழ் நீரினை  நாம்  ஏன்  "உயிர்நீர்"  என்று சொல்லக்கூடாது?

டான்சில்
 
நாக்கைதாண்டி தொண்டையில் நுழைய எத்தணிக்கும் ஒரு சில  கெட்ட  பாக்டீரியக்களை தொண்டையினுள் இருபுறமும் துவாரபாலகர்களைப்போல  அமைந்திருக்கும் டான்சில்கள் துவம்சம் செய்துவிடும்.

உணவை, மெல்ல, நிதானமாக சிறிது சிறிதாக  அரைத்து விழுங்கும்போது, டான்சில்களில் சுரக்கும் உடலின் பாதுகாப்புப்படை வீரர்களான ,  நோய்யெதிர்ப்புசக்திமிகுந்த , பலவித வெள்ளை அணுக்கள் , உணவில் உள்ள கெட்ட பாக்டீரியக்களை கொன்றுவிடுகின்றன.  (இதையும் தாண்டி வயிற்றுக்குள் செல்லும் சில  கெட்ட கிருமிகளை வயிற்றில் சுரக்கும் அமிலம் கவனித்துக்கொள்ளும்.)

இத்தனை பாதுகாப்பு செயல்பாடுகள் இருந்தும் டான்சில்களில் கிருமிதொற்று ஏன் ஏற்படுகிறது?  உணவினை  நன்றாக உமிழ்நீர்  கலந்து, மென்று சாப்பிடாததாலும், நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் காரணத்தினாலும், அளவுக்கு அதிகமாக கிருமித்தொற்று ஏற்படும் வகையில் நாம் உணவை தேர்ந்தெடுப்பதினாலும்தான்.
 
உணவை அள்ளி அள்ளி வாயினுள் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கினால்  பிரச்சினைதான்.


அகத்தின் அழகு வாயிலும் தெரியும் 

வாயினுள், நாக்கில், மற்றும் உதடுகளில் ஏற்படும்  சில புண்கள்,  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை உணர்த்தும் "குறிகள் " ஆகின்றன.

 நமது முறையற்ற உணவுப்பழக்கங்களினால் இரைப்பையில்  ஏற்படும் அதிக அமிலச்சுரப்பு - உதடுகளில் உண்டாகும் புண்கள், மற்றும் உதடுகளில் தோல் உரிதல் போன்றவைகளுக்கு   ஒரு  முக்கியமான காரணமாக அமைகிறது.

தவிர, நாக்கில்  புண்கள் ஏற்படுவதற்கு - உணவில் சத்துக்குறைபாடு, தூக்கமின்மை,  மற்றும் மன அழுத்தம் போன்றவை காரணங்களாகின்றன.

காய்கனிகள், மற்றும் உணவுப்பொருட்களின்   மீது  ஒட்டியிருக்கும் செயற்கையான பூச்சி  கொல்லி  மருந்துகளை, சரியான முறையில் சுத்தம் செய்யாமல் சமையலுக்கு பயன்படுத்துவது,  தொண்டையில் புண்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகிறது.


ஆரோக்கியம்  -  ஆரம்பம். 

           -  சிறந்த உணவு வகைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து
           -  சிறு சிறு கவளங்களாக வாயிலிட்டு
           -  நன்றாக பற்களால் அரைத்து  
           -  தாராளமாக உமிழ்நீர் கலந்து
           -  நாக்கினால் நன்கு சுவைத்து

            - சிறிது சிறிதாக உணவை உண்ணும் முறையினை நாம் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில்
   
                                           ஆரோக்கியம் ஆரம்பம்.



Monday, 7 April 2014

அக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை

நோய்க்காரணிகள்  

 

அக்குபஞ்சர் தத்துவப்படி,   நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே நோய் தோன்றுகிறது.

              -  நமது முறையற்ற உணவுப் பழக்க  வழக்கங்கள்
              - அளவான உடல் உழைப்பு, அல்லது உடற்பயிற்சி இன்மை
              -  போதுமான அளவு உறக்கமின்மை

ஆகிய காரணங்களால்,  பஞ்சபூதங்களின் செயல்திறன்‌ பாதிக்கப்படுவதனால், நமது உடலில் நோய் தோன்றுகிறது.


மேலும்
              - குளிர்
              - வெப்பம்
              - அதிக வெப்பம்
              - காற்று
              - ஈரப்பதம்
              - மிகவும் உலர்ந்த தன்மை

ஆகிய சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்களும் காரணமாகின்றன.

இவை தவிர

              -  கோபம்
              -  துக்கம்
              -  ஆழ்ந்த சிந்தனை
              -  கவலை
              -  ஆவல்/பதட்டம்
              -  பயம்
              -  சந்தோஷம்

ஆகிய ஏழு வகை உணர்ச்சிகள் ,  அளவுக்கு அதிகமாக மனதை ஆக்கிரமிக்கும்போது, உடலின் சக்தி ஒட்டப்பாதையில் குறுக்கீடு ஏற்பட்டு, நோய் ஏற்படுகிறது.

தவிர,

              - கீழே விழுதல்
              -  விபத்து

போன்ற காரணங்களும் உண்டு.


"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " 


மேற்கூறிய பல காரணங்களால்,  நமது உடலின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் செயல்திறன் கெடுகிறது.

 நமது உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும்  தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான  காற்றை சுவாசிக்கிறது,  மற்றும்  உணவு எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம்.

வாயு,  திரவ மற்றும் திட தாதுக்களின்  "சக்தி கிரியை" ஒவ்வொரு "செல்"லுக்குள்ளும்  முடிவடைந்த நிலையில் - கழிவுகள் "செல்" லிலிருந்து நீக்கப்படுகின்றன.

"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " இவ்விரண்டு செயல்களும் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கையில் உடல் நலத்திற்குப்  எவ்விதப் பங்கமுமில்லை.  இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் வலி, வீக்கம் மற்றும் நோய்க்குறிகளாக அறியப்படுகின்றன.

 கழிவுகளின் தேக்கமே அநேக நோய்கள்  ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகிறது.

தும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு - ஆகியவை ஏற்படும்போது, அதற்கான காரணத்தை நாம் அறிய முற்படவேண்டும்.  அவை  நமது உடலில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நிகழ்க்கூடிய  இயற்கையான கழிவு நீக்கச்செயலாக இருக்கலாம்.

உடலுக்கு தேவையில்லாத, ஒவ்வாத ஒன்றினை, வெளியேற்றும் செயல்களே தும்மல், இருமல் முதலியன.

நமது உடலின் - தன்னை தானே சரி செய்து குணப்படுத்திக்கொள்ளும் அற்புத ஆற்றல் அது.  அது பெரும்பாலும், உடலின் பஞ்ச மூலக சமன்பாடு சீர் குலையாமல் பாதுகாப்பதன் பொருட்டு  நிகழும் அனிச்சைச் செயலாகவே இருக்கும்.

பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிவதோடு, இயல்பான கழிவு நீக்கம் நடைபெறும் வகையில் நமது செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், ஒருவர் - தனது உடலைப்பற்றியும் , அதன் செயல்பாடுகளைப்  பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது.

தேவையில்லாமல் - கழிவு நீக்கத்தை நிறுத்த முற்படும்போது - கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உடலில் பிரச்சினை  மேலும் முற்றுகிறது.



அக்குபஞ்சரின் சிறப்பு  - நாடிப்பரிசோதனை

 

உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை  - பஞ்சமூலகங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக கைநாடி மூலம் உணரப்படுவது அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனையின் சிறப்பு.


ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், நோயாளியை நாடிப்பரிசோதனை செய்கிறார். அதன்மூலம், நோயாளியின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அறிந்து கொள்கிறார்.

நமது உடலை இயக்கும் பஞ்சபூதங்களின் சுழற்சி , மற்றும் செயல்பாட்டினை அவன் நன்கு அறிந்தவராதலால்  அவரால் கைநாடி மூலம் எளிதில் பிரச்சினையை அறிய முடிகிறது.

அளவுக்கு அதிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் , அல்லது செயலிழந்து கொண்டிருக்கும் மூலகத்தை  அறிகிறார்.

தேவைப்பட்டால்,  நோய்வாய்ப்பட்டவரிடம்,  சிறு விசாரணை செய்து நோயின் தன்மையை அறிந்து கொள்கிறார்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது, சில அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை "வலி" யாக உணர்த்தும். அந்த புள்ளிகளில் இலேசாக அழுத்தம் தந்து,  நோயின் தன்மை அறியப்படுகிறது.

நோயின் மூல  காரணம் உடலிலா அல்லது, மனதிலா  என்பதை அறிந்து  அதற்கேற்ப சிகிச்சை தருகிறார்.

நமது உடலில் இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சபூதசக்தி ஒட்டப்பாதைகளில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் சிகிச்சை தரப்படுகிறது.

அது, உடலுக்கும் உள்ளத்திற்கும்  - ஒரே நேரத்தில் தரப்படும் சிகிச்சையாக அமைகிறது.

இது மட்டும் போதுமா?


வருமுன் காக்கும் வழி உண்டா? 

 

திரும்பவும் அதேபோல் அதே பிரச்சினை நோய்வாய்பட்டவருக்கு வர வாய்ப்பில்லையா?

நின்ற வண்டியை அவ்வப்போது உந்தி  தள்ளி விட்டு உதவி செய்யலாம். வருடம் முழுவதும்,  வாழ்க்கை முழுவதும்  தள்ளிவிட்டுக்கொண்டு கூடவே ஓடத்தேவையா?

இந்த இடத்தில் நோயாளியின் பங்கு  நிச்சயம் தேவை.

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது வெறுமனே உடலில் ஊசிகள் செலுத்துவது, அல்லது கைவிரல்களால் அழுத்தி குணம் தருவது மட்டுமல்ல.

தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து விடுபடத்தேவையான ஆலோசனைகள், மற்றும் மீண்டும் அதே  பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான உபாயங்களை சொல்லித்தருவது ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்.

ஒருவரின் தினசரி நடவடிக்கைகளில், எங்கே  தவறு ஏற்பட்டுள்ளது - அதை எப்படி சரிசெய்யலாம் - என்னும் ஆலோசனைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.

இதன்  மூலம் - நோய் வருமுன், நம்மை நாமே  பாதுகாத்துக்கொள்வோம்  - என்ற சொல்லை முன் வைக்கிறார். சிகிச்சையாளர்.

பிரச்சினையின் மூல காரணம் என்னவென்பதை எடுத்துச் சொல்லி, மீண்டும், மீண்டும் நோய்வாய்ப்படாமலிருக்க, நமது உடல், மற்றும் உடலின் செயல்பாடுகள் பற்றிய  சிறு சிறு விளக்கங்கள் தருகிறார்.

உணவு, உடல் உழைப்பு, உறக்கம் - இம்மூன்று விஷயத்திலும்  கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள் நிச்சயம் தரப்படுகிறது.

கூடவே -  அக்குபஞ்சரின்  நாடி சமன் செய்தல் சிறப்பு சிகிச்சை தருவதினால் , ஒருவரின்  நோய் எதிர்ப்பு சக்தி தூண்டி விடப்படுகிறது.

அவ்வப்போது ,  முன்னெச்சரிக்கையாக  அக்குபஞ்சர்  சிகிச்சை எடுத்துக்கொள்வது  மட்டுமல்லாமல் - கூடவே - ஒருவர்  உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடுடன் கூடிய  நடைமுறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் போது - நோய் என்பது எட்டிப்பார்க்கக்கூட வழியில்லை.


உடல், உள்ளம்  

 

 உடல், உள்ளம் - இவை இரண்டின் ஆரோக்கியம் முழுமையாக பாதுகாக்கப்பட்டால் மட்டுமே,  நமது உயிர் எனும் ஆத்மா எடுத்துக்கொண்டுள்ள  பிறவிக்குரிய  கடமையை சரியாகச் செய்ய இயலும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உடலின் உள்ளுறுப்புகளுக்கும், நேரடித்தொடர்பு  உள்ளது நாம் அறிந்ததுதான். உடலின் உபாதைகள் - உள்ளத்தைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வடைந்த உள்ளம் காரணமாக உடலில் உபாதைகள் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அடிக்கடி தேவைல்லாமல் கோபத்திற்கு ஆளாகுபவரின்  கல்லீரலின் செயல்திறன் குன்றிப்போகிறது.

சகிப்புத்தன்மை இன்றி "எரிச்சல்" உணர்ச்சி  மிகுந்தோரின் வயிறு புண்ணாகிப்போகிறது.

பய உணர்ச்சி மிகுந்தவர்களின் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட மறுக்கின்றன.

காரணம் என்ன? - நாம் மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சி அலைகளுக்கும், பதில் விளைவு  தரும் வகையில்  நமது உடலில் அமைந்துள்ள ,   நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் "ஹார்மோன்" எனப்படும் "இயக்குநீர்" - மற்றும் நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "என்ஸைம்" எனப்படும் நொதியங்கள் செய்யும் அதிகப்படியான வேலைதான்.

எதற்கும் அதிக உணர்ச்சிவயப்படாமல் மனநலம் காப்பதுதான் நோயற்ற வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளம். 

உடல் நலமும் உள்ளத்தின் நலமும் சிறந்து விளங்க.  பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்களின் "எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்" எனற திரைப்படப்பாடலின் ஒற்றை  வரியின்  உண்மையை உணர்ந்து கொண்டாலே போதும்.

ஒரே நேரத்தில் உடல், உள்ளம் - இவை இரண்டிற்குமான எளிய, விரைவான, முழுமையான சிகிச்சை அக்குபஞ்சர் / அக்குபிரஷர் என்றால் அது மிகையல்ல.

 அக்குபஞ்சர்  -  வருமுன் காப்போம் வாழ்க்கை முறை